Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 5)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
ஜாதி, குலம் குறித்த விளக்கம், ஜாதி நீங்காமை
மூலம் – “குலம் தரும்” என்கிற பாட்டுக்கு வ்யாக்யானம் பண்ணின அபியுக்தரும் – ஜந்மத்தால் வ்ருத்தத்தால் குறைந்தான் ஒருத்தனுக்கு பகவத்ஸம்பந்தமுண்டானாலும் அவனை இவையுடையான் ஒருத்தன் தாழ நினைக்கக் கூச வேண்டும்படியாயிற்று பகவத்ப்ரபாவமிருக்கும்படி; ஆனால் அவர்களோடு பெண் கொடுத்துக் கொள்ளுகிறதில்லையே என்னில் அது ஜாதி நிபந்தனம் ச்லோகை குணநிபந்தனை என்று நிஷ்கர்ஷித்தார்கள். “குலம் தரும்” என்றதுவும், “பண்டைக் குலத்தைத் தவிர்ந்து” என்றதுவும் தொண்டக்குலத்தில் உத்கர்ஷம் சொன்னபடி. தேவதாந்தராதி ஸங்கீர்ண குலமன்றே இவனது. மா ஜநிஷ்ட ஸ நோ வம்சே ஜாதோ வா த்ராக்விபத்யதாம் ஆஜந்ம மரணம் யஸ்ய வாஸுதேவோ வ தைவதம் என்றிறே ஏகாந்தி குலத்தின் பாசுரம். இப்படி வேறொரு குலமானாலும் ஜாதி சப்தமும் குல சப்தமும் பிந்நார்த்தமாகவும் ப்ரயுக்தமாகையாலே ஜாதி பேதியாது; குலம் பேதிக்கும், திரு ஸுரபியானாலும் கோத்வம் கழியாதிறே.
– பெரியதிருமொழி (1-1-9) – குலம் தரும் – நாராயண என்னும் திருநாமம் உயர்ந்த குலத்தை அளிக்கும் – என்னும் பாசுரத்திற்கு வ்யாக்யானம் அருளிச்செய்த ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை, “தனது குலம், செயல்பாடுகள் ஆகியவற்றால் மிகவும் தாழ்ந்த ஒருவனுக்கு பகவத் ஸம்பந்தம் உண்டாகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது இவற்றால் உயர்ந்தவன் ஒருவன், அவனைத் தாழ்வாக நினைப்பதற்குக் கூட கூசுவான். இதற்குக் காரணம் பகவத் ப்ரபாவமே ஆகும். ஆனால் இதனையே காரணமாக வைத்து இருவருக்கும் இடையே பெண்கொடுத்தல் போன்ற ஸம்பந்தங்களுக்கு சாஸ்த்ரம் இடம் அளிப்பதில்லை. திருமணம் போன்றவை ஜாதியை அடிப்படையாகக் கொண்டவை; புகழ்வது என்பது நல்ல குணங்களை அடிப்படையாகக் கொண்டவை”, என்றது காண்க. பெரியதிருமொழி (1-1-9) – குலம் தரும், திருப்பல்லாண்டு (5) - பண்டைக் குலத்தைத் தவிர்ந்து – பழைய குலத்தை நீக்கி – என்பதான பாசுரங்கள் அடியார்களின் குலத்தைப் புகழ்வதாக மட்டுமே உள்ளன. அதாவது இந்தப் பாசுரங்களில் கூறப்பட்ட வைஷ்ணவ குலம் என்பது, நாராயணனை அல்லாமல் மற்ற எந்த தேவதைகளுடனும் கலந்த குலம் அல்ல என்பதே இங்கு கூறப்பட்டதாகும். வராஹபுராணம் - மா ஜநிஷ்ட ஸ நோ வம்சே ஜாதோ வா த்ராக்விபத்யதாம் ஆஜந்ம மரணம் யஸ்ய வாஸுதேவோ வ தைவதம் – யார் ஒருவனுக்கு பிறப்பு முதல் இறப்பு முடிய வாஸுதேவன் தெய்வம் அல்லவோ, அவன் நம்முடைய குலத்தில் பிறக்கவேண்டாம்; அப்படியே பிறந்தாலும் அவன் விரைவாக மரணம் அடையட்டும் – என்று அல்லவோ பகவானிடம் மட்டுமே பக்தி கொண்டவர்கள் குறித்துக் கூறப்படுகிறது. ஒரு சில இடங்களில் குலம், ஜாதி ஆகிய இரண்டு சொற்களும் வெவ்வேறு பொருளில் உபயோகப்பட்டுள்ளன; (குலம் என்பது வைஷ்ணவகுலம் என்னும் பொருளிலும், ஜாதி என்பது அந்தண ஜாதி என்னும் பொருளிலும் உள்ளது) ஆகவே ஜாதி மாறக்கூடியதல்ல, குலம் மாறக்கூடியது. கோயிலில் உள்ள பசுவாக இருந்தாலும் அது பசு என்பது மாறாது அல்லவோ?