Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 14)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
சரீரம் மற்றும் மனம் காரணமாக ஏற்படும் ஜாதிகளின் பேதங்கள்
மூலம் – தம: சூத்ரே ரஜ: க்ஷத்ரே ப்ராஹ்மணே ஸத்த்வமுத்தமம் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஸத்த்வாதி குண தாரதம்யவத்தான சரீரத்தில் ப்ராஹ்மண்யாதிகள் வேறே; மனஸ்ஸில் ஸத்த்வாதி குணவிசேஷமடியாக ஸர்வ ஜாதிகளிலும் ப்ரசம்ஸா வாக்யங்களாலே சொல்லப்பட்ட ப்ராஹ்மண்யாதிகளும் வேறே. இவற்றில் சாரீர குண விசேஷமடியாக வ்யவஸ்திதங்களான சாரீர ஜாதிவிசேஷங்கள் உத்பத்தி ஸித்தங்களாய் மரணாந்தமாக ஸ்திரங்களாயிருக்கும். மானஸமான ஸத்த்வாதி குணோந்மேஷமடியாகச் சொல்லுகிற ப்ராஹ்மண்யாதிகள் ஸர்வஜாதிகளுக்கும் ஸம்பாவிதங்களாய், ப்ரஹ்லாதிகளுக்கு ஜந்மஸித்தங்களாய், நீக்கியுள்ளார்க்கு ஆசார்ய ஸம்பந்தாதி ஹேதுக்களாலே ஆகந்துகங்களாயிருக்கும். இதில் சாரீர ஜாதி விசேஷங்களையிட்டுச் சில சாஸ்த்ரங்கள் நியதங்களாம். மானஸமான ப்ராஹ்மண்யாதிகளையிட்டு அவற்றுக்கு அநுரூபமான புருஷார்த்த விஷயங்களும் ப்ரசம்ஸாதிகளும் ஸர்வஜாதியிலும் ஸம்பாவிதங்களாம். இதில் ப்ராஹ்மணாதிகள் பக்கலிலே மாநஸமான விபரீதாகாரங்கள் வந்தால் சம தமாதி போக்யமாக சாஸ்த்ர ஸித்தமான ஜந்மத்திலே பிறந்து தப்பினானென்று மிகவும் நிந்தை நடக்கும். ஜாத்யந்தரங்களிலே பிறந்து குணோத்தரனாய்ப் போந்தானாகில் ஏதை: ஸமேத: சூத்ரோ அபி வார்த்தகே மானமர்ஹதி இத்யாதிகளிற்படியே ப்ரசம்ஸை மிகவும் நடக்கும். இவற்றில் சாரீரமாயும் மாநஸமாயும் வரும் உத்கர்ஷம் கர்வ ஹேதுவாமாகில் அநர்த்தகரமாம். இவ்விரண்டு வழியாலுமுள்ள அபகர்ஷம் “குலங்களாய ஈரிரண்டில்” என்கிற பாட்டிலும், ஜதித்வாஹம் வம்சே என்கிற ச்லோகத்திலும்சொல்லுகிறபடியே தான் நின்ற நிலை தெளிந்து கார்பண்யத்தை விளைத்து அகிஞ்சநாதிகாரமான உபாய விசேஷத்திலே மூட்டுமாகில் புருஷார்த்த காரணமாகையாலே ச்லாக்யமாம். இப்படிக்கு ஜாதி வ்யவஸ்தையும் ஜாத்யநுரூபமான வ்ருத்த வ்யவஸ்தையும் உண்டானாலும் ஸர்வருக்கும் பாகவதத்வ நிபந்தனமாக முன்பு ஸமர்ப்பித்த உத்தேச்யத்வ ப்ரதிபத்திக்கு விரோதமில்லை.
