Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 35)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

பக்தி, ப்ரபத்திகளில் விச்வாஸம் தளர்வது குறித்த சந்தேகங்களும் சமாதானமும்

மூலம்– 5. வேறே சிலர் த்ருஷ்டார்த்த ப்ரபத்திகளிலே சில பலியாதொழியக் கண்டு ஸகலபல ஸாதநமான ப்ரபத்தியிலே அதிசங்கை பண்ணுவார்கள். அவர்களையும் அல்லாத சாஸ்த்ரார்த்தங்களிற்படிகளிலே கர்ம கர்த்ருஸாதந வைகுண்யத்தை வெளியிட்டுத் தெளிவிக்கவேணும். இங்கு கர்ம வைகுண்யமாவது மஹாவிச்வாஸாதிகள் குறைகை. கர்த்ரு வைகுண்யமாவது ப்ரபத்திக்குச் சொன்ன அதிகாரம் ந்யூநமாகை. ஸாதந வைகுண்யமாவது யதாசாஸ்த்ரம் ப்ரபத்யநுஷ்டாநத்துக்கு மூலமான ஸத் உபதேசாதிகள் இன்றிக்கே ஒழிகை. இவ்வைகுண்யங்களற ப்ரபத்தி பண்ணினபோது தத்பலங்களாகக் கோலின த்ருஷ்டங்களும் ஸித்திக்கக் காணா நின்றோம்.

– ஒரு சிலர் ப்ரபத்தி செய்யும்போது செல்வம் போன்றவற்றைப் பலனாகப் பெறவேண்டும் என்று செய்யக்கூடும். ஆனால் அந்தப் பலன்களை அவர்கள் பெறாமல் இருக்கக்கூடும். இதன் காரணமாக அனைத்து பலன்களையும் அளிக்கவல்ல உபாயமாக உள்ள ப்ரபத்தியின் மீது அவர்கள் சந்தேகம் கொள்ளக்கூடும். இதனை நீக்குவது எப்படி? அவர்களுக்கு, ப்ரபத்தி அல்லாத மற்ற சாஸ்த்ரங்களைப் போன்றே ஒரு சில குறைபாடுகளால் பலன் கிட்டவில்லை என்பதைப் புரிய வைக்கவேண்டும். இந்தக் குறைபாடுகள் எவை? அவை – கர்ம வைகுண்யம், கர்த்ரு வைகுண்யம், ஸாதந வைகுண்யம் போன்றவை ஆகும். கர்ம வைகுண்யம் என்றால் ப்ரபத்தியில் உள்ள மஹாவிச்வாஸம் போன்ற முக்கியமான அங்கங்களில் ஏற்படும் குறைபாடுகள் ஆகும். கர்த்ரு வைகுண்யம் என்றால் ப்ரபத்திக்குத் தேவையான தகுதியில் ஏதேனும் குறைபாடுகள் ஆகும். ஸாதந வைகுண்யம் என்றால் ப்ரபத்தியைச் சாஸ்த்ர முறைப்படி கைக்கொள்வதற்கு அடிப்படையான ஆசார்ய உபதேசம் போன்றவை இல்லாமல் உள்ள நிலையாகும். இத்தகைய குறைகள் இன்றி செய்யப்படும் ப்ரபத்தி மூலம், ப்ரபத்தி செய்தவர்கள் தாங்கள் விரும்பிய பலனைப் பெறுவதை நாம் காணலாம்.