Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 4)
ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்
ப்ரபத்தி ப்ராரப்த கர்மங்களை நீக்குவது குறித்த ஆக்ஷேபம்
மூலம் – இவ்வர்த்தம் தத்த்வமாகில் ப்ராரப்த கர்ம விசேஷபலமாய்க் கொண்டு வருகிற துக்கங்களும், துக்க காரணங்களான கர்மங்களினுடைய ஆஜர்னமும் கழிய வேண்டாவோ? ஆர்த்தனாய்ப் புருஷன் அர்த்திக்கக் கொடுக்கவேணும் என்னில், ஆநுஷங்கிகமான புங்க்திபாவநத்வாதிகளைப் போலே அநபிஸம்ஹிதங்களையுங்கூட ஹிதைஷியான ஈச்வரன் தானே கொடுக்கத்தட்டு ஏன்? இப்படிச் செய்யக் காணாமையால் சோக விஷயமான அம்சமெல்லாம் நிச்சேஷமாகப் ப்ரபத்தியாலே கழியும் என்றவிடம் ப்ரபத்தி ப்ரபாவாதிசயத்தைப் பற்ற ஸ்துதி பண்ணினபடியென்று சிலர் இதின் ப்ரபாவத்தை வரையிட்டுப் பார்ப்பர்கள்.
– கீழே உள்ள சில கேள்விகளை ப்ரபத்தியின் பெருமை குறித்து சந்தேகம் கொள்பவர்கள் அல்லது ஆக்ஷேபம் செய்பவர்கள் எழுப்புவர். ப்ரபத்திக்கு உள்ள இந்த மேன்மை உண்மையாக இருந்தால், ப்ரபந்நன் ஒருவனுக்குப் ப்ராரப்த கர்மங்களின் பலனாக உள்ள துக்கங்களும், அவற்றுக்குக் காரணமாக உள்ள கர்மாநுஷ்டானங்களும் ப்ரபத்திக்குப் பின்னரும் நீங்காமல் உள்ளது ஏன்? இதற்கு, “சரீரம் விழும்போது மோக்ஷம் வேண்டும் என்று ப்ரபத்தி காலத்தில் ஸங்ல்பம் செய்தும், சரீரம் நீடிக்கும்வரை துன்பங்கள் நீங்காமையும் அவற்றின் காரணமான கர்மங்கள் தொடராமையும் அப்போது ஸங்கல்பம் செய்யாமலும் இருந்திருக்கலாம்”, என்று நீங்கள் பதில் உரைக்கக்கூடும். ஆனால், விருப்பப்பட்ட முக்கியமான பலனைக் காட்டிலும் வேறுபட்டதான பலன்களை, ப்ரபந்நரோடு கர்மங்களைச் செய்பவர்களும் தூய்மை அடைவது போன்று, ப்ரபந்நன் ப்ரபத்தி காலத்தில் ஸங்கல்பிக்காதவற்றையும் ஸர்வேச்வரன் அளிக்கத் தடை என்ன உள்ளது? இவ்விதம் ஸர்வேச்வரன் செய்வதில்லை என்பதால், துன்பம் உண்டாகக் காரணமாக உள்ள அனைத்தும் ப்ரபத்தியின் மூலம் நீங்கிவிடும் என்று கூறுவது, ப்ரபத்தியின் பெருமையை உயர்த்திக் கூற மட்டுமே ஆகும். இப்படியாக ஒரு சிலர் ப்ரபத்தியின் பெருமையை எல்லைப்படுத்தி உரைப்பர்.