Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 6)

ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்

ஈச்வரன் அளிக்கும் துக்கமும் ப்ரபந்நனுக்கு நன்மையையே அளிக்கும்

மூலம் – ஒரு வ்யாதி விசேஷத்தை உண்டோ என்று ராஜா கேட்க, அவரும் ஓர் உபாத்யாயர் உண்டென்று பட்டர் அருளிச்செய்தார். ஆயுஸ்ஸு வளர்க்கவொண்ணாதபடி நியதாயுஸ்ஸானவனுக்கு உள்ளத்தில் உத்வேகம் பிறக்கைக்காகவும், அநியதாயுஸ்ஸுக்களுக்கு ஆயுஷ்காமீயங்களையிட்டு வளர்க்க நினையாமைக்குமாக துக்காதிகள் இவனுக்கு உபாத்யாயர்கள். இது ஆழ்வானுள்ளிட்டார் பக்கலிலே ப்ரஸித்தம். அபசாரங்களையும் தத்பலங்களையும் சிலர்க்குக் காட்டி மறைக்கிற இதுவும் “பாம்போடு ஒரு கூரையிலே பயின்றார்போல் தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா” என்று நிர்வேதபூர்த்தியைக் கடுகப் பிறப்பித்துத் தானிசைந்த ஸம்ஸார நிவர்த்தனத்தைக் கடுக இவனையும் இசைவிக்கைக்காகவத்தனை. இவ்விடத்தில் ப்ரதிகூலாநுபவாம்சம் துஷ்கர்ம பலம். இது சிக்ஷணமாகிறதுவும் ப்ராயச்சித்தத்திலே மூட்டுகிறதுவும் உபாய பலம். இவற்றில் சிக்ஷணாதிகள் ப்ராரப்த ஸுக்ருதவிசேஷ பலமாயும் வரும். ப்ராணார்த்தியாய் விழுந்த காகத்துக்குப் ப்ராணன் கொடுக்கையாலே அங்கும் ப்ரபத்தி பலம் பூர்ணம். துஷ்ப்ரக்ருதியான இக்காகத்துக்கு சிக்ஷையாக ஒரு கண்ணை வாங்கிவிட்டதுவும் நிக்ரஹமன்று; அநுக்ரஹ விசேஷம்.

– ஸ்வாமி பராசரபட்டரை நோக்கி ஒரு ராஜா ஒரு பிணியைக் குறித்து உரைத்து, அந்தப் பிணி பட்டருக்கும் உண்டோ என்று கேட்டார். அதற்கு பட்டர் தனக்கும் ஆசிரியன் உண்டு என்றார் (இங்கு ஆசிரியன் என்று பட்டர் உரைத்தது துன்பத்தையே ஆகும். துன்பம் எவ்விதம் ஆசிரியன் ஆகும்? பொதுவாக மனிதர்கள் நியதாயுஸ்ஸுக்கள், அநியதாயுஸ்ஸுக்கள் என்று இரண்டு விதமாக உள்ளனர். நியதாயுஸ்ஸுக்கள் என்பவர்கள் ஹோமம் முதலியவை செய்தாலும் “இவர்களுடைய ஆயுள் இத்தனை காலம் மட்டுமே” என்று ஸர்வேச்வரனால் முடிவு செய்யப்பட்டவர்கள் ஆவர். அநியதாயுஸ்ஸுக்கள் என்பவர்கள் ஹோமம் முதலியவற்றைச் செய்து, அதனால் “இவர்களுடைய ஆயுள் இத்தனை காலம் மட்டுமே” என்று ஸர்வேச்வரனால் முடிவு செய்யப்படாதவர்கள் ஆவர். இவர்களில் நியதாயுஸ்ஸுக்களுக்கு துன்பங்கள் வந்தால், தங்களுடைய வாழ்வின் மீது பற்றுதல் இல்லாத மனநிலை உண்டாகி, மோக்ஷத்தை எண்ணத் தொடங்குவர்; அநியதாயுஸ்ஸுக்களுக்கு துன்பம் வந்தால் ஹோமம் முதலானவற்றைச் செய்து தங்களுடைய ஆயுளை நீட்டிக்க முயலமாட்டார்கள். இப்படியாக இவர்கள் இருவருக்கும் துன்பம் என்பதே இவர்களைத் திருத்தவல்ல சரியான ஆசிரியனாகும். இதனை ஸ்வாமி கூரத்தாழ்வான் முதலானவர்களின் வாழ்வில் காணலாம் (தனது கண்ணை இழந்தபோதிலும், மீண்டும் கண்ணை வேண்டாமல், அகக்கண் மூலமே ஸர்வேச்வரனைத் தரிசித்து வந்தார்). ஒரு சில ப்ரபந்நர்கள் அறிந்துகொண்டே சில தவறுகளைச் செய்யக்கூடும்; பின்னர் அதற்கான ப்ராயச்சித்தம் செய்வர்; இவ்விதம் துன்பம் அளிப்பது மறைமுகமாக திருத்தவே ஆகும். அவர்களுக்கு தான் அளிக்க விரும்பிய மோக்ஷத்தை விரைவாகக் கொடுக்கும் பொருட்டு, பெரியதிருமொழி (11-8-3) - பாம்போடு ஒரு கூரையிலே பயின்றார்போல் தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா – தாமரை போன்ற கண்கள் கொண்டவனே! இந்த ஸம்ஸாரத்தில் வசித்தல் என்பது பாம்புடன் ஒரே வீட்டில் வசிப்பது போன்று மிகவும் பயங்கரமாக உள்ளதைக் கண்டு எனது மனம் தடுமாறுகிறது – என்று கூறுவதற்கு ஏற்ப, அவர்களை இந்த ஸம்ஸாரத்திலிருந்து வெளியேறும்படியாகச் செய்வதற்காகவே துன்பங்களை உண்டாக்குகிறான். இங்கு துக்கத்தை அனுபவித்தல் என்பது பூர்வஜன்ம கர்மபலன்களால் ஆகும். அதற்கான தண்டனையாக உள்ள பிராயச்சித்தம் முதலானவற்றில் ஈடுபடுத்துதல் என்பது ப்ரபத்தியின் பலனாகும். இவற்றில் ஒரு சில தண்டனைகள், பூர்வஜன்மத்தில் செய்யப்பட்டு, இப்போது பலன் தரத் தொடங்கிய புண்ணியங்களாலும் ஆகும்.தன்னுடைய உயிரின் மீது ஆசை கொண்டு இராமனிடம் சரணம் புகுந்த காக்கைக்கு மீண்டும் உயிர் அளித்ததால், ப்ரபத்தியின் பலன் அங்கு வெளிப்பட்டது. அந்தக் காக்கையின் நடத்தை காரணமாக அதன் ஒரு கண்ணைப் பறித்தது என்பது தண்டனை என்று கூற இயலாது; மீண்டும் தவறு செய்யாமல் இருக்கும் பொருட்டு செய்யப்பட்ட அனுக்ரஹம் என்றே ஆகிறது.