Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 38)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

“ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்பதன் விளக்கம்

மூலம் – இங்ஙனன்றிக்கேநித்ய நைமித்திகாதிகளுடைய ஸ்வரூப த்யாகம் விவக்ஷிதம் என்னில், முன்பு சொன்ன ஸர்வவிரோதமும் ப்ரஸங்கிக்கும். இந்த நிஷ்கர்ஷம் ஸத்த்வநிஷ்டராய் விவேகிகளாயிருப்பார் தெளிந்து அங்கீகரிப்பார்கள். இவ்வர்த்தத்தை “செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்” என்றும், “செய்யேல் தீவினை என்று அருள் செய்யும்” என்றும் அருளிச் செய்தார்கள். “நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞாலநாதனே” என்றதுக்கும் தாத்பர்யத்தைப் பார்த்தால் க்ஷமிக்க வேணுமென்று அபேக்ஷித்தபடியாகையாலே ப்ரபந்நனுக்கும் அபராதம் புகுந்தால் அஜ்ஞானாதத வா ஜ்ஞானாத் அபராதேஷு ஸத்ஸ்வபி ப்ரயாச்சித்தம் க்ஷமஸ்வேதி ப்ரார்த்தநைகைவ கேவலம் என்கிறபடியே க்ஷமை கொள்ளப் ப்ராப்தம். ப்ராயச்சித்தாந்தராசக்த: காலக்ஷேபாக்ஷமோபி வா புந: ப்ரபத்யதே நாதம் அபிந்தந் லோகஸங்க்ரஹம்

– இவ்விதம் அல்லாமல், நித்ய நைமித்திக கர்மங்களைக் கைவிடவேண்டும் என்று கொண்டால், இதுவரை கூறப்பட்ட அனைத்துமே முரணாகிவிடும். ஸாத்விகமாக உள்ளவர்களும், விவேகம் உள்ளவர்களும் இவ்விதம் கூறியதை ஏற்பர். இதனைக் கீழே உள்ள வரிகளில் காண்க: திருப்பாவை (2) - செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம் – எதனைச் செய்யாக்கூடாதோ அதனைச் செய்யமாட்டோம்; தீயவற்றைச் செய்யமாட்டோம் திருவாய்மொழி (2-9-3) - செய்யேல் தீவினை என்று அருள் செய்யும் – தீயவற்றைச் செய்யாமல் இருக்க அருளவேண்டும். மேலும், திருச்சந்தவிருத்தம் (111) - நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞாலநாதனே – நாதனே! மிகவும் அற்பனான நான் செய்யும் குற்றங்களையும் குணங்களாகவே கொள்ளவேண்டும் – என்றுள்ள வரியானது, குற்றங்களை மன்னிக்கவேண்டும் என்னும் ப்ரார்த்தனையாகவே உள்ளது. ஆகவே ப்ரபந்நன் ஒருவன் குற்றம் செய்ய நேரிட்டால், வங்கிபுரம் நம்பி காரிகை - அஜ்ஞானாதத வா ஜ்ஞானாத் அபராதேஷு ஸத்ஸ்வபி ப்ரயாச்சித்தம் க்ஷமஸ்வேதி ப்ரார்த்தநைகைவ கேவலம் – தெரிந்தோ, தெரியாமலோ அபசாரம் செய்தால், “பொறுத்துக் கொள்ளவேண்டும்” என்று மன்னிப்புக் கேட்பதே சிறந்த ப்ராயச்சித்தமாகும். ப்ராயச்சித்தாந்தராசக்த: காலக்ஷேபாக்ஷமோபி வா புந: ப்ரபத்யதே நாதம் அபிந்தந் லோகஸங்க்ரஹம் – வேறு ப்ராயச்சித்தம் செய்யச் சக்தி அற்றவனும், காலதாமதம் பொறுக்க இயலாத ஸ்வபாவம் உள்ளவனும், உலகைக் காப்பாற்றவேண்டும் என்றுள்ள சாஸ்த்ரங்களுக்குப் பங்கம் உண்டாக்காமல் பகவானிடம் ப்ரபத்தி செய்கிறான்.