Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 8)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

விதுரர் குறித்த ஐயங்களுக்கு விளக்கம்

மூலம் – ப்ரஹ்மவித்துக்களான இவர் யோகப்ரபாவத்தாலே தேஹந்யாஸம் பண்ணின பின்பு, ப்ராப்தனான தர்மபுத்ரன் செய்த ஸம்ஸ்கார விசேஷம் தூஷ்ணீம் அநுஷ்டிதமாதல், வ்யக்திவிசேஷ நியதமாதலாமித்தனை. இது கொண்டு வ்யக்த்யந்தரங்களில் ந்யாஸ ஸஞ்சாரம் பண்ணவொண்ணாது. இங்ஙனல்லாதபோது தர்மோத்தரரான பாண்டவர்களுக்கு ஒரு நியதிவிசேஷத்தாலே வந்த தார ஸாதாரண்யத்தைக் கொண்டு ஸர்வலோகமும் வ்யாகுலமாம்படியாம். ஆகையாலே தம் தம் ஜாதிகளை விடாதே நின்று அவ்வோ ஜாதிகளுக்கு உசித ப்ரக்ரியையாலே யதாதிகாரம் பகவத் கைங்கர்யம் பண்ண ப்ராப்தம்.

– இப்படிப்பட்ட ப்ரஹ்மஞானியான விதுரர் தனது உயிரை விட்டபோது, அவருக்கு ஈமக்கடன் செய்யக் கடமைப்பட்டவனாகிய தர்மன், ப்ரேத ஸம்ஸ்காரங்களை சிறப்பாகச் செய்யவேண்டும் என்று செய்தான். அப்போது மௌனமான முறையில் அவை செய்யப்பட்டபோதிலும், உயர்ந்த ஒருவருக்காகச் செய்யப்பட்டது சரியே என்றானது. இதனைக் கருத்தில் கொண்டு, “ஓர் இடத்தில் நடந்ததை மற்றொரு இடத்திலும் செய்யலாம்” என்னும் ரீதியில், மற்ற யாருக்கும் செய்யலாகாது. இவ்விதம் கொள்ளவில்லை என்றால், சூழ்நிலை காரணமாக ஒரே பத்னியைக் கொண்ட பாண்டவர்கள் போன்று மற்றவர்களும் செய்யக்கூடும் அல்லவோ? ஆகவே அவரவர்கள் தங்களுடைய ஜாதியில் விதிக்கப்பட்டதான ஸர்வேச்வரனுடைய கைங்கர்யம் குறித்து நன்கு உணர்ந்து, அதன்படியே செய்தல் வேண்டும்.