Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 29)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
தாமஸ, ராஜஸ, ஸாத்விக த்யாகங்கள்
மூலம் – இப்பகவத்ப்ரீதி ப்ரயோஜநமாக அநுஷ்டிக்கிறவிடத்திலே இப் ப்ரீதிக்கு மோக்ஷமும் பலமாகக் கோலாதே பூர்வப்ரபத்தியாலே பிறந்த பரமகாருணிகன் ப்ரஸாதத்தாலே மோக்ஷம் ஸித்தமென்று நினைத்து முக்தனுடைய கைங்கர்யம் போலவும், அரோகனுடைய பால்வார்த்துண்ணுகை போலவும் அநுஷ்டிக்கை ஸாத்விக த்யாகத்தின் எல்லை நிலமாகக் கடவது. இது பசித்து உண்பார் மாத்ரம். இங்ஙனல்லாதபோது ஓட்டத்துக்கு அப்பம் தின்பார் மாத்ரம்.
– இதனைக் காட்டிலும் உயர்ந்த நிலை என்னவென்றால், ஸர்வேச்வரனின் மகிழ்வு என்பதையே பலனாகக் கொண்டுக் கர்மங்களைச் செய்யும்போது, அந்த மகிழ்வு காரணமாக்க் கிட்டுகின்ற மோக்ஷத்தையும் பெரிதாக எண்ணாமல், அந்த மோக்ஷம் என்பது தான் முன்பு செய்த ப்ரபத்தியால் உண்டான, பரமகாருணிகனான ஸர்வேச்வரனுடைய அநுக்ரஹத்தால் கிட்டும் என்று உறுதி செய்யவேண்டும்; மேலும் முக்தி பெற்ற ஒருவனுடைய கைங்கர்யம் போன்று, “கைங்கர்யம் செய்தல்” என்பதே கைங்கர்யத்தின் பலன் என்று எண்ணியபடி செய்யவேண்டும். இதுவே ஸாத்விக த்யாகத்தின் எல்லையாகும். இதுவே பசித்து உண்ணக்கூடியவர்கள் நிலை போன்று ஆகும். இப்படி இல்லாதபோது வெறும் பந்தயத்துக்காக அப்பம் உண்ணுவது போன்றதாகும் (பசித்து உண்டால், உணவின் சுவையை அனுபவித்து உண்பர் என்று கருத்து).