Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 41)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
ஐந்துவிதமான தோஷங்கள் வராமல் தடுத்தல்
மூலம் – ஸப்தர்ஷி ஸம்வாதத்திலும் விஷ்ணும் ப்ரஹ்மண்யதேவேசம் ஸர்வலோக நமஸ்க்ருதம் த்ரைலோக்ய ஸ்திதி ஸம்ஹார ஸ்ருஷ்டி ஹேதும் நிரீச்வரம் ஆதாதாரம் விதாதாரம் ஸந்தாரம் ஜகத்குரும் விஹாய ஸ பஜத்வந்யம் பிஸஸ்தைந்யம் கரோதி ய: விஷ்ணுதர்மபரோ ந ஸ்யாத்விஷ்ணுதர்ம பராங்முக: குதர்ம வ்ரதசீலஸ்ஸ்யாத் பிஸஸ்தைந்யம் கரோதி ய: என்றும் சொல்லப்பட்டது. அந்யகீர்த்தநம் ஆகாதென்னுமிடத்தை “வாய் அவனையல்லது வாழ்த்தாது”, “சொன்னால் விரோதம்” இத்யாதிகளிலே அருளிச்செய்தார்கள். அந்யசிந்தநம் ஆகாதென்னுமிடத்தை “சிந்தை மற்றொன்றின் திறத்தல்லாத் தன்மை தேவபிரானறியும்” என்றும், “வருதேவர் மற்றுளரென்று என் மனத்து இறையும் கருதேன்” என்றும் அருளிச்செய்தார்.
– ஸம்ப்தரிஷிகளில் உரையாடலில் இதிஹாஸ ஸமுச்சயம் (10-58, 59) - விஷ்ணும் ப்ரஹ்மண்யதேவேசம் ஸர்வலோக நமஸ்க்ருதம் த்ரைலோக்ய ஸ்திதி ஸம்ஹார ஸ்ருஷ்டி ஹேதும் நிரீச்வரம் ஆதாதாரம் விதாதாரம் ஸந்தாரம் ஜகத்குரும் விஹாய ஸ பஜத்வந்யம் பிஸஸ்தைந்யம் கரோதி ய: - யார் ஒருவன் தாமரைக் கிழங்கைத் திருடுகிறானோ (அவனுக்கான தண்டனை என்னவென்றால்) அவன், அந்தணர்களுக்கு நன்மையைச் செய்பவனும், தேவர்களை நியமிப்பவனும், அனைத்து உலகினராலும் வணங்கப்படுபவனும், மூன்று உலகங்களின் படைத்தல் – காத்தல் – அழித்தல் ஆகியவற்றுக்குக் காரணமானவனும், தன்னை நியமிக்க வேறு யாரும் இல்லாதவனும், இந்த உலகிற்கு ஆதாரமானவனும், உலகத்தைப் படைத்து அழிப்பவனும், உலகின் குருவும் ஆகிய விஷ்ணுவைத் தவிர்த்து வேறு தெய்வத்தை வணங்குவானாக (அதாவது மற்ற தெய்வங்களை வணங்குதலே தண்டனை என்று கருத்து) – என்றது காண்க. மேலும் இதிஹாஸ ஸமுச்சயம் (12-77) - யார் ஒருவன் தாமரைக் கிழங்கைத் திருடுகிறானோ (அவனுக்கான தண்டனை என்னவென்றால்) அவன், ஸர்வேச்வரனுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் தர்மங்களைச் செய்யாதவனும், அந்தத் தர்மங்களை எண்ணாதவனும், தீய தர்மங்களைச் செய்யும் ஸ்வபாவம் கொண்டவனாகவும் ஆகக்கடவன் – என்றதும் காண்க. அந்யகீர்த்தநம் (மற்ற தேவதைகளைக் குறித்துப் பேசுதல்) என்பது செய்யத்தகாத ஒன்று என்பதை முதல் திருவந்தாதி (11) - வாய் அவனையல்லது வாழ்த்தாது – என்னுடைய வாய் ஸர்வேச்வரனைத் தவிர யாரையும் புகழ்ந்து பேசாது – என்றும், திருவாய்மொழி (3-9-1) - சொன்னால் விரோதம் – ஸர்வேச்வரனைத் தவிர வேறு யாரையும் துதித்தல் தகாது – என்றும் கூறப்பட்டது. அந்யசிந்தநம் (மற்ற தேவதைகளை எண்ணுதல்)என்பது செய்யத்தகாத ஒன்று என்பதைக் கீழே உள்ள வரிகளில் காண்க: திருவாய்மொழி (7-10-10) - சிந்தை மற்றொன்றின் திறத்தல்லாத் தன்மை தேவபிரானறியும் – திருவாறன்விளையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானைத் தவிர வேறு எதிலும் புத்தி செய்யாத எனது ஸ்வபாவத்தை அவன் அறிவான். பெரியதிருமொழி (8-10-2) - வருதேவர் மற்றுளரென்று என் மனத்து இறையும் கருதேன் – “நானே அண்டத்தக்கவன்” என்று கூறிக்கொண்டு வருகிற தெய்வம் வேறு ஒன்று உள்ளது என்று என் மனதால் சிறிதும் எண்ணமாட்டேன்.