Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 28)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

தாமஸ, ராஜஸ, ஸாத்விக த்யாகங்கள்

மூலம் – தன் அதிகாராநுரூபமாகத் தவிர வேண்டுமவை தவிர்த்து செய்ய வேண்டுமவை செய்யுமிடத்தில் நான் ஸ்வதந்த்ரனாய்ச் செய்கிறேனென்றும், எனக்கு இக்கர்மம் சேஷபூதமென்றும், எனக்கு இன்ன பலத்துக்கு இதுதானே ஸாதநமென்றும் பிறக்கும் நினைவை மாற்றி ஸர்வேச்வரன் செய்விக்க அவனுக்குச் சேஷமான கைங்கர்யத்தை அவனுக்கப்பே ப்ரயோஜநமாக அநுஸந்தித்து அநுஷ்டிக்கை ஸாத்விக த்யாகமென்னும் இடத்தை கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதே அர்ஜுந ஸங்கம் த்யக்த்வா பலஞ்சைவ ஸ த்யாக: ஸாத்த்விகோ மத: என்று அருளிச்செய்தான்.

– தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்டுச் செய்யவேண்டியவற்றைச் செய்தும், செய்யவேண்டாதவற்றைச் செய்யாமல் விடுத்தும், கர்மங்களைச் செய்யும்போது “நான் இவற்றை ஸ்வதந்த்ரமாகச் செய்கிரேண்” என்று எண்ணாமல் செய்தும், தான் செயும் கர்மம் தனக்கு வசப்பட்டது என்று எண்ணாமலும், “எனக்கு இன்ன பலத்துக்குச் சாதனமாக இந்தக் கர்மமே உள்ளது” என்று எண்ணாமலும், தான் செய்கின்ற எந்த ஒரு கர்மத்தையும் ஸர்வேச்வரன் செய்விக்க அவனுக்கு வசப்பட்டுள்ள அவனுடைய கைங்கர்யம் என்பதை அவனுடைய உகப்பு என்பதே பலன் என்னும் எண்ணத்துடன் செய்தல் என்பதே ஸாத்விக த்யாகம் ஆகும்.இதனைப் பகவான் கீதையில் (18-9) -கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதே அர்ஜுந ஸங்கம் த்யக்த்வா பலஞ்சைவ ஸ த்யாக: ஸாத்த்விகோ மத: - அர்ஜுனா! சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட எந்தக் கர்மம் கட்டாயம் செய்யப்படவேண்டும் என்று கருதி, பயனையும் பற்றுதலையும் விடுத்துச் செய்யப்படுகிறதோ, அதுவே ஸாத்விக த்யாகம் எனப்படும் – என்றான்.