Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 4)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
ஜாதி, குலம் குறித்த விளக்கம், ஜாதி நீங்காமை
மூலம் – ந சூத்ரா பகவத்பக்தா விப்ரா பாகவதா: ஸ்ம்ருதா: ஸர்வவர்ணேஷு சூத்ரா யே ஹ்யபக்தா ஜநார்த்தனே என்று பகவத்பக்தியாகிற குணவிசேஷ ஸதஸப்தாவங்களாலே அபக்ருஷ்ட ஜாதீயரை உத்க்ருஷ்ட ஜாதீய வாசக சப்தத்தாலே சொல்லியும், உத்க்ருஷ்ட ஜாதீயரை அபக்ருஷ்ட ஜாதீய வாசக சப்தத்தாலே சொல்லியும் இருந்தது. இதடியாக பகவத்பக்தரெல்லாரும் ஏகஜாதியரன்றோ என்று ம்ருதுப்ரஜ்ஞர்கள் நினைப்பர்கள். இங்ஙனேயாகில் பாகவத ப்ராஹ்மணன் இன்னபடியே வர்த்திப்பான், பாகவத சூத்ரன் இன்னபடியே வர்த்திப்பான் என்று ஆசார நியமங்கள் சொல்லும் ஸர்வசாஸ்த்ரங்களும் விரோதிக்கும். கேவல ப்ராஹ்மணனுக்கும் கேவல சூத்ரனுக்குமுள்ள எல்லை பாகவத ப்ராஹ்மணனுக்கும் பாகவத சூத்ரனுக்கும் கொள்ளவேணுமென்றும், இவர்களை ஸமரென்கிற சாஸ்த்ரங்களும் பரமபுருஷார்த்த ஸாம்யாதிகளாலே என்றும் கிடாம்பி அப்புள்ளார் அருளிச்செய்தார்.
– மஹாபாரதம் - ந சூத்ரா பகவத்பக்தா விப்ரா பாகவதா: ஸ்ம்ருதா:ஸர்வவர்ணேஷு சூத்ரா யே ஹ்யபக்தா ஜநார்த்தனே – பகவானிடம் பக்தி கொண்ட சூத்ரர்கள் சூத்ரர்கள் அல்லர்; அவர்கள் பாகவதர்களான ப்ராஹ்மணர்களே ஆவர்; அனைத்து ஜாதியிலும் யாருக்கு ஜனார்த்தனனிடம் பக்தி இல்லையோ அவர்கள் சூத்ரர்களே ஆவர் – என்றது காண்க. இப்படியாக பகவானிடம் கொண்ட பக்தி, பக்தி இல்லாத தன்மை ஆகியவை மூலம் தாழ்ந்த குலத்தவர்களை உயர்ந்த குலம் என்றும், உயர்ந்த குலத்தினரை தாழ்ந்த குலம் என்றும் கூறியதைக் காணலாம். ஆனால் மந்தமான அறிவு கொண்டவர்கள், “பகவானிடம் பக்தி கொண்டவர்கள் அனைவரும் ஒரே குலம் அல்லவோ?” என்று கேட்கலாம். இவ்விதம் கொண்டால், “ஸர்வேச்வரனின் பக்தனாக உள்ள ப்ராஹ்மணன் இவ்விதம் நடந்துகொள்வான், ஸர்வேச்வரனின் பக்தனாக உள்ள சூத்ரன் இவ்விதம் நடந்துகொள்வான்”, என்று அவரவர்களுக்கு உரிய நடத்தை குறித்துக் கூறுகின்ற அனைத்து சாஸ்த்ரங்களும் விரோதமாகிவிடும். பகவத் பக்தி இல்லாத ப்ராஹ்மணன் மற்றும் பகவத் பக்தி இல்லாத சூத்ரன் ஆகியோருக்கு இடையில் உள்ள வேறுபாடு என்பது, பகவத் பக்தி உள்ள ப்ராஹ்மணன் மற்றும் பகவத் பக்தி உள்ள சூத்ரன் ஆகியோருக்கு இடையிலும் உள்ளது என்று புரிந்து கொள்ளவேண்டும். அவர்கள் இருவரும் ஸமம் என்று கூறுகின்ற சாஸ்த்ரங்கள் அனைத்தும், அவர்களுடைய பலனாகிய மோக்ஷம் என்பது ஸமம் என்பதை மட்டுமே உணர்த்துகின்றன. இதனை கிடாம்பி அப்புள்ளார் அருளிச்செய்துள்ளார்.