Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 40)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

அறிந்து செய்யும் பாவங்கள் ப்ரபந்நனுக்கும் உண்டாகாது என்னும் வாதத்திற்கான கண்டனம்

மூலம் – “என்னடியார் அது செய்யார், செய்தாரேல் நன்று செய்தார்” என்கிறதுவும் அபராதம் புகுருமென்கைக்கு லிங்கம். இங்கு, “செய்தாரேல் நன்று செய்தார்” என்றதுக்கு “ப்ராமாதிகமாகப் புகுந்தால் நாமே க்ஷமிப்புதோம்; புத்திபூர்வகமாகப் புகுந்தால் அவர்கள் க்ஷமை கொள்ளாதவளவிலும் சிக்ஷா விசேஷங்களாலே நாம் சமிப்புதோம்; ஒருபடிக்கும் கைவிடோம்” என்று தாத்பர்யம். “நன்று செய்தாரென்பர் போலும்” என்று சொல்லுகையாலே, இது வஸ்துவ்ருத்தியில் நன்று அன்று என்னுமிடம் ஸூசிதம்.

– பெரியாழ்வார் திருமொழி (4-9-2) - என்னடியார் அது செய்யார், செய்தாரேல் நன்று செய்தார் – என்ற வரியும், அபராதங்கள் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதையே கூறுகிறது. இங்கு, “செய்தாரேல் நன்று செய்தார்” என்பதன் பொருள் – தாங்கள் அறியாமல் தவறு செய்தால் பொறுத்துக்கொள்ளப்படும்; ஆனால் அறிந்து கொண்டு தவறு செய்தால், அதனைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்காமல் இருந்தால், அவர்களைத் தண்டிப்பேன்; ஆனால் எப்படி என்றாலும் கைவிடமாட்டேன் – என்பதாகும். ஆனால் இவர்கள் செய்யும் தவறுகள் தவறுகளே என்பதை “நன்று செய்தாரென்பர் போலும் – நல்லது செய்ததாகவே கொள்ளப்படும்” என்பதால் உணரலாம்.