Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 44)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

ப்ரபத்திக்கு உள்ள இரண்டு நிலைகள் (ஸ்வதந்த்ர நிலை, அங்க நிலை)

மூலம் – இப் ப்ரபத்தி அங்கமான வேஷத்தை பாஷ்யாதிகளிலே உதாஹரித்தருளினார். ஸ்வதந்த்ரமான வேஷத்தை கத்யத்திலே அருளிச்செய்தார். க்லேசாநாம் ச க்ஷயகரம் யோகாதந்யந்ந வித்யதே ந கர்மணாம் க்ஷயோ பூய ஜந்மநாமயுதைரபி ருதே யோகாத்கர்ம கக்ஷம் யோகாக்நி: க்ஷபயேத் பரம் இத்யாதிகளும் ஸ்வதந்த்ர ப்ரபத்தி விதிபலத்தாலே அதிகார்யந்தர விஷயங்களாகக் கடவன. இப்படி ஸாத்யோபாய விஷயமாக மற்றும் பிறக்கும் கலக்கங்களுக்குப் பரிஹாரம் நிக்ஷேபரக்ஷையில் கண்டு கொள்வது.

– ப்ரபத்தியானது பக்தியோகத்துக்கு அங்கமாக உள்ளது என்பதை உடையவர் ஸ்ரீபாஷ்யத்தில் அருளிச்செய்தார். அதே ப்ரபத்தி என்பது தானாகவே ஓர் உபாயமாகவும் உள்ளது என்பதை உடையவர் கத்யத்தில் அருளிச்செய்தார். கீழே உள்ள பல வரிகளில் மற்ற யோகங்கள் உபாயமாகக் கூறப்பட்டபோதிலும், ப்ரபத்தி என்பது தானாகவே நேரடி உபாயமாகவும், தான் ஓர் உபாயத்தின் அங்கமாகவும் இருப்பதால், மேலே கூறப்பட்ட வரிகளில் உள்ள யோகங்கள் அவற்றுக்குத் தகுதியானவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறியவேண்டும்: ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-7-20) - க்லேசாநாம் ச க்ஷயகரம் யோகாதந்யந்ந வித்யதே – அவித்யை போன்ற சோகங்களை நீக்கவல்லது யோகத்தைத் தவிர வேறு ஏதும் இல்லை. ஸ்ரீவிஷ்ணுதர்மம் (102-4) - ந கர்மணாம் க்ஷயோ பூய ஜந்மநாமயுதைரபி ருதே யோகாத்கர்ம கக்ஷம் யோகாக்நி: க்ஷபயேத் பரம் – பதினாயிரம் பிறவிகள் எடுத்தாலும் யோகம் இன்றி கர்மங்களை அழிக்க இயலாது. யோகம் என்னும் அக்னியே, கர்மம் என்னும் அடர்ந்த புல்லை அழிக்கவல்லது. இப்படியாக ஸாத்யோபாயமான பக்தி மற்றும் ப்ரபத்தி ஆகியவை குறித்து எழுகின்ற ஐயங்களை நீக்கிக் கொள்ள நிக்ஷேபரக்ஷையைக் காண்க.