Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 9)
ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்
நல்ல மார்க்கத்திலிருந்து சற்றே தவறிய பாகவதர்களை நிந்திக்கக்கூடாது
மூலம் – நம் தர்சனத்திலே நிலையுடையராய் முமுக்ஷுக்களாய் கர்ம ஞான பக்தி ப்ரபத்திகளில் ஏதேனும் ஒரு சாஸ்த்ரீய மர்யாதையாலே பகவத் ப்ரவணரானார்க்கு யதமாநஸம்ஜ்ஞாத்யவஸ்தைகளிலே அர்த்தஸங்காதிகளாகிற சில வ்யாதிகள் நிச்சேஷமாக சமியாதமட்டைக் கொண்டு இவர்கள் ப்ராக்ருதரைப் போலே அஸம்பாஷ்யரென்று சில வைராக்யமாத்ர ப்ரதாநர்கள் சொல்லுவார்கள். இதுவும் பகவச்சாஸ்த்ராதிகளில் கிந்நவ்ருத்யாதி ப்ரகரணங்களாலே பரிஹார்யம். டம்பி ஹைதுக பாஷண்டி பகவ்ருத்தீச்ச வர்ஜயேத் யே து ஸாமாந்ய பாவேந மந்யந்தே புருஷோத்தமம் தே வை பாஷண்டிநோ ஜ்ஞேயா: ஸர்வகர்ம பஹிஷ்க்ருதா: பும்ஸாம் ஜடாபரண மௌண்டயவதாம் வ்ருதைவ இத்யாதிகளிற்படியே வழி தப்பினார் பக்கல் சொல்லும் வார்த்தையை நல்வழியில் அடி தடுமாறினார் பக்கல் சொல்லலாகாதிறே.
– நம்முடைய எம்பெருமானார் ஸித்தாந்தத்தில் மிகவும் உறுதி உள்ளவர்களாக, மோக்ஷத்தின் பொருட்டு கர்மம் – பக்தி – ஞானம் – ப்ரபத்தி முதலான சாஸ்த்ரங்கள் விதித்துள்ள மார்க்கங்களில் மிகவும் விருப்பம் கொண்டு ஸர்வேச்வரனை மட்டுமே எப்போதும் சிந்தித்தபடி உள்ளவர்களாக இருப்பவர்களில் ஒரு சிலர், யதமாந ஸம்ஜ்ஞை முதலான ஜ்ஞானயோக நிஷ்டைகளில் முதல் நிலையில் இருக்கக்கூடும். இவர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக பொருள் தேடுதல் முதலான செயல்களில் ஈடுபடுவதால், காமம் முதலான அற்பமான நிலைகளில் இருத்தல்கூடும். இவர்களுடன் பேசுதல் கூடாது என்று வைராக்யத்தை மட்டுமே முக்கியமாகக் கொண்டவர்கள் கூறலாம். இவ்விதம் கூறுவது சரியல்ல. தங்களுடைய வாழ்க்கைக்கு ஏற்ற பொருள் கிட்டாமல் திரியும் தரித்ரர்களை அவமதிப்பது கூடாது; அவர்கள் மூலமாகவே இந்த உலகைத் தூய்மை செய்கிறான் என்று ஸ்ரீபாஞ்சராத்ரம் கூறுகிறது. மேலும் கீழே உள்ள வரிகளின்படி, தீய மார்க்கங்களில் செல்பவர்கள் குறித்து கூறப்படும் சொற்களை, நல்ல வழியில் சென்று சற்றே தடுமாறியவர்கள் விஷயத்தில் கூறுவது சரியல்ல: யாஜ்ஞ்யவல்க்ய ஸ்ம்ருதி (1-130) - டம்பி ஹைதுக பாஷண்டி பகவ்ருத்தீச்ச வர்ஜயேத் – தங்களைக் காண்பவர்கள் கொண்டாடவேண்டும் என்று தர்மகார்யங்கள் செய்பவர், ஹைதுகர்கள், பாஷண்டிகள், கொக்கு போன்று எப்போதும் இரைக்காகக் காத்துள்ளவர்கள் முதலானவர்களிடமிருந்து எதுவும் பெறுதல் கூடாது. யே து ஸாமாந்ய பாவேந மந்யந்தே புருஷோத்தமம் தே வை பாஷண்டிநோ ஜ்ஞேயா: ஸர்வகர்ம பஹிஷ்க்ருதா: - புருஷோத்தமனாகிய ஸர்வேச்வரனை மற்ற தெய்வங்களுடன் சமமாக எண்ணுபவர்கள் பாஷண்டிகள் ஆவர்; அவர்கள் அனைத்து கர்மங்களிலிருந்தும் விலக்கப்பட்டவர் ஆவர். ஸ்ரீவிஷ்ணுபுராணம் (3-18-105) - பும்ஸாம் ஜடாபரண மௌண்டயவதாம் வ்ருதைவ – ஜடை என்னும் ஆபரணம் அல்லது மொட்டைத் தலை ஆகியவை உள்ளவர்களால் பகவத் ஆராதனம் போன்றவற்றைச் செய்யாமல் உண்பவர்களுடன் பேசினால் நாசம் அடைவர்.