Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 35)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
“ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்பதன் விளக்கம்
மூலம்– இப்படியானால் ஆஜ்ஞாதிலங்கனத்துக்கு ஒரு விரகின்றிக்கேயிருக்க, சிலர் தஸ்மாத்த்வமுத்தவோத்ஸ்ருஜ்ய சோதநாம் ப்ரதிசோதநாம் ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ச்ரோதவ்யம் ச்ரதமேவ ச மாமேகமேவ சரணம் ஆத்மாநம் ஸர்வதேஹிநாம் யாஹி ஸர்வாத்மபாவேந யாஸ்யஸி ஹ்யகுதோபயம் என்று நிவ்ருத்தியையுங்கூட விடச் சொன்னபடியானாலும் “ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய” என்கிற இடத்தில் ஸர்வ சப்தத்தை ஸங்கோசியாமைக்காகவும் நிவ்ருத்தி ரூபங்களையும் கூட விடவேண்டுகையால், அவற்றை விடுகையாவது நிஷேதித்தவை எல்லாவற்றிலும் யதாசக்தி அநுஷ்டாநமாகையால், இந்த நிஷித்தாநுஷ்டாநம் விதிபலப்ராப்தமாகையாலே ப்ரபந்நனுக்கு புத்திபூர்வோத்தராதமும் லோபியாதென்று ப்ரமிப்பர்கள். இது மிகவும் பரிஹஸநீயம், எங்ஙனேயென்னில் – அலோபகர் பாபம் பண்ணினால் லோபியாது என்பார்கள். இவர்கள் பாபம் அவச்யம் அநுஷ்டிக்க வேணுமென்றார்களாயிற்று. இது பக்ஷ்யோத்தமப்ரதிச்சந்நம் மத்ஸ்யோ பளிசமாயஸம் அந்நாபிலாஷீ க்ரஸதே நாநுபந்தவேக்ஷதே என்கிற கணக்காம். இவையெல்லாவற்றையும் நினைத்து அஹோ பத மஹத்கஷ்டம் விபரீதமிதம் ஜகத் யேநாபத்ரபதே ஸாது: அஸாதுஸ்தேந துஷ்யதி என்று மஹர்ஷி நிர்வண்ணனானான். இவர்கள் சொல்லுகிறபடி அர்த்தமானால் யாவஜ்ஜீவம் இருந்து அநுஷ்டிக்கும் நிஷித்தாநுஷ்டாநம் எல்லாம் ப்ரபத்திக்கு அங்கமாகையால் ஸாங்கப்ரபதநம் ஸக்ருத் கர்த்தவ்யம் என்னுமிடம் கழியும். ப்ரபத்திக்ஷணத்தில் எல்லா நிஷித்தங்களும் அநுஷ்டிக்கை அசக்யம். அப்போது யதாசக்தி நிஷித்தாநுஷ்டாநம் பண்ணிக் கொண்டு ப்ரபத்தி பண்ணவும் கண்டறியோம். இப்பக்ஷத்தில் பாபங்களும் அக்நீஷோமீய ஹிம்ஸை போலே பாபசப்த வாச்யமல்லாமையாலே புத்திபூர்வோத்தராகத்தையும் கூட்டி “ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்கிற இடத்துக்குத் தாங்கள் வ்யாக்யானம் பண்ணின ப்ரகாரமும் விருத்தமாம். யதாசக்தி த்ரிவிதாபசாரங்கள் கர்த்தவ்யங்களாகவும் ப்ரஸங்கிக்கும். இது பூர்வாநுஷ்டாநத்துக்கும், பூர்வஸம்ப்ரதாயத்துக்கும், ஸ்வாநுஷ்டாநத்துக்கும், மற்றும் இப்போது காண்கிற முமுக்ஷுக்களுடைய அநுஷ்டாநத்துக்கும் விருத்தம். இப்படிச் சொல்லுபவர்கள் தம்மை ஒரு ப்ரபந்நர் அர்த்தகாமங்கள் அடியாக நலியப்புக்கால், இது ப்ரபந்நதர்மமன்றோ என்று இவரை உகந்திருக்கப் ப்ராப்தமாம். இது அநந்த ப்ரமாணங்களுக்கு விருத்தமாமளவேயன்றிக்கே இங்கு எடுத்த வசநங்களுக்கு விவக்ஷிதமும் அன்று.
