Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 31)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

“ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்பதன் விளக்கம்

மூலம் - “பரித்யஜ்ய” என்கிற இது அநுவாதம் என்பார்க்கு அதிகாரம் சொல்லுகிறதென்று தாத்பர்யம். விதியென்பார்க்கு ப்ரபத்தியாகிற உபாயத்தினுடைய நைரபேக்ஷ்யாதிகளைச் சொல்லுகிறது என்று தாத்பர்யம். இப்படி “பரித்யஜ்ய” என்கிறவிடத்தில் அதிகாரம் விவக்ஷிதமானால் “மாமேகம்” என்கிறவிடத்திலே நைரபேக்ஷ்யம் அநுஸந்திக்க ப்ராப்தம். “பரித்யஜ்ய” என்று நைரபேக்ஷ்யம் விவக்ஷிதமானால் “மா சுச:” என்கிற சோக நிஷேதத்தாலே அகிஞ்சனனாய் நிற்கிற நிலை தோற்றுகையாலே அதிகாரமும் அர்த்தஸித்தமாகக் கடவது. அப்போது ப்ரக்ருதேபாஸநந்யாயாத் ததங்காநாமுபஸ்திதௌ அந்யேஷாம் சைததங்கத்வ த்யாகோத்ர ப்ரதிபாத்யதே ஏகசப்தம் ஸாத்த்விகத்யாகத்தாலே தன் பக்கலில் பராதீந கர்த்ருத்வாதிகளை விவக்ஷித்தல், பலோபாயைக்யத்தைச் சொல்லுதல், ஏகமே ஸர்வோபாயஸ்தாநத்திலே நிற்கிற நிலையைக் காட்டுதல் செய்யக்கடவது.

– ”பரித்யஜ்ய” என்பது அநுவாதம் போன்று முன்பு கூறியதே மீண்டும் கூறப்பட்டது என்று சிலர் உரைக்கலாம்; ஆனால் இது ப்ரபத்திக்கான அதிகாரத்தைக் கூறுகிறது. இந்தப் பதம் என்ன செய்யவேண்டும் என்னும் விதியைக் குறிக்கிறது என்றால், ப்ரபத்தி என்னும் உபாயத்திற்கு வேறு ஏதும் அவசியம் இல்லை என்று தேறுகிறது. ஆக “பரித்யஜ்ய” என்னும் பதம் மூலம் அதிகாரம் உரைக்கப்பட்டால், “மாமேகம்” என்னும் பதங்கள் பகவான் அல்லாமல் மோக்ஷத்திற்கு வேறு ஏதும் அவசியம் இல்லை என்றாகும். “பரித்யஜ்ய” என்பதன் மூலம் ப்ரபத்திக்கு மற்ற ஏதும் அவசியம் இல்லை என்று உரைக்கப்பட்டால், “மா சுச:” என்பது மற்ற உபாயங்கள் இல்லாமல் கதியற்று நிற்பவனுடைய சோகத்தைத் தீர்த்தல் என்பதை உரைப்பதாகிறது. அப்போது - ப்ரக்ருதேபாஸநந்யாயாத் ததங்காநாமுபஸ்திதௌ அந்யேஷாம் சைததங்கத்வ த்யாகோத்ர ப்ரதிபாத்யதே – இதுவரை கூறப்பட்ட பக்தியோக நியாயம் காரணமாக, அந்தப் பக்தியோகத்தின் அங்கங்கள் நினைவில் உண்டாகும்போது, அந்த அங்கங்கள் அல்லாமல் உள்ள மற்ற தர்மங்களில், ப்ரபத்திக்கு அங்கம் என்னும் புத்தியைக் கைவிடுதல் என்பது “பரித்யஜ்ய” என்பதால் விதிக்கப்படுகிறது – என்று கொள்ளவேண்டும். “மாம் ஏகம்” என்பதில் உள்ள “ஏக” சப்தமானது - ஸாத்விகத்யாகத்தில், தான் செய்யும் அனைத்தும் ஸர்வேச்வரனின் வசப்பட்டே உள்ளது என்பதும், ப்ரபத்தியில் உபாயமும் பலனும் ஸர்வேச்வரன் என்னும் ஒன்று மட்டுமே என்பதும், மற்ற அனைத்து உபாயங்களின் இடத்தில் ப்ரபத்தி மட்டுமே உள்ளது என்பதும் – கூறுவதாக உள்ளது.