Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 17)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

நாராயணைக நிஷ்டஸ்ய என்னும் ச்லோகத்தின் பொருள்

மூலம் - மந்நிமித்தம் க்ருதம் பாபமபி தர்மாய கல்பதே என்றதுக்கும் இதுவே தாத்பர்யம். இங்ஙனல்லாதபோது அதிப்ரஸங்கம் வரும். “யா யா சேஷ்டா” என்று பாடமானாலும் அர்த்தப்ராப்த சாஸ்த்ரப்ராப்தங்கள்போலே ஸ்வபாவ ப்ராப்தங்களான நிமிஷோந்மேஷாதிகளும் ஸமர்ப்பணீயங்களாக ரஹஸ்யசாஸ்த்ர ஸித்தமாகையாலே தத் அர்ச்சநமென்னலாம். இது நிஷித்தத்தில் ப்ரஸங்கியாது. ப்ரதிஷித்தமல்லாத ஸ்வபாவ அர்த்த சாஸ்த்ரங்களிறே ஸமர்ப்பணீயங்களாக ஓதப்பட்டன. இதின் உபப்ருஹ்மணமான யத் கரோஷி யதச்நாஸி என்கிற ச்லோகத்துக்கும் இப்படி சாஸ்த்ரவிரோதமில்லாத விஷயத்திலே தாத்பர்யம். இவற்றில் சாஸ்த்ர விருத்தங்கள் வந்தால் அதிகாராநுரூபமான நைமித்திகம் நிக்ரஹசமநமான கைங்கர்யம்.

– மந்நிமித்தம் க்ருதம் பாபமபி தர்மாய கல்பதே – எனக்காகப் பாவம் செய்யப்பட்டாலும் அது தர்மமே ஆகிறது – என்ற வரியைக் காண்க. இவ்விதம் கொள்ளவில்லை என்றால், ஆபத்து நேராத காலங்களில் செய்யப்படும் பாவங்களும் தர்மம் என்றே ஆகிவிடும். மேலே உள்ள ச்லோகத்தை “யா யா வ்ருத்தி” என்பதற்குப் பதிலாக “யா யா சேஷ்டா” என்று கொண்டால், சாஸ்த்ரங்களால் இந்த உடலை உயிருடன் தக்க வைப்பதற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயங்கள் போன்று, ”சேஷ்டா” என்னும் பதமானது இயற்கையாகவே நடைபெறுவதான கண் இமைகளை மூடுவதும் திறப்பதும் போன்ற செயல்களைக் குறிக்கிறது என்றாகிறது; இவை சாஸ்த்ரங்களால் ஏற்கப்படுவதால், இவற்றை பகவானுக்கு அர்ப்பணித்தால் இவையும் பகவத் ஆராதனமாகவே கொள்ளப்படும். இது போன்ற செயல்கள் சாஸ்த்ரங்களால் தடுக்கப்பட்ட செயல்கள் ஆகாது. ஆக எவை தடுக்கப்படாத செயல்களோ, எவை ஒருவனுக்குத் தகுதியாக உள்ளனவோ அவை மட்டுமே பகவானுக்கு அர்ப்பணம் செய்யக் கூடிய ஆராதனைகளாகும். கீதையில் (9-27) - யத் கரோஷி யதச்நாஸி – நீ எதனைச் செய்கிறாயோ அதனை எனக்கு அளிப்பாயாக – என்ற ச்லோகத்தில் இது போன்று சாஸ்த்ரங்களுக்கு முரண்பாடு இல்லாத செயல்கள் மட்டுமே கூறப்படுகிறது. சாஸ்த்ரங்களுக்கு முரணான செயல்கள் ஏதேனும் செய்தால், அதற்கான பிராயச்சித்தம் என்பது தனது அதிகார வரம்பிற்குள் அடங்கியபடி செய்யப்படவேண்டும்.