Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 15)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
மூன்றுவகையான பாகவதர்கள்
மூலம் – இப்பகவத்பரரில் ஐகாந்த்யம் பகவத்யேஷாம் ஸமாநமதிகாரிணாம் என்கிறபடியே தேவதாந்தர ஸ்பர்சமற்றவர்கள் ஏகாந்திகள். அவர்களில் வைத்துக் கொண்டு ஜ்ஞாநீ து பரமைகாந்தீ என்கிறபடியே ப்ரயோஜனாந்தர ஸ்பர்சமுமற்றவர்கள் பரமைகாந்திகள். அவர்களில் வைத்துக் கொண்டு விளம்பாக்ஷமராய் ஸர்வசக்தியான சேஷி பக்கலிலே பரந்யாஸம் பண்ணி, செய்கிற கைங்கர்யத்துக்கு ப்ரயோஜநாந்தரம் கோலுகை “பொலிசைக்கு இடுவார் மாத்ரம்” என்கிற ச்ருத்யர்த்தத்தைத் தெளிந்து, இக்கைங்கர்யத்துக்கு மோக்ஷமும் ப்ரயோஜநமென்று கோலாதே கைங்கர்யைக ப்ரயோஜநராயிருக்குமவர்களுடைய பரமைகாந்தித்வம் ஷோடச வர்ண ஸ்வர்ணத்தோடு ஒக்கும். இம்மாற்று அறியும் மஹர்ஷிகள் மஹாபாரதாதிகளிலே இப் பரமைகாந்திகளுடைய மாஹாத்ம்யத்தைப் ப்ரபஞ்சித்தார்கள்.
– பாகவதர்களில் கீதார்த்த ஸங்க்ரஹம் (28) - ஐகாந்த்யம் பகவத்யேஷாம் ஸமாநமதிகாரிணாம் – பகவானிடம் மட்டுமே பக்தி என்பது ஆர்த்தன் அல்லாத மற்ற மூன்றுவகையினருக்கும் சமம் – என்பதற்கு ஏற்ப, மற்ற தேவதைகளை ஆராதிக்காமல் இருப்பவர்கள் ஏகாந்திகள் ஆவர். இவர்களில், கீதார்த்த ஸங்க்ரஹம் (29) – ஜ்ஞாநீ து பரமைகாந்தீ – இவர்களில் ஞானியாக உள்ளவன் பரமைகாந்தி ஆவான் – என்பதற்கு ஏற்ப, பகவானிடம் எந்தவிதமான பயனையும் எதிர்பாராமல் உள்ளவன் பரமைகாந்தி ஆவான். இவர்களில், அனைத்து சக்தியும் கொண்டவனும் அனைவருக்கும் எஜமானனாக உள்ளவனும் ஆகிய ஸர்வேச்வரனின் திருவடிகளில் பரந்யாஸம் செய்து, அதன் பின்னர் தான் செய்யும் கைங்கர்யத்துக்கு மோக்ஷம் என்ற பலனையும் எதிர்பார்க்காமல், பகவானிடம் பலனை எதிர்பார்ப்பவர்கள் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் போன்றே ஆவர் என்பதை ச்ருதிகள் கூறுவதை உணர்ந்து, தாங்கள் செய்யும் கைங்கர்யம் என்பதே கைங்கர்யத்தின் பலன் என்று எண்ணியபடி உள்ளவர்கள் பதினாறு கட்டி வராகன் (தூய்மையான தங்கம்) போன்றவர்கள் ஆவர். இதனை உணர்ந்த மஹரிஷிகள் மஹாபாரதம் போன்றவற்றில் இப்படிப்பட்ட பரமைகாந்திகளின் மாஹாத்ம்யத்தை அருளிச் செய்தனர்.