Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 5)
ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்
ஈச்வரன் அளிக்கும் துக்கமும் ப்ரபந்நனுக்கு நன்மையையே அளிக்கும்
மூலம் – இதுக்குஉத்தரம், அநுக்ரஹசீலனாய் ஆச்ரயிப்பார்க்குப் ப்ரபத்தி வாக்யோச்சாரண ப்ராரம்பத்திலே கடுக மோக்ஷம் கொடுக்கத் த்வரிக்கிற ஈச்வரன் இவனுடைய நசையாலே சிறிது காலம் இங்கே வைக்க இசைந்தவளவிலே இவ்விடத்திலுள்ள சிற்றின்பங்களை துக்க ப்ரஸங்க ரஹிதமாக அநுபவிப்பிக்குமாகில் இவனுக்கு இந்நசை ஒருகாலும் மாளாது; பகவதநுபவத்தில் போக்யதாபுத்தியும் கொழுந்துவிட்டு வராது. ஆகையால், யந்யாநுக்ரஹமிச்சாமி தநம் தஸ்ய ஹராம்யஹம் பாந்தவைச்ச வியோகேந ஸதா பவதி துக்கித: தேந துக்கேந ஸந்தப்தோ யதி மாம் ந பரித்யஜேத் தம் ப்ரஸாதம் கரிஷ்யாமி ய: ஸுரைரபி துர்லப: என்கிறபடிகளிலே, துக்காதிகளுக்குக் காரணமான ப்ராரப்த கர்ம விசேஷத்தை ஸந்நிஹிதமான கசாதிகளைப் போலே துணையாகக் கொண்டு பித்ராதிகளைப் போலே சிக்ஷகனான ஈச்வரன், சில கடின ப்ரக்ருதிகளுக்குப் பண்ணுகிற அநுக்ரஹ விசேஷம் இதென்று அநுஸந்திக்கை உசிதம்.
– இதற்கு விடை அளிப்போம். அனுக்ரஹம் செய்யும் ஸ்வபாவம் உள்ள ஈச்வரன், தன்னிடம் ப்ரபத்தி செய்தவர்களுக்கு அந்த நொடியிலேயே மோக்ஷம் அளிக்கத் தயாராகவே உள்ளான். ஆனால் ப்ரபந்நனின் ஆசை காரணமாக அவனை ஸர்வேச்வரன் இந்த உலகில் சிறிது காலம் நிறுத்து வைக்க வேண்டியதாக உள்ளது. அந்தக் காலகட்டத்தில், ப்ரபந்நன் இந்த உலகில் உள்ள சிற்றின்பங்களை எந்தவிதமான துன்பமும் இல்லாமல், சுகமாக அனுபவிக்கிறான் என்று கொள்வோம்; இவ்விதம் இருந்தால், அவனுக்கு இந்த உலகில் தொடர்ந்து இருப்பதற்கான ஆசை எப்போதும் குறையாது; மேலும் பகவத் அனுபவத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் உண்டாகாது. ஆகவே யந்யாநுக்ரஹமிச்சாமி தநம் தஸ்ய ஹராம்யஹம் பாந்தவைச்ச வியோகேந ஸதா பவதி துக்கித: தேந துக்கேந ஸந்தப்தோ யதி மாம் ந பரித்யஜேத் தம் ப்ரஸாதம் கரிஷ்யாமி ய: ஸுரைரபி துர்லப: - யாருக்கு நான் அனுக்ரஹம் செய்யவேண்டும் என்று விரும்புகிறேனோ அவர்களுடைய செல்வங்களை முதலில் நான் அபகரிப்பேன்; அவனுடைய பந்துக்களின் மரணத்தால் அவன் மிகுந்த துன்பம் அடைவான்; அப்போதும் அவன் என்னை விடாமல் இருந்தால், தேவர்களுக்கும் கிட்டாத அனுக்ரஹத்தை அவனுக்கு நான் செய்வேன் – என்றுள்ள ச்லோகங்களுக்கு ஏற்ப, அந்த மனிதனுடைய துக்கத்திற்குக் காரணமாக உள்ள பலன் தரத் தொடங்கிவிட்ட அவனுடைய கர்மங்களைத் தனக்கு அருகில் சாட்டை போன்று துணையாக வைத்தபடி, தந்தையைப் போன்று சிறிய துன்பங்களைத் தண்டனைகளாக அளிக்கிறான். இவ்விதம் செய்வதும் அவனைத் திருத்தும்விதமாக ஸர்வேச்வரன் செய்யும் அனுக்ரஹமே என்று உணரவேண்டும்.