Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 20)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

நாராயணைக நிஷ்டஸ்ய என்னும் ச்லோகத்தின் பொருள்

மூலம் – “தத் பாதாம்ப்வதுலம் தீர்த்தம்” என்றதுவும் ப்ராப்த விஷயத்திலே குணாதிக்யம் சொல்லுகிறது. பாதோதகம் தீர்த்தமாகச் சொன்ன விஷயத்தில் நாராயணைக நிஷ்டத்வம் உண்டாயிற்றாகில் அது ஸர்வாதிக தீர்த்தமென்றபடி; அல்லது பாகவதனுடைய பாதத்திலே யாத்ருச்சிகமாகப்பட்ட நிர்மால்ய ஜலாதிகளும் அதுலமான தீர்த்தமென்றபடியன்று.

தத் பாதாம்ப்வதுலம் தீர்த்தம் – அந்த அடியாரின் திருவடிகளுடன் தொடர்பு கொண்ட நீர் புண்யதீர்த்தமாகிறது – என்ற வரியின் மூலம், சரியான நிலையில் மட்டுமே அத்தகைய புண்ணியத்தன்மை ஏற்படும் என்று அறியவேண்டும். அதாவது ஒருவன் நாராயணன் விஷத்தில் மட்டுமே மிகுந்த நிஷ்டையுடன் கூடியவனாக இருந்தால் மட்டுமே, அவனது பாதங்களுடன் தொடர்பு கொண்ட நீரானது, புண்ணிய தீர்த்தங்களைக் காட்டிலும் மேன்மையானதாக ஆகிறது; அவனுடைய பாதங்களில் தற்செயலாக வந்து பட்ட நீரானது அவ்விதம் ஆவதில்லை என்று கருத்து.