Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 22)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
நாராயணைக நிஷ்டஸ்ய என்னும் ச்லோகத்தின் பொருள்
மூலம் – நிர்மால்யம் பக்ஷயித்வைவம் உச்சிஷ்டமகுரோரபி மாஸம் பயோவ்ரதோ பூத்வா ஜபந்நஷ்டாக்ஷரம் ஸதா ப்ரஹ்மகூர்ச்சம் தத: பீத்வா பூதோ பவதி பாவந: என்று பகவத் தர்மநிஷ்டனுக்கு ஸமயாசாரம் சொல்லுகிற ஸநத்குமார ஸம்ஹிதாவசநத்தை ஆகமப்ராமாண்யத்திலே ஆளவந்தார் உதாஹரித்தருளினார். ஆகையாலே “போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே” என்றதுவும் குருவிஷயமாமித்தனை. பொதுவானாலும் பகவத்ஸங்கீர்த்தனபரர் தேச காலாதி வைகுண்யத்தாலே ஊனவ்ருத்திகளுமாய் ஊனகாரகர்களுமாய் இருந்தார்களேயாகிலும் தாங்கள் அமுது செய்த சேடம் தருவராகில் புனிதமாமென்றதித்தனை. இதில் சேஷசப்தம் அந்நசேஷ: கிம் க்ரியதாம்? இஷ்டை: ஸஹ புஜ்யதாம் இத்யாதிகளில் ந்யாயத்தாலே பாண்டஸ்த விஷயமானால் விரோதமில்லை. உச்சிஷ்ட சப்தம் தானும் ச்ருத்யாதிகளிலே பக்தசிஷ்டமாய்ப் பாகபாத்ரஸ்தமானதிலும் ப்ரயுக்தம். பரித்யஜேதர்த்தகாமௌ யௌ ஸ்யாதாம் தர்மவர்ஜிதௌ தர்மம் சாப்யஸுகோதர்கம் லோகஸம்ருஷ்டமேவ ச என்று மந்வாதிகள் வ்யவஸ்தை பண்ணினார்கள்.
– பகவத் தர்மத்தைப் பின்பற்றும் ஒருவனுக்குரிய விதிமுறை என்று ஸநத்குமார ஸம்ஹிதையின் கூறப்பட்ட வரிகளை ஸ்வாமி ஆளவந்தார் தன்னுடைய ஆகமப்ரமாண்யத்தில் மேற்கோள் காட்டுகிறார். அந்த வரியானது - நிர்மால்யம் பக்ஷயித்வைவம் உச்சிஷ்டமகுரோரபி மாஸம் பயோவ்ரதோ பூத்வா ஜபந்நஷ்டாக்ஷரம் ஸதா ப்ரஹ்மகூர்ச்சம் தத: பீத்வா பூதோ பவதி பாவந: - மற்ற தேவதைகளுக்கு நிவேதனம் செய்தவற்றையும், குரு இல்லாத ஒருவன் உட்கொண்டு வைத்த மீதத்தையும் உட்கொள்ளும் ஒருவன், ஒரு மாதம் வெறும் பால் மட்டுமே பருகி அஷ்டாக்ஷரத்தை எப்போதும் ஜபித்து ப்ரஹ்ம கூர்ச்ச பஞ்சகவ்யத்தை உட்கொண்ட பின்னரே தூய்மை அடைகிறான் – என்பதாகும். ஆகவே திருமாலையில் (42) - போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே – பாகவதர்கள் தாங்கள் உட்கொண்ட மீதத்தை அளித்தால் உடனே சுத்தம் கொடுக்கும் – என்ற வரியும் குருவுக்கு மட்டுமே பொருந்தும் என்று கருத்து. இந்த பாசுர வரியானது பொதுவாக எல்லாருக்கும் பொருந்தும் என்று கூறினாலும் – பரமபக்தர்கள் காலம், இருப்பிடம் போன்ற பலவிதமனா சூழ்நிலை காரணமாக, தங்களுக்கு விதிக்கப்பட்ட கர்மங்களைக் காட்டிலும் தாழ்ந்த செயலைச் செய்ய நேரிட்டாலும் அல்லது மற்றவர்களை அவ்விதம் செய்ய வைத்தாலும், அவர்கள் அளிக்கும் மீதமான உணவு என்னைப் பரிசுத்தமாக்கும் – என்று கொள்ளவேண்டும். அந்தப் பாசுர வரியில் உள்ள “சேஷ” என்னும் பதம், அந்நசேஷ: கிம் க்ரியதாம்? இஷ்டை: ஸஹ புஜ்யதாம் – ச்ரார்த்தத்தில் மீதமான உணவை என்ன செய்யவேண்டும் என்று கேட்க, அதனைத் தனக்கு இஷ்டமானவர்களுடன் உண்ணவேண்டும் – என்று கூறப்பட்ட பொருளையே அளிக்கிறது. ”உச்சிஷ்ட” என்னும் பதம், ச்ருதிகளில் சமைத்த பாத்திரத்தில் மீதம் உள்ள உணவையே குறிக்கிறது. மனு முதலாவர்கள் (மனு ஸ்ம்ருதி: 4-176) - பரித்யஜேதர்த்தகாமௌ யௌ ஸ்யாதாம் தர்மவர்ஜிதௌ தர்மம் சாப்யஸுகோதர்கம் லோகஸம்ருஷ்டமேவ ச – தர்மத்தை விட்டு அகன்று சென்ற வஸ்து மட்டும் காமம் ஆகியவற்றை விடவேண்டும்; துக்கம் அளிக்கவல்லதாகவும், உலகினரால் வெறுக்கப்படுவதாகவும் உள்ள தர்மத்தையும் விடவேண்டும் – என்றது காண்க.