Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 45)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

அறிந்தே செய்யும் பாவங்களுக்கு ப்ராயச்சித்தம் அவசியமாகும்

மூலம் – இதிஹாஸ புராணங்களில் சில வ்ருத்தாந்த தர்சநமாத்ரத்தைக் கொண்டு வசந விரோதத்தை அநாதரித்து பாகவதனுடைய புத்திபூர்வோத்தராகம் க்ஷந்தவ்யமென்று சிலர் சொல்லுவார்கள். இதுவும் அவ்வோ ப்ரகரணங்களில் அபிப்ராயம் அறியாமல் வந்தது. மஹாராஜருக்கும் உள்பட ஸமயாதிலங்கநமாத்ரமான அபராதம் பெருமாள் திருவுள்ளத்திலே சோகாபிபவத்தாலே ப்ரதிபாஸித்து ந ச ஸங்குசித: பந்தா யேந வாலீ ஹதோ கத: ஸமயே திஷ்ட ஸுக்ரீவ மா வாலிபதமந்வகா: என்று அருளிச்செய்யக் கேட்டு இளையபெருமாள், பெருமாள் தாமே தணியவிட வேண்டும்படி சீறியருளிக் கிஷ்கிந்தையிலே செல்ல, க்ருதாபராதஸ்ய ஹி தே நாந்யத் பச்யாம்யஹம் க்ஷமம் அந்தரேணாஞ்ஜலிம் பத்வா லக்ஷ்மணஸ்ய ப்ரஸாதநாத் என்று இந்த்ர வ்யாகரண பண்டிதன் மஹாராஜருக்கு உபதேசித்தானிறே. அவ்வளவில் மஹாராஜரும் இசைந்து யதி கிஞ்சிததிக்ராந்தம் விச்வாஸாத் ப்ரணயேந வா ப்ரேஷ்யஸ்ய க்ஷமிதவ்யம் மே ந கச்சிந்நபராத்யதி என்று விண்ணப்பம் செய்ய வேண்டிற்று. அப்போது இளையபெருமாளுக்கும் தாம் மிகுதியாகச் சொன்ன வார்த்தைகளுக்கு யச்ச சோகாபிபூதஸ்ய ச்ருத்வா ராமஸ்ய பாஷிதம் மயா த்வம் புருஷாண்யுக்த: தச்ச த்வம் க்ஷந்துமர்ஹஸி என்று க்ஷமை கொள்ளவேண்டிற்று. இப்படி ப்ரபந்நனுக்கும் ப்ராரப்த கர்ம விசேஷங்களாலே புத்திபூர்வோத்தராகம் புகுரவும் கூடும்; அவை புகுந்தால் அநுதப்தனாய் க்ஷமை கொள்ளவும் வேணும்.

– ஒரு சிலர் இதிஹாஸம் மற்றும் புராணங்களில் உள்ள நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, சாஸ்த்ரங்களில் கூறப்படுவதற்கு முரணாக, ப்ரபந்நன் ஒருவன் அறிந்து கொண்டே பாவங்கள் செய்தாலும் பொறுத்துக் கொள்ளப்படும் என்று கூறுவார்கள். இவர்களின் இந்தச் சிந்தனையானது, அந்த ப்ரகரணங்களின் நிலை அறியாத காரணத்தால் உண்டானதாகும். ஓர் உதாரணம் காண்போம். சுக்ரீவன் இராமனுக்கு உதவுவதாக வாக்களித்தான்; ஆனால் அந்தக் காலம் கழிந்த பின்னரும் வந்து உதவவில்லை; இதனால் உண்டான அபராதம் என்பது இராமனின் திருவுள்ளத்தில் சோகமாக உருவெடுத்தது. இதனால் இராமன் இராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் (30-81) - ந ச ஸங்குசித: பந்தா யேந வாலீ ஹதோ கத: ஸமயே திஷ்ட ஸுக்ரீவ மா வாலிபதமந்வகா: - வாலியை அழித்த மார்க்கமானது இன்னும் அடைக்கப்படாமல் உள்ளது; சுக்ரீவா! ஆகவே நீ அளித்த வாக்கின்படி நடப்பாயாக, வாலி போன மார்க்கத்தில் செல்லாதே – என்றான். இதனைக் கேட்ட லக்ஷ்மணன் மிகுந்த சீற்றம் கொண்டான்; அப்போது அவனைச் சமாதானம் செய்த இராமன் அவனை கிஷ்கிந்தைக்கு அனுப்பினான். லக்ஷ்மணனின் சீற்றத்தை உணர்ந்த இலக்கண பண்டிதனாகிய அனுமன் சுக்ரீவனிடம், இராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் (32-11) - க்ருதாபராதஸ்ய ஹி தே நாந்யத் பச்யாம்யஹம் க்ஷமம் அந்தரேணாஞ்ஜலிம் பத்வா லக்ஷ்மணஸ்ய ப்ரஸாதநாத் – மிகுந்த அபராதம் செய்துள்ள நீ (சுக்ரீவன்), உன்னுடைய கைகளால் லக்ஷ்மணை வணங்கி, பொறுத்துக் கொள்ளுமாறு விண்ணப்பம் செய்வதைக் காட்டிலும் வேறு உபாயத்தை (அனுமனாகிய) என்னால் காண இயலவில்லை – என்றான். இதனை ஏற்றுக் கொண்ட சுக்ரீவன் லக்ஷ்மணனிடம், இராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் (36-11) - யதி கிஞ்சிததிக்ராந்தம் விச்வாஸாத் ப்ரணயேந வா ப்ரேஷ்யஸ்ய க்ஷமிதவ்யம் மே ந கச்சிந்நபராத்யதி – என்னுடைய தன்னம்பிக்கையாலோ அல்லது அன்பினாலோ நான் ஏதேனும் அபராதம் செய்திருந்தால் என்னை மன்னிக்கவேண்டுகிறேன். இந்த உலகில் குற்றம் செய்யாதவர்கள் யாரும் இல்லை – என்றான். இதனைக் கேட்ட லக்ஷ்மணன், தான் சுக்ரீவனைக் குறித்து உரைத்த சொற்களைச் சிந்தித்து, இராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் (36-28) - யச்ச சோகாபிபூதஸ்ய ச்ருத்வா ராமஸ்ய பாஷிதம் மயா த்வம் புருஷாண்யுக்த: தச்ச த்வம் க்ஷந்துமர்ஹஸி – மிகுந்த துன்பத்தில் ஆழ்ந்துள்ள இராமனின் சொற்களைக் கேட்டதன் காரணமாகவே நான் உன்னைக் குறித்துக் கடுமையான சொற்கள் உரைத்தேன். இதனை நீ பொறுத்துக் கொள்ளவேண்டும் – என்று சுக்ரீவனிடம் மன்னிப்பு கோரினான் அல்லவோ? ஆகவே ப்ரபந்நன் ஒருவன், பலன் தரத் தொடங்கிவிட்ட பூர்வஜன்ம கர்ம பலன்கள் காரணமாக உண்டாகும் அபராதங்களுக்கு ஏற்ற ப்ராயச்சித்தங்களைச் செய்தே தீரவேண்டும்; அவற்றுக்காக மன்னிப்பும் கேட்கவேண்டும்.