– ஆக ஸர்வேச்வரனின் ஆணைகளை மீறுவதற்கு எந்தவிதமான ப்ரமாணமும் இல்லாதபோது ஒரு சிலர் கீழே உள்ள வரிகளைக் கூறுவர்: ஸ்ரீமத் பாகவதம் (11-12-14) - தஸ்மாத்த்வமுத்தவோத்ஸ்ருஜ்ய சோதநாம் ப்ரதிசோதநாம் ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ச்ரோதவ்யம் ச்ரதமேவ ச – க்ருஷ்ணன் உத்தவரிடம், “உத்தவா! ஆகவே ஒரு குறிப்பட்ட பலனுக்காக உள்ள உபாயமாக இதனைச் செய் என்னும் விதியையும், இதனைச் செய்யவேண்டாம் என்னும் விதியையும், இப்படியாக விதிக்கின்ற தர்மத்தையும், இந்த இரண்டு கர்மங்களுக்கும் உதவியாக இதுவரை உன்னால் கேட்கப்பட்டதும், இனி கேட்க உள்ளதும் ஆகிய அங்கங்களை விடுவாயாக”, என்றான். ஸ்ரீமத் பாகவதம் (11-12-15) -மாமேகமேவ சரணம் ஆத்மாநம் ஸர்வதேஹிநாம் யாஹி ஸர்வாத்மபாவேந யாஸ்யஸி ஹ்யகுதோபயம் – அனைத்து ஆத்மாக்களுக்கும் ஆத்மாவாக உள்ள என்னை மட்டுமே அனைத்துவிதங்களாலும் சரணம் அடைவாயாக. இவ்விதம் செய்தால் யாரிடமும் பயம் இல்லாத நிலையாகிய மோக்ஷத்தை அடைவாய். இவர்கள் கூறுவது என்னவென்றால் – மேலே உள்ள வரிகளில் ஒரு சில கர்மங்களைச் செய்யாமல் உள்ள நிலையைக் கூட விடவேண்டும் என்று கூறப்பட்டதாலும், கீதா சரமச்லோகத்தில் உள்ள “ஸர்வ” என்ற பதத்திற்கான எல்லையைக் குறுக்குவது சரியல்ல என்பதாலும் நாம் செய்யக்கூடாது என்று கூறப்பட்ட கர்மங்களில் இருந்து விலகி இருத்தலையும் கைவிடவேண்டும் என்றாகிறது. ஆகவே தடுக்கப்பட்ட கர்மங்களையும் நமது சக்திக்கு உட்பட்ட அளவில் செய்யலாம் என்றாகிறது – என்பதாகும். இவர்கள் கருத்தின்படி தடுக்கப்பட்ட கர்மங்களையும் செய்யலாம் என்றானதால், ப்ரபத்திக்குப் பின்னர் ஒரு ப்ரபந்நன் தடுக்கப்பட்டவற்றைச் செய்தாலும் தோஷம் உண்டாகாது என்ற மயக்கத்தில் இருப்பார்கள். இது பரிகாசம் செய்யவேண்டியதாகும். இவர்கள் சார்வாகர்கள் கூறுவது போன்று – மனிதன் பாவங்கள் செய்தாலும் தோஷம் உண்டாகாது – என்று கூறுகிறார்கள். இவர்களின் கருத்தின்படி, ப்ரபந்நன் பாவம் செய்தே ஆகவேண்டும் என்று கூறுவது போல் உள்ளது! இது எப்படி உள்ளது என்றால் மஹாபாரதம் உத்யோகபர்வம் (33-13) - பக்ஷ்யோத்தமப்ரதிச்சந்நம் மத்ஸ்யோ பளிசமாயஸம் அந்நாபிலாஷீ க்ரஸதே நாநுபந்தவேக்ஷதே – தூண்டிலில் உள்ள உணவை மட்டுமே சிந்தித்து, அதில் உள்ள முள்ளை எண்ணாமல் மீன் வருகிறது; அது