Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 42)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
பகவத் ஆராதனத்தில் அதிகாரம் இல்லாதவர்களுக்கும் கைங்கர்யம் கைகூடும் விதம்
மூலம் – இஸ் ஸமாராதனாதி க்ரமங்களில் அநதிக்ருதர்க்கும் இக்காலங்கள் எல்லாவற்றிலும் தங்களுக்கு யோக்யமான நித்ய நைமித்திகங்களாலும் ஸங்கீர்த்தநாதிகளாலும் ஸமாராதனாதியோக்யரானபரமபாகவதருக்குப் பரதந்த்ரராய் யதாதிகாரம் வல்ல தேவை செய்து இக்கைங்கர்யம் இழவாதொழியலாம். இவ்வர்த்தத்தை ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோராராதநம் பரம் தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் பரம் என்றும், “குன்றமெடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபனுரை செயல்” என்றும், “ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தியிருப்பார் தவம்” என்றும் அருளிச்செய்தார்கள். இக்கைங்கர்யங்களை அநுஷ்டித்து உகப்பார்க்கும் இதுகண்டு உகப்பார்க்கும் ஜகத்வ்யாபாரம் பண்ண அதிக்ருதனான ஈச்வரனுக்கும் முக்தருக்கும் போலே போகம் ஏகரூபம். தர்ம: ச்ருதோ வா த்ருஷ்டோ வா ஸ்ம்ருதோ வா கதிதோபி வா அநுமோதிதோ வா ராஜேந்த்ர புநாதி புருஷம் ஸதா என்கிறபாவநத்வம் போலே போக்யத்வமும் ஏகரூபமாகக் குறையில்லை.
– இப்படியாக உள்ள பகவத் ஆராதனைகளைச் செய்வதற்குத் தகுதி இல்லாமல் சிலர் இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் - தங்களுக்காக விதிக்கப்பட்ட நித்ய நைமித்திக கர்மங்களை சரிவர இயற்றியபடியும், ஸர்வேச்வரனை அவனது திருநாமங்கள் கொண்டு போற்றியபடியும், பகவத் ஆராதனைகளைச் செய்யும் தகுதி கொண்ட பரமபாகவதர்களுக்கு வசப்பட்டவர்களாக இருந்து அவர்களுக்கான கைங்கர்யங்களில் ஏற்ற உதவிகளைச் செய்தபடியும் இருந்தால் – பகவத் கைங்கர்யத்தை அவர்கள் இழப்பதில்லை. இதனைக் கீழே உள்ள பல வரிகளில் காணலாம்: பாத்மோத்தரம் (29-81) - ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோராராதநம் பரம் தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் பரம் – அனைத்து ஆராதனைகளிலும் மஹாவிஷ்ணுவின் ஆராதனை மிகவும் சிறந்தது. அதனைக் காட்டிலும் உயர்ந்த பாகவதர்களின் ஆராதனை என்பது மிகவும் சிறந்தது. திருவாய்மொழி (7-4-11) - குன்றமெடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபனுரை செயல் – கோவர்த்தன மலையைத் திருக்கரத்தால் எடுத்து ஆயர்களைக் காப்பாற்றிய ஸர்வேச்வரனின் அடியார்களோடு எப்போதும் சேர்ந்தபடி உள்ள சடகோபனின் கைங்கர்யங்களை. நான்முகன் திருவந்தாதி (18) - ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தியிருப்பார் தவம் – ஸர்வேச்வரனைத் துதித்தபடி உள்ளவர்களை, அவ்விதம் துதித்தபடி உள்ளவர்களை ஆராதிப்பவர்களின் தவம் வெல்லும். உலகைப் படைத்தல் போன்ற செயல்களுக்குக் காரணமாக உள்ள ஸர்வேச்வரனுக்கும், முக்தி அடைந்தவர்களுக்கும் பரமபதத்தில் உள்ள இன்பம் எவ்விதம் ஒரே போன்று உள்ளதோ அது போலவே – பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்கள் ஈடுபட்டுள்ளதைக் கண்டு மகிழ்பவர்களுக்கும் இன்பம் ஒரே போன்று உள்ளது. இவ்விதம் இருவருக்கும் ஒரே போன்ற இன்பமே கிட்டும் என்பதை மஹாபாரதம் ஆச்வமேதிகபர்வம் (96-31) - தர்ம: ச்ருதோ வா த்ருஷ்டோ வா ஸ்ம்ருதோ வா கதிதோபி வா அநுமோதிதோ வா ராஜேந்த்ர புநாதி புருஷம் ஸதா – அரசர்களில் உயர்ந்தவனே! ஒருவன் செய்த தர்மத்தைக் காண்பதும், அதனைக் குறித்துக் கேட்பதும், அதனை எண்ணுவதும், அதனைக் குறித்து மற்றவர்களிடம் உரைப்பதும், அதனைக் கண்டு மகிழ்வதும் ஆகிய செயல்களை ஒருவன் செய்யக்கூடும்; அவனை அந்தச் செயல்கள் தூய்மைப்படுத்தும் – என்று கூறியது போன்றே கொள்க.