Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 39)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

அறிந்து செய்யும் பாவங்கள் ப்ரபந்நனுக்கும் உண்டாகாது என்னும் வாதத்திற்கான கண்டனம்

மூலம் –முமுக்ஷுத்வமேயடியாக புத்திபூர்வ நிஷித்தங்கள் புகுராவென்னும் வார்த்தையும் வித்யதே ப்ராஹ்மணே தம: என்னுமாப் போலே ஔசித்யத்தாலே சொன்னபடியத்தனை. முமுக்ஷுவுக்கே புத்திபூர்வ நிஷித்தங்கள் புகுந்து பரிஹாரங்கள் பண்ணுகை மஹர்ஷிகள் பக்கலிலும் ருஷிப்ராயர் பக்கலிலுமுள்படக் கண்டு போரா நின்றதிறே. இங்ஙனன்றாகில் உபாஸகர்களும் முமுக்ஷுக்களாகையாலே அவர்களுக்கும் புத்திபூர்வோத்தராகம் கடியாமையாலே “உத்தராகாச்லேஷம் ப்ராமாதிக விஷயம்; புத்திபூர்வோத்தராகத்துக்கு க்ஷந்தவ்யத்வம் இல்லை” என்று வ்யவஸ்தை பண்ணவொண்ணாதொழியும். உபாஸகனுக்கும் ப்ரபந்நனுக்கும் வர்ண ஆச்ரம ஜாதி கோத்ர ப்ரவர சரண குல தேச கால அவஸ்தா குண ஸமயாதிகளை உபாதியாகக் கொண்டு சொன்ன நிஷித்தங்கள் தவிருமிடத்தில் விசேஷமில்லை. நிஷித்தங்கள் புகுந்தால் ப்ராயச்சித்தம் யதாதிகாரமாகையாலே வைஷம்யம் உண்டு.

– மோக்ஷத்தில் விருப்பம் உள்ளபோது சாஸ்த்ரங்களில் விலக்கப்பட்ட செயல்களை அறிந்துகொண்டு செய்யும் நிலை உண்டாகாது என்று கூறுவது, “அப்படிப்பட்ட நிலை பெரும்பாலும் ஏற்படாது” என்றே கூறுவதாகும் – இவ்விதம் உரைப்பது பொருத்தமல்ல. இது இராமாயணம் யுத்தகாண்டம் (16-9) - வித்யதே ப்ராஹ்மணே தம: - அந்தணனிடம் இந்த்ரியங்களை அடக்கும் வலிமை உண்டு – என்று கூறுவது போன்றே ஆகும். மஹரிஷிகளுக்கும், சில உயர்ந்த முமுக்ஷுக்களுக்கும் கூட இது போன்று சாஸ்த்ரங்களில் விலக்கப்பட்டவற்றைச் செய்யும் நிலை உண்டாகி, பின்னர் அதற்கான பிராயச்சித்தம் செய்த நிகழ்வுகள் உண்டு. இவ்விதம் கொள்ளவில்லை என்றால் (அதாவது முமுக்ஷு அறிந்துகொண்டே தவறுகள் செய்யமாட்டான் என்று கொண்டால்), பதியோகத்தில் உள்ள உபாஸகர்களும் முமுக்ஷுக்களாகையாலே அவர்களும் அறிந்துகொண்டு தவறு செய்யமாட்டார்கள் என்றாகும்; இது ஸ்ரீபாஷ்யத்தில் – பின்னர் செய்யப்படும் பாவம் என்பது அறியாமல் செய்தால் மட்டுமே பொறுத்துக் கொள்ளப்படும் என்றும், அறிந்து கொண்டு செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு இல்லை என்றும் – கூறப்பட்டது வீணாகும். ஆக உபாஸகனாக இருந்தாலும், ப்ரபந்நனாக இருந்தாலும் வர்ணம், ஆச்ரமம், பால் (ஆண், பெண்), கோத்ரம், ப்ரவரம், ஒழுக்கம், குலம், இடம், காலம், சூழ்நிலை, குணம், மனநிலை ஆகிய எதிலும் அறிந்துகொண்டு செய்யும் பாவங்களுக்கு வேறுபாடு இல்லை. ஆனால் அவ்விதமாகச் செய்யும் தவறுகளுக்கான பிராயச்சித்தத்தில், அதிகாரிபேதம் காரணமாக வேறுபாடு உண்டு.