Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 19)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
நாராயணைக நிஷ்டஸ்ய என்னும் ச்லோகத்தின் பொருள்
மூலம் – “தத் த்யாநம் யந்நிரீக்ஷணம்” என்றது நிஷித்த ந்ருத்தாதி தர்சநத்தைச் சொன்னபடியன்று. கைங்கர்யார்த்தமாக ப்ரவர்த்திக்கும்போது இவன் கண்ணுக்கு இலக்கான பதார்த்தங்கள் எல்லாம் அஹம் ஹரி: ஸர்வாமிதம் ஜநார்த்தந: இத்யாதிகளிற்படியே “நிற்கின்றதெல்லாம் நெடுமால்” என்று ப்ராஹ்மாத்மகமாய்த் தோன்றும் ப்ரகாரத்தைத் சொன்னபடி.
தத் த்யாநம் யந்நிரீக்ஷணம் – அவன் எதனைக் காண்கிறானோ அது த்யானம் ஆகும் – என்ற வாக்கியம் மூலம் சாஸ்த்ரங்களால் தடுக்கப்பட்ட நாட்டியம் போன்றவற்றைப் பார்த்தல் முதலான செயல்கள் கூறப்படவில்லை. இந்த வரியின் மூலம் கூறப்பட்டது என்னவென்றால் இவன் கைங்கர்யம் செய்யும்போது, இவன் கண்களால் காணப்படும் பொருள்கள் எல்லாம், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-22-87) - அஹம் ஹரி: ஸர்வாமிதம் ஜநார்த்தந: - நான் ஸ்ரீஹரி, இவை அனைத்தும் ஜநார்த்தனன் – என்றுள்ள வரிக்கு எற்றபடியும், நான்முகன் திருவந்தாதி (54) - நிற்கின்றதெல்லாம் நெடுமால் – கண் முன்னர் நிற்பது அனைத்தும் ஸர்வேச்வரன் – என்ற வரிக்கு ஏற்றபடியும், இவனுடைய கண்களில் அனைத்துப் பொருள்களும் ப்ரஹ்மத்தை அந்தராத்மாகவாகக் கொண்டதாகவே புலப்படுகிறது.