Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 39)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

ஐந்துவிதமான தோஷங்கள் வராமல் தடுத்தல்

மூலம் – இப்படி நித்யமாக விதிக்கிற பகவதபிகமநாதிகளில் லோகாயதிகரைப் போலே க்யாதி லாப பூஜைகளுக்காகவாதல், தத்த்வஜ்ஞாந வைராக்யாதிகளில்லாதாரைப் போலே ப்ரயோஜநாந்தரத்துக்காகவாதல், பூர்ணோபாயமல்லாதாரைப் போலே மோக்ஷார்த்தமாக வாதலன்றிக்கே முக்தரைப் போலே ஸ்வாம்யபிமதத்தை நடத்த வேணுமென்கிற ருசியாலே யதாசாஸ்த்ரம் ஸ்வயம்ப்ரயோஜனமாக இழிந்தால் இவ் அபிகமநாதிகள் அந்யாபிகமநமும் அந்யார்த்தப்ரவ்ருத்தியும் அந்யயஜநமும் அந்யசப்தங்களும் அந்யசிந்தையுமாகிற சித்ரங்கள் புகாமைக்குக் கடகமாயிருக்கும்.

– அபிகமநம் உள்ளிட்ட அன்றாட பகவத் ஆராதனை என்பது ப்ரத்யக்ஷமாகக் காண்பதை மட்டுமே நம்புகின்றவர்கள் போன்று புகழ், செல்வம் போன்ற லாபங்களை மனதில் கொண்டு செய்தல் கூடாது; உண்மையான ஞானம், வைராக்யம் இல்லாதவர்கள் போன்று ஸர்வேச்வரனைத் தவிர மற்ற பலன்களுக்காகச் செய்தல் கூடாது; ப்ரபத்தியைச் செய்யாதவர்கள் போன்று மோக்ஷத்திற்கான உபாயமாகச் செய்தல் கூடாது. பின்னர் எவ்விதம் செய்யவேண்டும்? முக்தரைப் போன்று ஸர்வேச்வரனின் திருவுள்ளப்படியே நடக்கவேண்டும் என்னும் ஆசையை மனதில் நிறுத்தி, சாஸ்த்ரங்களில் கூறப்பட்ட முறைகளை அடியொட்டி, ஸ்வயம்ப்ரயோஜனம் என்று கருதி இவற்றைச் செய்யவேண்டும். இவ்விதம் செய்யும்போது அந்த பகவத் ஆராதனை காரணமாக – மற்ற தேவதைகளைப் பற்றுதல், தனக்காகப் பொருள் சேகரித்தல் போன்ற முயற்சிகள், மற்ற தேவதைகளை ஆராதனை செய்தல், மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுதல், மற்ற தேவதைகளை எண்ணுதல் – போன்ற குற்றங்கள் நம்மை அடையாமல், அந்த ஆராதனை என்பதே தடுத்து நிறுத்திவிடும்.