– மஹாபாரதம் ஆச்வமேதிகபர்வம் (40-11) - தம: சூத்ரே ரஜ: க்ஷத்ரே ப்ராஹ்மணே ஸத்த்வமுத்தமம் – சூத்ரனிடம் மிகுதியான தமோ குணம், க்ஷத்ரியனிடம் மிகுதியான ரஜோ குணம், அந்தணனிடம் மிகுந்த ஸத்த்வ குணம் காணப்படும் – என்பது போன்ற வரிகள் காண்க. இது போன்ற வாக்கியங்களில் கூறப்படும் ஸத்த்வம் முதலான சரீரத்தில் காணப்படும் குணங்களின் அடிப்படையில் அந்தணன் போன்றதான பிரிவுகள் என்பது வேறு; இது போன்றுள்ள ஒரு சில வாக்கியங்களில் கூறப்படும் ஸத்த்வம் முதலான மனதில் காணப்படும் குணங்களின் அடிப்படையில் அந்தணன் போன்றதான பிரிவுகள் என்பது வேறு என்று அறியவேண்டும். இவற்றில் சரீரத்தின் அடிப்படையில் உண்டான குணங்களின் காரணமாக ஏற்படும் ஜாதிவிசேஷங்கள் பிறப்பு தொடங்கி, மரணம் முடிய நீடிக்கும். அந்தணனுக்கே உரியதும், மனதில் உண்டாவதும் ஆகிய ஸத்த்வகுணம் என்பது அனைத்து ஜாதிகளுக்கும் உண்டாகலாம். இதனை ப்ரஹ்லாதன் போன்றவர்களுக்கு பிறப்பிலேயே இருந்ததைக் காணலாம். ஒரு சிலருக்கு ஆசார்ய ஸம்பந்தம் போன்ற சில காரணங்களால் சிறிது காலம் கழித்து உண்டாகலாம். சரீர குண வேறுபாடுகள் காரணமாக உண்டான ஜாதியின் அடிப்படையில், ஒரு சில சாஸ்த்ரங்கள் ஒரு சிலருக்கு மட்டுமே விதிக்கப்படுகின்றன. மனதில் உண்டாகின்ற அந்தணனின் தன்மையான ஸத்த்வம் போன்றவற்றால் உண்டாகவல்ல புருஷார்த்தம் குறித்த சிந்தனை மற்றும் அவற்றுக்கான உபாயங்களை நாடுதல் போன்றவை அனைத்து ஜாதிகளிலும் காணப்படலாம். அந்தண ஜாதியில் பிறந்து, அவனுடைய மனதில் விபரீதமான எண்ணங்கள் உண்டானால், “மனதை அடக்கவல்ல ஜாதியில் பிறந்து சாஸ்த்ரங்களுக்கு ஏற்றபடி நடக்கவேண்டிய இவன், இப்படிப் பிறந்தானே”, என்று அனைவரும் பழிப்பர். ஆனால் அந்தணன் அல்லாத ஜாதியில் பிறந்த ஒருவன் உயர்ந்த குணங்களுடன் உள்ளான் என்றால், யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி (1-110) - ஏதை: ஸமேத: சூத்ரோ அபி வார்த்தகே மானமர்ஹதி – வித்யை, கர்மம், வயது, பந்து, செல்வம் என்றுள்ள வரிசைப்படி கூடியுள்ள சூத்ரனும் கௌரவிக்கப்படத் தக்கவன் – என்பதற்கு ஏற்ப, கொண்டாடப்படுவான். ஒருவனுக்கு சரீரம் மற்றும் மனம் ஆகியவை காரணமாக உண்டாகும் குணங்களால் கர்வம் உண்டானால், அது நாசத்தையே ஏற்படுத்தும். இந்த இரண்டுவிதங்களாலும் உண்டாகும் ஜாதி தாழ்வு குறித்து திருச்சந்தவிருத்தம் (90) - குலங்களாய ஈரிரண்டில் – தர்மங்களைச் செய்ய ஏற்றதான அந்தணன் உள்ளிட்ட நான்கு ஜாதியில் நான் பிறக்கவில்லை – என்றும், ஸ்தோத்ரரத்னம் (61) - ஜதித்வாஹம் வம்சே – உயர்ந்த குலத்தில் பிறந்த நான், பாவங்களைச் செய்தபடி உள்ளேனே – என்றும் கூறுவதைக் காண்க. இந்த நிலை குறித்து ஒருவன் வருத்தம் கொள்ளும்போது, அவனுக்குத் தனது தாழ்ந்த நிலையைக் குறித்து இரக்கம் உண்டாகி, தனது நிலைக்கு ஏற்றபடியான உபாயத்தைத் தேடிக் கொள்ளக்கூடும்; இத்தகைய வருத்தம் என்பது போற்றத்தக்கதாக உள்ளது. இப்படியாக எத்தனை விதிகள் இருந்தாலும், “பகவத் பக்தர்” என்னும் முறையில் அளிக்கப்படவேண்டிய மரியாதையை யாராக இருந்தாலும் பெறுவதில் தடை ஏதும் இல்லை. சரீரம் மற்றும் மனம் காரணமாக ஏற்படும் ஜாதிகளின் பேதங்கள்