Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 3)

ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்

ப்ரபத்தி ப்ராரப்த கர்மங்களை நீக்குவது குறித்த ஆக்ஷேபம்

மூலம் – அத்யுத்கடை: புண்யபாபை: இஹைவ பலமச்நேது என்கிற கணக்கிலே உபாய பக்தி: ப்ராரப்த வ்யதிரிக்தாத்ய நாசிநீ ஸாத்ய பக்திஸ்து ஸா ஹந்த்ரீ ப்ராரப்தஸ்யாபி பூயஸீ என்கையாலே ப்ராரப்தங்களையுங்கூட அமுக்கி தன் பலத்தைக் கொடுக்கவற்றான ப்ரபத்தியைப் பண்ணினவனுக்கு வித்யாந்தர ந்யாயத்தாலே உத்தர பூர்வார்த்தங்களும், இவ்வித்யைக்குத் தன்னேற்றமான ஸாமர்த்யத்தாலே ப்ராரப்த கர்மபலத்தைப் பற்ற உண்டான ஆர்த்தியிலே எல்லைக்கு ஈடாக க்ஷணாந்தர திவஸாந்தர ஜந்மாந்தராத்யநு வ்ருத்தியும் கழியக்கடவதென்று மா சுச: என்கிற வாக்யத்துக்கு அபிப்ராயம்.

– விஹஹேந்த்ர ஸம்ஹிதை - அத்யுத்கடை: புண்யபாபை: இஹைவ பலமச்நேது – க்ரூரமான பாவங்களையும், அதிகமான புண்ணியங்களையும் செய்பவன் இந்த ஜன்மத்திலேயே அவற்றின் பலன்களை அனுபவிக்கிறான் – என்று கூறியது காண்க. மேலும் இதே போன்று, உபாய பக்தி: ப்ராரப்த வ்யதிரிக்தாத்ய நாசிநீ ஸாத்ய பக்திஸ்து ஸா ஹந்த்ரீ ப்ராரப்தஸ்யாபி பூயஸீ – உபாயமாக உள்ள பக்தியானது பலன் தரத் தொடங்கிய கர்மபலன்கள் (ப்ராரப்த) அல்லாத மற்ற பாவங்களைப் போக்கும், ப்ரபத்தியானது பக்தியைக் காட்டிலும் உயர்வாக நின்று ப்ராரப்த பாவத்தையும் போக்கும் – என்றது காண்க. ஆக ப்ரபத்தியானது, பலன் தரத் தொடங்கிய பாவங்களைப் அழிப்பதோடு நிற்காமல், மேலும் பலன்களையும் அளிக்கவல்லதாகும். எந்தவொரு வித்யையை எடுத்துக் கொண்டாலும், கற்பதற்கு முன்னரும், அதன் பின்னரும் உள்ள பாவங்களைத் தனக்கே உரித்தான பெருமை காரணமாக அந்த வித்யை நீக்கவல்லது என்று கூறுவதற்கு ஏற்ப, ப்ரபத்தியானது அந்த வித்யையைக் காட்டிலும் உயர்ந்ததாக இருந்து கொண்டு, பலன் தரத் தொடங்கிய கர்மபலன் என்பது அடுத்த நொடியோ, அடுத்த நாளோ, அடுத்த பிறவியிலோ கூட இல்லாதபடிச் செய்துவிடுகிறது. இதுவே கீதை (18-66) – மா சுச: - ஆகவே அச்சம் கொள்ளாதே – என்பதன் பொருளாகும்.