Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 43)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

அனைவருக்கும் பகவத் நினைவு ஏற்படுதல்

மூலம் – அப்படியே தஸ்மாத் ஸப்ரணவம் சூத்ரோ மந்நாமாநி ந கீர்த்தயேத் என்று மஹாபாரதத்திலும், அஷ்டாக்ஷரஜப: ஸ்த்ரீணாம் ப்ரக்ருத்யைவ விதீயதே ந ஸ்வர: ப்ரணவ: அங்காநாப்யந்யவிதயஸ்ததா ஸ்த்ரீணாம் து சூத்ரஜாதீநாம் மந்த்ரமாத்ரோக்திரிஷ்யதே என்று நாரதீயாதிகளிலும், நமோ நாராயணேத்யுக்த்வா ஸ்வபாக: புநராகமத் என்று ஸ்ரீவராஹ புராணத்திலும், “வாயினால் நமோ நாராயணாவென்று மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி” என்றும், “நாமம் சொல்லில் நமோ நாராயணமே” என்றும் சொல்லுகிறபடியே திருமந்த்ரமாகிற எட்டுக் கண்ணனான கரும்பிலே வேர்ப்பற்றும் தலையாடையும் கழிந்தால் நடுவுள்ள அம்சம் ஸர்வோபஜீவ்யமாகிறாற்போலே ப்ரபத்திநிஷ்டர் எல்லார்க்கும் ஸர்வ காலத்திலும் பகவதநுஸ்மரண ரஸத்துக்கும் விரோதமில்லை. ஸபரிகரமான விலக்ஷண பக்தியோகமாகிலிறே சிலர்க்கு விரோதமுள்ளது. க்ஷணமாத்ர ஸாத்யமான ப்ரபதநம் ஸித்தமானவளவிலும் த்வயமர்த்தாநுஸந்தாநேந ஸஹ ஸதைவம் வக்தா என்று சரண்யன் அருளிச்செய்தானிறே. ஆகையால் த்யேயோ நாராயண: ஸதா என்றதுவும் யதாதிகாரம் சிலர்க்கு உபாயமாகவும் சிலர்க்குப் பலமாகவும் கொள்ளுகையால் இது ஸ்வதந்த்ர ப்ரபத்திக்கு விருத்தமன்று.

– எட்டுக் கணுக்களுடன் கூடிய கரும்பின் தலைப்பகுதியையும், வேர்ப்பாகத்தையும் வெட்டிய பின்னர் அது அனைவராலும் சுவைத்து உண்ணக் கூடியதாக உள்ளது. இது போன்றே திருமந்த்ரத்தில் உள்ள ப்ரணவப் பக்தி (ஓம்) மற்றும் இறுதியில் உள்ள “ஆய” என்னும் பகுதி (நாராயணாய என்பதில் உள்ள ஆய) என்பதை நீக்கிய பின்னர், அந்தத் திருமந்த்ரமானது அனைவராலும், அனைத்து காலத்திலும் ஏற்கப்படக்கூடியதாக, ப்ரபந்நர்கள் என்னும் அனைவருக்கும் பகவத் அனுபவம் என்னும் ரஸத்தை அளிப்பதாகவே உள்ளது. கீழே உள்ள பல வரிகளில் ப்ரணவம் மற்றும் நான்காம் வேற்றுமையான “ஆய” என்ற இரண்டும் இல்லாமல் திருமந்த்ரம் உச்சரிப்பது குறித்து கூறப்படுவது காண்க: மஹாபாரதம் ஆச்வமேதிகபர்வம் (118-14) - தஸ்மாத் ஸப்ரணவம் சூத்ரோ மந்நாமாநி ந கீர்த்தயேத் – ஆகவே சூத்திரன் என்னுடைய நாமங்களை ப்ரணவத்துடன் சேர்த்து உச்சரித்தல் கூடாது. நாரதீயம் - அஷ்டாக்ஷரஜப: ஸ்த்ரீணாம் ப்ரக்ருத்யைவ விதீயதே ந ஸ்வர: ப்ரணவ: அங்காநாப்யந்யவிதயஸ்ததா ஸ்த்ரீணாம் து சூத்ரஜாதீநாம் மந்த்ரமாத்ரோக்திரிஷ்யதே – எட்டு எழுத்து கொண்டதான மூல மந்த்ரத்தின் ஜபம் என்பது பெண்களுக்கு நான்காம் வேற்றுமை உருபு இல்லாமல் (ஆய என்னும் விகுதி) செய்யப்படவேண்டும் என்று விதி உள்ளது. இது போன்றே அவர்களுக்கு ப்ரணவம், அங்கந்யாஸம் போன்றவையும் விதிக்கப்படவில்லை. பெண்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகியோர் வெறும் மந்த்ரத்தை உரைப்பது மட்டுமே ஜபம் என்று கொள்ளப்பட்டது. ஸ்ரீவராஹபுராணம் (135 – 53) - நமோ நாராயணேத்யுக்த்வா ஸ்வபாக: புநராகமத் – “நமோ நாராயணா” என்று உச்சரித்தபடி, நாயின் மாமிசத்தை உண்ணும் பிறவியில் பிறந்த நம்பாடுவான் மீண்டும் நம்மிடம் வந்தான் பெரியாழ்வார் திருமொழி (4-5-2) - வாயினால் நமோ நாராயணாவென்று மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி – “நமோ நாராயணா” என்று வாயினால் உச்சரித்தபடியும், கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி கூப்பியபடியும் பெரியாழ்வார் திருமொழி (6-10-1) - நாமம் சொல்லில் நமோ நாராயணமே – ஸர்வேச்வரனின் திருநாமம் உரைத்தால் “நமோ நாராயணா” என்று கூறவேண்டும். பக்தியோகம் மட்டுமே ஒரு சிலருக்கு ஏற்கப்படாததாக உள்ளது. ப்ரபத்தி என்பது அதனைக் கைக்கொள்ளும்போது ஒரு சில நொடிகளே ஆனாலும், சரணாகதி கத்யத்தில் - த்வயமர்த்தாநுஸந்தாநேந ஸஹ ஸதைவம் வக்தா – எப்போதும் நீவிர் த்வய மந்த்ரத்தை அதன் பொருளுடன் எண்ணியபடியே இருப்பீராக – என்று அனைவராலும் சரணம் புக ஏற்றவனாகிய ஸ்ரீரங்கநாதன் அருளிச்செய்தான் அல்லவோ? ஆகவே த்யேயோ நாராயண: ஸதா – எப்போதும் நாராயணனையே த்யானித்தபடி இருக்கவேண்டும் – என்று கூறும் விதியானது ஒரு சிலருக்கு உபாயம் என்றும், ஒரு சிலருக்கு பலன் என்றும் கொள்ளவேண்டும். ஆகவே இது ப்ரபத்திக்கு விரோதம் அல்ல.