Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 41)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
அறிந்தே செய்யும் பாவங்களுக்கு ப்ரபந்நரும் ப்ராயச்சித்தம் செய்யவேண்டும்
மூலம் – அபயஸம்ப்லவே ஸத்ய: ப்ராயச்சித்தம் ஸமாசரேத் ப்ராயசித்திரியம் ஸாத்ர யுத்புந: சரணம் வ்ரஜேத் என்று சொல்லுகையாலே புத்திபூர்வோத்தராகத்தில் ஈச்வரனுக்கு நிக்ரஹஹேச்சை உதியாதென்னவொண்ணாது. ஸர்வசக்தியானவனுக்கு நிக்ரஹஹேச்சை பிறந்தால் க்ஷமை கொள்ளாதபோது பலஸித்தியில்லை என்னவும் ஒண்ணாது. ஈச்வரனுக்குப் ப்ரீத்யபாவமாத்ரம் பிறக்குமத்தனையென்றால் தனக்கு அத்தால்மேல் ஒரு ப்ரத்யவாயம் இல்லையாகில் புந: ப்ராயச்சித்தம் பண்ணவேண்டா. தனக்கும் ப்ரீத்யபாவம் பிறக்குமத்தனையென்றாலும் ப்ரத்யவாயம் ஸித்தமாயிற்று. அதிலும் கழிந்ததுக்கு ப்ராயச்சித்தம் வேண்டா. மேலும் அநுவ்ருத்தமாய் வரப்புகுகிற ப்ரீத்யபாவத்தைப் பற்ற ப்ராயச்சித்தமென்றால், இத்தோடு துல்ய யோகக்ஷேமதையாலே யதாஸம்பவம் ச்ருத்யாதி ஸித்தங்களான உபக்லேசங்களும் வரும் என்று பீதனாய் ப்ராயச்சித்தம் பண்ண ப்ராப்தம்.
– லக்ஷ்மீதந்த்ரம் (17-91) - அபயஸம்ப்லவே ஸத்ய: ப்ராயச்சித்தம் ஸமாசரேத் ப்ராயசித்திரியம் ஸாத்ர யுத்புந: சரணம் வ்ரஜேத் – அபசாரங்கள் உண்டானால் அதற்கான ப்ராயச்சித்தங்களைச் செய்தே தீரவேண்டும்; செய்யவேண்டிய ப்ராயச்சித்தம் ப்ரபத்தியே ஆகும் – என்றது காண்க. ஆக ப்ரபந்நன் ஒருவன் ப்ரபத்திக்குப் பின்னர் அபசாரங்கள் செய்தால், அவனைத் தண்டிக்கவேண்டும் என்று ஈச்வரனுக்கு ஆசை உண்டாகாது எனக் கொள்ளக்கூடாது. அனைத்து சக்தியும் கொண்ட ஈச்வரனுக்கு அவனைத் தண்டிக்க வேண்டும் என்னும் விருப்பம் உண்டானால், ப்ராயச்சித்தம் செய்யாதபோதும் அசம்பாவிதம் ஏதும் நிகழாது என்றும் கூறமுடியாது. இவ்விதம் செய்யப்படும் அபசாரங்கள் மூலமாக ஸர்வேச்வரனுக்கு ப்ரீதி மட்டுமே குறையும் என்று கூறினால், அத்தகைய ப்ரீதிகுறைவு ஒருவனுக்கு எந்தவிதமான அசம்பாவிதத்தையும் உண்டாக்காது என்றால், எந்தவிதமான ப்ராயச்சித்தமும் செய்யவேண்டியதில்லை. மேலும், அபசாரம் காரணமாக ஈச்வரனுக்கு ப்ரீதிகுறைவு உண்டாவது மட்டும் அல்லாமல், தனக்கும் ஈச்வரனிடம் ப்ரீதிகுறைவு உண்டாதல் என்பது மட்டுமே அதிகபக்ஷமாக உண்டாகும் என்று கொள்ளும்போது, அந்த ப்ரீதிகுறைவு என்னும் அசம்பாவிதத்தைத் ஒப்புக் கொள்ளவேண்டும். இப்படியாக ஏற்படும் ப்ரீதிகுறைவு என்பது தற்காலிகமானது என்பதால் அதற்காக எந்தவிதமான ப்ராயச்சித்தமும் செய்யவேண்டியதில்லை. ப்ரீதிகுறைவு என்பது தொடர்ந்தபடி இருக்கலாம் என்ற நிலையில் ப்ராயச்சித்தம் செய்யவேண்டும் என்று கூறலாம்; இதன் காரணம் ச்ருதிகளிலும் ஸ்ம்ருதிகளிலும், நித்ய நைமித்திக கர்மங்களை இயற்றாமல் போனால் கிட்டக்கூடிய அசம்பாவிதங்களை ஒத்த நிலையையே ப்ரீதிகுறைவும் உண்டாக்கும் என்ற பயம் காரணமாகச் செய்தல் வேண்டும்.