Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 46)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

ஆளவந்தார் மற்றும் ஆழ்வார்களின் கூற்றுகளில் உள்ள ஆழ்கருத்து

மூலம் – “ந தர்மநிஷ்டோஸ்மி”, “குளித்து மூன்றனலையோம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டேன்” இத்யாதிகளும் கர்மயோகாதிகளுக்குச் சக்தியில்லாமல் சொல்லுகிறவத்தனை; யதாசக்தி பகவதாஜ்ஞாநுபாலநத்தைத் தவிரச் சொல்லுகிறனவன்று. ஆகையால் ப்ரபந்நனுக்கும் ப்ராஹ்மண்யாதி விசிஷ்ட சரீரம் விடுமளவும் அவ்வோ ஜாத்யாதிகளுக்கு ஈடான பகவதாஜ்ஞாநுபாலநம் கர்த்தவ்யம்.

– ஸ்தோத்ரரத்னம் (22) - ந தர்மநிஷ்டோஸ்மி – நான் எந்தவிதமான தர்மங்களையும் கைக்கொள்ளவில்லை - என்றும், திருமாலை (25) - குளித்து மூன்றனலையோம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டேன் – நீராடிய பின்னர் அந்தணன் ஒருவன் செய்யவேண்டிய கர்மங்களை நான் விட்டேன் – என்றும் கூறப்பட்ட வாக்கியங்கள் கர்மயோகத்தில் ஈடுபடுவதற்கான சக்தி இல்லை என்பதை மட்டுமே உணர்த்துகின்றன; அவை நம்முடைய சக்திக்கு உட்பட்ட ஸர்வேச்வரனுடைய ஆணைகளை மீறும்படி உரைக்கவில்லை. ஆகவே ப்ரபந்நன் என்றாலும், ப்ராஹ்மண்யம் முதலான ஜாதியைக் கொண்டுள்ள இந்தச் சரீரம் அழியும்வரை, அந்த ஜாதிக்கு ஏற்றபடி உள்ள பகவானின் ஆணைப்படி உள்ள தர்மங்களைச் செய்தே ஆகவேண்டும்.