Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 3)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
உபாயநிஷ்டரின் பெருமைகள்
மூலம் – ஆஸ்போடயந்தி பிதர: ப்ரண்ருத்யந்தி பிதாமஹா: வைஷ்ணவோ ந: குலே ஜாத: ச நஸ்ஸந்தாரயிஷ்யதி என்றும், “கேசவன் தமர் கீழ்மேலெமரேழு பிறப்பும் மாசதிரிது பெற்று” என்றும் சொல்லுகிறபடியே அநுபந்திகளுக்கும் உத்தாரகமான ப்ரபாவத்தையுடையனாயிறே இவ்வுபாய நிஷ்டன் இருப்பது. யோ ஹ்யேநம் புருஷம் வேத தேவா அபி ந தம் விது: என்று பகவத் ஞானமுடையவனுடைய ப்ரபாவம் தேவர்களாலும் பரிச்சேதிக்கவொண்ணா தென்றார்களிறே. ஆனாலும் இதுக்கு விருத்தமல்லாத ப்ரமாணபலத்தாலே முற்பட ஜாதி வ்யவஸ்தை சொல்லுகிறோம்.
– கீழே உள்ள வரிகளில் கூறுவது போன்று தன்னைச் சேர்ந்தவர்களையும் உய்விப்பதான ப்ரபாவம் கொண்டவனாகவே பக்தி, ப்ரபத்தி போன்ற உபாயங்களில் இழிந்த ஒருவன் உள்ளான்: ஸ்ரீவராஹபுராணம் - ஆஸ்போடயந்தி பிதர: ப்ரண்ருத்யந்தி பிதாமஹா: வைஷ்ணவோ ந: குலே ஜாத: ச நஸ்ஸந்தாரயிஷ்யதி – பித்ருக்களும், பிதாமஹர்களும், “நம்முடைய குலத்தில் விஷ்ணுபக்தன் ஒருவன் பிறந்துள்ளான், அவன் நம்மை கரையேற்றுவான்”, என்று தங்கள் தோள்களைத் தட்டியபடி ஆடுகிறார்கள். திருவாய்மொழி (2-7-1) - கேசவன் தமர் கீழ்மேலெமரேழு பிறப்பும் மாசதிரிது பெற்று – எனது குலத்தில் பிறந்தவர்களில் கீழே உள்ள ஏழு தலைமுறைகள், மேலே உள்ள ஏழு தலைமுறைகள் ஸர்வேச்வரனின் அடியார்களாக உள்ளனர். இதனை நாம் அரிதாகப் பெற்றோம். இது போன்று ஸர்வேச்வரனைக் குறித்த ஞானம் உள்ளவனுடைய மேன்மையைப் பற்றி தேவர்களாலும் கூற இயலாது என்பதை மஹாபாரதம் வனபர்வம் (160-21) - யோ ஹ்யேநம் புருஷம் வேத தேவா அபி ந தம் விது: - யார் ஒருவன் க்ருஷ்ணனை உள்ளபடி அறிகிறானோ, அப்படிப்பட்ட பக்தனுடைய மேன்மையை நித்யஸூரிகளும் எந்த அளவு என்று அறியமாட்டனர் – என்றது காண்க. ஆனாலும் இப்படிப்பட்ட மேன்மைக்கு குலத்தின் (ஜாதியின்) வாயிலாக உள்ள எல்லையை நாம் மேலே கூறப்பட்ட வரிகளுக்கு முரணாகாமல் உள்ள ப்ரமாணங்களால் இப்போது காட்டுவோம்.