Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 6)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

ஜாதி, குலம் குறித்த விளக்கம், ஜாதி நீங்காமை

மூலம் – மஹர்ஷிகளும், ஸ சூத்ரா இதி மந்தவ்ய: இத்யாதிகளிற்படியே ப்ரதிபத்தி விசேஷங்களைப் பற்ற உத்க்ருஷ்டர் பக்கல் அபக்ருஷ்ட சப்தமும், அபக்ருஷ்டர் பக்கல் உத்க்ருஷ்டர் சப்தமும் ப்ரயோகித்தார்களித்தனை. ஆகையால் பகவத் பக்தரல்லாத ப்ராஹ்மணர் சூத்ரர்களைப் போலே அநாதரணீயரென்றும், பகவத் பக்தரான சூத்ரர்கள் ப்ராஹ்மணரைப் போலே ச்லாகநீயரென்றும் சாஸ்த்ர தாத்பர்யம். இங்ஙனல்லாதபோது, சண்டாளமபி வ்ருத்தஸ்தம் தம் தேவோ ப்ராஹ்மணம் விது: சண்டாள: ப்ரத்யவஸிதா: பரிவ்ராஜக தாபஸா: ந தேந வ்ருத்தோ பவதி யேநாஸ்ய பலிதம் சிர: பாலோபி ய: ப்ரஜாநாதி தம் தேவா: ஸ்தவிரம் விது: என்று இப்புடைகளிலே நிந்தா ப்ரசம்ஸௌ பண்ணுகிற வாக்யங்களைக் கொண்டு ஸர்வமர்யாதைகளும் கலங்கும்படியாம். ஆன பின்பு ப்ரதிபத்தி விசேஷார்த்தம் அந்யத்ராந்யத்வ கீர்த்தநம் விசேஷவிதி ஸாகாங்க்ஷா: தத்ர தத்தத் ப்ரவ்ருத்தய: என்று இங்குற்றைக்கும் ஸமாதானம்.

– மஹரிஷிகளும் பாரமேஷ்ட்ய ஸம்ஹிதை - ஸ சூத்ரா இதி மந்தவ்ய: - நெற்றியில் குறுக்காக புண்ட்ரம் இடுபவன் சூத்ரனாகக் கொள்ளப்படுவான் – என்பது போன்ற வரிகள் மூலமாக, உயர்ந்த குலத்தில் பிறந்தவனைத் தாழ்ந்தவன் என்றும், தாழ்ந்த குலத்தில் பிறந்தவனை உயர்ந்தவன் என்றும் கூறியதைக் காணலாம். ஆகவே பகவத் பக்தி இல்லாத ப்ராஹ்மணனை சூத்ரன் போன்று தாழ்ந்தவனாகவே கொள்ளவேண்டும் என்றும், பகவத் பக்தி கொண்ட சூத்ரனை அந்தணர்கள் போன்று உயர்ந்தவர்களாகவே கொள்ளவேண்டும் என்றும் சாஸ்த்ரங்கள் கூறுகின்றன என்றாகிறது. இவ்விதம் கொள்ளவில்லை என்றால், இப்படிப்பட்ட வரையறைகளைக் கூறுவதான கீழே உள்ள பல வாக்கியங்களும் முரணாக ஆகிவிடும்: மஹாபாரதம் (ஆச்வமேதிக பர்வம் – 116-8) - சண்டாளமபி வ்ருத்தஸ்தம் தம் தேவோ ப்ராஹ்மணம் விது: - தன்னுடைய ஒழுக்கங்களைப் பின்பற்றும் சண்டாளனை, அந்தணன் என்றே தேவர்கள் அறிகின்றார்கள். தக்ஷஸ்ம்ருதி (4-20) - சண்டாள: ப்ரத்யவஸிதா: பரிவ்ராஜக தாபஸா: - ஸந்ந்யாஸிகள் மற்றும் வாநப்ரஸ்தர்கள் தங்களுடைய ஒழுக்கத்திலிருந்து தவறினால் சண்டாளர்களே ஆவர். மநு ஸ்ம்ருதி (2-156) - ந தேந வ்ருத்தோ பவதி யேநாஸ்ய பலிதம் சிர: பாலோபி ய: ப்ரஜாநாதி தம் தேவா: ஸ்தவிரம் விது: - தலை நரைத்தால் மட்டுமே ஒருவன் கிழவன் என்றாவதில்லை; சிறந்த ஞானம் கொண்ட சிறுவனைக் கூட கிழவன் என்றே தேவர்கள் கொள்கிறார்கள். மேலே உள்ள பலவற்றுக்கும் ஸமாதானம் - ப்ரதிபத்தி விசேஷார்த்தம் அந்யத்ராந்யத்வ கீர்த்தநம் விசேஷவிதி ஸாகாங்க்ஷா: தத்ர தத்தத் ப்ரவ்ருத்தய: - ஒரு குலத்தைச் சேர்ந்த ஒருவனை, மற்றொரு குலத்தைச் சேர்ந்தவனாகப் புகழ்ந்து கூறுவது ஏனென்றால், அவ்விதம் அவனை எண்ணவேண்டும் என்பதற்காகவே ஆகும்; ஆனால் அவனை நமஸ்கரித்தல் போன்றதான செயல்களுக்குத் தனித்தனி விதிகள் உள்ளன – என்பதாகும்.