Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 30)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

“ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்பதன் விளக்கம்

மூலம் – “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்கிறவிடத்தில் ப்ரதம யோஜனையில் புத்தி விசேஷரூபமான ஸாத்விகத்யாகம் சொல்லுகிறதென்று பாஷ்யகாரர் அருளிச்செய்தார். இப்புத்தி விசேஷம் ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனுக்கு ப்ரபத்யநுஷ்டாந காலத்திலும் பின்பு ஸ்வயம்ப்ரயோஜநமாய் உபாயத்தோடு துவக்கற்ற உத்தரக்ருத்யத்திலும் உபஜீவ்யம். த்விதீய யோஜனையில் அல்பசக்தியாய், விளம்பாக்ஷமனானவனுக்கு துஷ்கரமாய், சிரகால ஸாத்யமான உபாயாந்தரத்தைப் பார்த்து சோகம் பிறக்க அவனுடைய சோகாபநோதநார்த்தமாக ஸுகரமாய ஸக்ருத் கர்த்தவ்யமுமான உபாயாந்தரத்தை விதித்ததாக்கி, “நீ உபாயாந்தரத்தில் அலையவேண்டா” என்கிறது என்று அருளிச் செய்தார். இப் ப்ரபத்யநுஷ்டாநத்துக்குப் பூர்வாவஸ்தையில் உபாயாந்தராநந்வயம் தைவாத் ஆகதமாய் ப்ரபத்யதிகாரத்திலே சொருகக் கடவது. உத்தராவஸ்தையில் உபாயாந்தராநந்வயம் சாஸ்த்ரத்வாத் ஆகதமாய் இப் ப்ரபத்தியினுடைய நைரபேக்ஷ்யத்திலே நிற்கக் கடவது.

– கீதையில் (18-66) - ஸர்வதர்மாந் பரித்யஜ்ய – என்னும் ச்லோகத்திற்கான பாஷ்யம் இடும்போது எம்பெருமானார் இரண்டுவிதமான அருளிச்செய்தார். முதலில், “அனைத்து தர்மங்களையும் கைவிடுதல்” என்பதற்கு அனைத்து கர்மங்களையும் தனது பலனுக்காக, தானே செய்கிறோம் என்னும் எண்ணத்தைக் கைவிடுதல் ஆகும் என்ற கருத்தில் பொருள் அருளிச்செய்தார். அதாவது ஸாத்விகத்யாகம் என்பதை உரைத்தார். இப்படிப்பட்ட சிந்தனை யாருக்கு அவசியம் என்றால் ப்ரபத்தியை நேரடியான உபாயம் என்று கொண்டவனுக்கு ஆகும்; மேலும் ப்ரபத்தியைக் கைக்கொள்ளும்போதும், ப்ரபத்திக்குப் பின்னரும் செய்யப்படும் எந்தவிதமான கர்மங்களும் மற்ற உபாயங்களுடன் தொடர்புள்ளவையாக இருத்தல் கூடாது. இரண்டாவது வ்யாக்யானத்தில், “அனைத்து தர்மங்களையும் கைவிடுதல்” என்பதற்கு – தனக்கு முக்தி உண்டாவதற்கு ஏற்படும் காலதாமதத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாத ஒருவன், சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டுள்ள கர்மங்களைக் கண்டும் அவற்றின் விதிகளைக் கண்டும், தன்னால் அவற்றை இயற்ற இயலாத நிலை கண்டு மலைத்து, சோகம் கொள்கிறான். இதனைக் கண்ட ஸர்வேச்வரன், அவனுடைய சோகத்தைப் போக்கும்விதமாக, மிகவும் எளிதாகக் கைக்கொள்ளக் கூடியதும், ஒருமுறை அநுஷ்டித்தாலே போதுமானதும் ஆகிய உபாயத்தைக் கூறும்விதமாக, “நீ மற்ற உபாயங்களை நாடவேண்டாம்” என்றான். ப்ரபந்நன் ஒருவன், ப்ரபத்தி அநுஷ்டிக்கும் தகுதியைப் பெறுவதற்கு, ப்ரபத்தி அநுஷ்டிக்கும் முன்பாக மற்ற உபாயங்களில் ஈடுபடாமல் இருத்தல்வேண்டும் என்றும், இந்த நிலை தனக்கு ஸர்வேச்வரனின் கடாக்ஷத்தால் தானே கிட்டும் என்றும் உணரவேண்டும். ப்ரபத்திக்குப் பின்னர், மற்ற உபாயங்களில் ஈடுபடுதல் என்பதை சாஸ்த்ரங்களே தடை செய்வதையும், இதனால் ப்ரபத்திக்கு மற்ற உபாயம் ஏதும் அவசியம் இல்லை என்றும் அறியலாம்.