பின்னே உண்டாகவல்ல தீமையை எண்ணுவதில்லை – என்பது போன்றதாகும். இவை அனைத்தும் மனதில் கொண்டதாலேயே, மஹாபாரதம் வனபர்வம் (2-65) - அஹோ பத மஹத்கஷ்டம் விபரீதமிதம் ஜகத் யேநாபத்ரபதே ஸாது: அஸாதுஸ்தேந துஷ்யதி – ஸாதுவான மனிதன் காண்பதற்கு கூசுகின்ற வஸ்துவை தீமை பொருந்திய ஒருவன் கண்டு மகிழ்கிறான்; இது என்னே! உலகின் செய்கை இவ்விதம் விபரீதமாக உள்ளதே – என்று கூறி வருந்துவது காண்க. மேலே உள்ள கருத்தின்படி அவர்கள் கூறுவதே உத்தவருக்கு உபதேசிக்கப்பட்ட அர்த்தம் என்றால், ஒருவன் தன்னுடைய வாழ்வில் செய்யும் அனைத்து தடை செய்யப்பட்ட செயல்களுமே ப்ரபத்தியின் அங்கங்கள் என்றாகிவிடும். இவ்விதம் கொள்ளும்போது ப்ரபத்தியை, அதன் அங்கங்களுடன் ஒருமுறை மட்டுமே கைக்கொள்ளவேண்டும் என்று கூறுவது பலனற்றதாகும். ப்ரபத்தியின்போது விலக்கப்பட்ட அனைத்து கர்மங்களையும் ஒரே நேரத்தில் செய்வது என்பது இயலாத ஒன்றாகும். அல்லது இது போன்று ப்ரபத்தி காலத்தி, தனது சக்திக்கு உட்பட்ட அனைத்து தடுக்கப்பட்ட கர்மங்களை ஒருவன் இயற்றி நாம் காண்பதில்லை. இவர்களின் எண்ணத்தின்படி அக்நீஷோமீய யாகத்தில் பசுவதை என்பது எவ்விதம் வேதங்களால் விதிக்கப்பட்டதால் பாவமாகாதோ, அது போன்று விலக்கப்பட்ட கர்மங்களை இயற்றுவதும் பாவம் அல்ல என்பதாகும். இவை அனைத்தும் இவர்கள், கீதை (18-66) - ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – அனைத்து பாவங்களில் இருந்தும் நான் காப்பாற்றுவேன் – என்ற ச்லோகத்திற்கு இட்ட வ்யாக்யானத்திற்கு முரணாக உள்ளதைக் காணலாம். இவர்கள் கூறுவது போன்று மனம், சரீரம், வாக்கு ஆகிய மூன்றாலும் நமது சக்திக்கு உட்பட்ட அளவு அபசாரங்கள் செய்தபடி இருத்தல் வேண்டும் என்றாகிறது. இது நமது ஆசார்யர்கள் இதுவரை நடந்து கொண்ட விதங்களுக்கும், நமது ஸம்ப்ரதாயத்திற்கும், இவ்விதம் கூறுபவர்களின் ஸம்ப்ரதாயத்திற்கும், முமுக்ஷுவின் இலக்கணங்களுக்கும் விரோதமாக உள்ளது. இவர்களை யாரோ ஒரு ப்ரபந்நன், இவர்களுக்கு உலக விஷயங்கள் மீது உள்ள ஆசை காரணமாக, திருத்த முயற்சித்தால், “இதுதான் ப்ரபந்நர்களின் தர்மமோ?”, என்று ஏளனமாகப் பேசி மகிழ்வர். இந்தச் செய்கை எண்ணற்ற ப்ரமாணங்களுக்கு முரண்பாடாக உள்ளதோடு மட்டும் அல்லாமல், இதுவரை எடுக்கப்பட்ட வாக்கியங்களுக்குப் பொருந்துவதாகவும் இல்லை.