Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 33)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
“ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்பதன் விளக்கம்
மூலம்– இப் ப்ரபத்தியை பக்தியோகாங்கமாக அருளிச்செய்தது ப்ரபத்தி ஸகலபல ஸாதனமானபடியைப் ப்ரக்ருதமான பக்தியோகமாகிற பலத்திலே உதாஹரித்தபடி. இங்கு த்விதீய யோஜனையில் துஷ்கரங்களான பக்தியோக பர்யந்தோபாயங்களினுடைய ஸ்தாநத்திலே நிற்கிற உபாயவிசேஷமும் ப்ரதம யோஜனையில் புத்திவிசேஷ பூர்வகமான ப்ரபத்த்யநுஷ்டானமும் க்ருதோபாயனுடைய ஸ்வயம் ப்ரயோஜனமான கைங்கர்யமும் அநுஸந்தேயம். கிஞ்ச, ஸுதுஷ்கரேண சோசேத்யோ யேந யேநஷ்டஹேதுநா ஸ ஸ தஸ்யாஹமேவேதி சரமச்லோக ஸங்க்ரஹ: பாவாபாவௌ ந தர்மாணாம் ப்ரபத்தேரங்கமிஷ்யதே ஸ்வதந்த்ர சிஷ்டயா சக்யேஹா சேஷாபாவோதிகாரக: க்ரத்வநங்கதயா யே து ததாநீம் அநநுஷ்டிதா: ஸ்வகாலே ஸ்வவிதேரேவ கார்யஸ்தே தத்வதத்ர ந:
– எம்பெருமானார் கீதாபாஷ்யத்தில் ப்ரபத்தியை பக்தியோகத்தின் அங்கமாக அருளிச்செய்தது ஏன் என்றால், அனைத்து பலன்களையும் அளிக்கவல்லதான பக்தியோகத்தை, அந்தப் ப்ரபத்தி எவ்விதம் பெற்றுத் தரவல்லது என்று உணர்த்தவே ஆகும். எம்பெருமானாரின் கீதா சரமச்லோகத்திற்கான பாஷ்யத்தினுடைய இரண்டாவது வ்யாக்யானத்தின்படி, இயற்றுவதற்குக் கடினமாக உள்ள பக்தியோகம் உட்பட அனைத்துவிதமான உபாயங்களுக்கும் பதிலாகவே ப்ரபத்தி உள்ளது என்று அறியவேண்டும். முதலாவது வ்யாக்யானத்தினைக் கொள்ளும்போதும் - எவ்விதம் மற்ற கர்மங்களைத் தான் செய்வதாக எண்ணாமல், அவற்றைப் பகவான் தன் மூலமாகவே செய்து கொள்கிறான் என்று எண்ணுகிறோமோ, அதே போன்று ப்ரபத்தியையும் பகவானே செய்கிறான் என்று கொள்ளவேண்டும்; இவ்விதம் கொள்ளும்போது அவனுடைய கைங்கர்யம் என்பதே பலனாக ஆகிறது. ஸுதுஷ்கரேண சோசேத்யோ யேந யேநஷ்டஹேதுநா ஸ ஸ தஸ்யாஹமேவேதி சரமச்லோக ஸங்க்ரஹ: - “யார் ஒருவன் தன்னால் இயற்றமுடியாமல் உள்ளதாகிய இஷ்டமான பலனை அளிக்கவல்ல உபாயம் குறித்து (அவற்றை இயற்ற முடியவில்லையே என்று எண்ணி) வருந்துகிறானோ, அவனுக்கு அந்த உபாயம் நானே ஆவேன்” என்பதே சரமச்லோகத்தின் சுருக்கமான பொருள் ஆகும். பாவாபாவௌ ந தர்மாணாம் ப்ரபத்தேரங்கமிஷ்யதே ஸ்வதந்த்ர சிஷ்டயா சக்யேஹா சேஷாபாவோதிகாரக: - வர்ணாச்ரம தர்மங்களைக் கைக்கொள்வதும், கைக்கொள்ளாமல் இருப்பதும் ப்ரபத்திக்கு அங்கமாக ஏற்கப்படுவதில்லை. ஸர்வேச்வரனின் ஆணை என்பதால் செய்யவேண்டிய தர்மங்களில் அவன் ஆசை கொள்கிறான். அவனால் செய்ய இயலாமல் உள்ள கர்மங்கள் ப்ரபத்திக்கு அவசியமான ஆகிஞ்சந்யம் என்றாகிறது. க்ரத்வநங்கதயா யே து ததாநீம் அநநுஷ்டிதா: ஸ்வகாலே ஸ்வவிதேரேவ கார்யஸ்தே தத்வதத்ர ந: - யஜ்ஞங்களை இயற்றும்போது தர்ச பூர்ணாமாசங்கள் விதிக்கப்படுவதில்லை; ஆகவே அவை அப்போது செய்யப்படுவதில்லை. ஆனால் அவை செய்யப்படவேண்டிய காலங்களில் செய்யப்படுகின்றன. இதே போன்று நித்ய நைமித்திக கர்மங்கள் ப்ரபத்தியின் அங்கங்களாக இல்லாத காரணத்தால், அவை ப்ரபத்தியின்போது செய்யப்படுவதில்லை.