Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 11)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
வித்யைகளை அறிவதில் உள்ள வரையறை
மூலம் – விஷ்ணுர்நித்யம் வித்யயா தாத ஈடய: தஸ்மாத் ஜ்ஞானம் நித்யரூபம் வரேண்யம் ப்ராப்யம் ஞானம் ப்ராஹ்மணாத் க்ஷத்ரியாத்வா வைச்யாச்சூத்ராத்வா அபி நீசாதபீக்ஷ்ணம் என்கிற ச்லோகத்தில் பகவத்ஞானம் அவச்யம் ஸம்பாதநீயமாகையாலே பூர்வபூர்வா லாபத்தில் மற்றுள்ளார் பக்கலிலும் ஜ்ஞாந மாத்ரம் விசதமாக ஸம்பாதநீயம் என்றிவ்வளவு சொல்லிற்று. இப்படியானாலும் வித்யா மந்த்ராதிகளுடைய க்ரஹணம் ப்ராஹ்மணாதி விஷயத்திலே ஆகவேணுமென்னுமிடம், சூத்ரயோநாவஹம் ஜாதோ நாத: அந்யத் வக்துமுத்ஸஹே என்ற ஸ்ரீவிதுரவாக்யத்தாலே ஸித்தம். துலாதார தர்மவ்யாதாதிகளும் தர்மஸந்தேஹம் கேட்க வந்த ப்ராஹ்மணரைத் தாங்கள் ஸம்பாவித்துத் தீர்த்த யாத்ரையிலே வழி திகைத்தாரை வழியிலே சேர்த்த மாத்ரம் அவர்களைத் தெளிவித்து விட்டார்களித்தனை; அல்லது முக்யமான ஆசார்யகம் பண்ணினார்களல்லர். இப்ரகாரங்கள் இவ்விதிஹாஸங்களிலே கண்டு கொள்வது.
விஷ்ணுர்நித்யம் வித்யயா தாத ஈடய: தஸ்மாத் ஜ்ஞானம் நித்யரூபம் வரேண்யம் – விஷ்ணு ஞானம் கொண்டு எப்போதும் துதிக்கத் தக்கவன்; ஆகவே அவன் குறித்த உயர்ந்த ஞானத்தை ஓர் அந்தணன் மூலம் பெற்றுக் கொள்ளவேண்டும்; மஹாபாரதம் சாந்திபர்வம் (323-88) - ப்ராப்யம் ஞானம் ப்ராஹ்மணாத் க்ஷத்ரியாத்வா வைச்யாச்சூத்ராத்வா அபி நீசாதபீக்ஷ்ணம் – ஞானம் என்பதை அந்தணன், க்ஷத்ரியன், வைச்யன், சூத்ரன், அதற்கும் தாழ்ந்த பிறவி கொண்டவன் என்று யாரிடமிருந்தாவது எப்போதும் ஸம்பாதித்தபடி இருக்கவேண்டும் – இது போன்ற ச்லோகங்கள் மூலம் பகவத்ஞானம் என்பது அவசியம் சம்பாதிக்கப்படவேண்டும் என்பதால், அந்தந்த வர்ணங்களில் உள்ளவர்கள் கிட்டவில்லையென்றால், அதற்கடுத்த வர்ணத்தில் உள்ளவர்களிடமிருந்து அந்த ஞானத்தை மட்டும் பெறலாம் என்று கூறப்பட்டது. ஆனால் வித்யைகள், மந்த்ரங்கள் போன்றவை அந்தணர்களிடமிருந்து மட்டுமே பெறப்பட வேண்டும் என்பதை சூத்ரயோநாவஹம் ஜாதோ நாத: அந்யத் வக்துமுத்ஸஹே – சூத்ரயோனியில் பிறந்த நான் இதற்கு மேல் ஏதும் உரைக்கத் துணிவு கொண்டவன் அல்லன் – போன்ற விதுர வசனங்கள் மூலம் அறியலாம். மிதிலையில் மாம்ஸ விற்பனை செய்யும் தர்மவ்யாதன் மற்றும் காசியில் வச்ய குலத்தில் வந்த துலாதாரன் போன்றவர்கள், தங்களிடம் தர்மங்கள் குறித்த விஷயங்களில் உள்ள ஐயங்களைப் போக்கிக்கொள்ள வந்த அந்தணர்களுக்கு, திவ்யதேச யாத்திரை செல்பவர்கள் பாதை தெரியாமல் தவிக்கும்போது அவர்களுக்குச் சரியான பாதையைக் காண்பித்து உதவுவது போன்று, அவர்களுடைய ஐயங்களைத் தீர்த்தனர்; அவர்கள் அந்த அந்தணர்களின் ஆசார்யர்கள் ஆகவில்லை. இது போன்றே இதிஹாஸங்களில் உள்ள பல்வேறு நிகழ்வுகளை புரிந்து கொள்ளவேண்டும்.