Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 34)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
பக்தி, ப்ரபத்திகளில் விச்வாஸம் தளர்வது குறித்த சந்தேகங்களும் சமாதானமும்
மூலம் – 4. ஆழ்வார்கள் நாதமுனிகளுள்ளிட்டார்க்கு பகவத் ஸாக்ஷாத்காராதிகள் உண்டாயிருக்க, சிலர்க்கு இவையன்றிக்கே ஒழிகைக்குக் காரணம் – ப்ரபத்தி காலத்தில் பலஸங்கல்பத்தில் வைஷம்யம். ப்ராரப்த ஸுக்ருதவிசேஷமாகவுமாம். முன்பு கோலின பலாம்சம் ஸக்ருத்ப்ரபத்தியாலே ஸித்தமானாலும் கோலாத அம்சத்தைப் பற்றப் பின்பு தீவ்ரஸம்வேகம் பிறந்தார்க்குப் புந:ப்ரபத்தி பண்ணவுமாம்.
– இந்த உலகில் ஆழ்வார்கள், நாதமுனிகள் போன்ற ப்ரபந்நர்களுக்கு மட்டும் இந்த உலகத்தில் அவர்கள் உள்ளபோதே பகவத் ஸாக்ஷாத்காரம் உண்டானது, ஆனால் மற்ற ப்ரபந்நர்களுக்கு அவ்விதம் உண்டாவதில்லை. இதன் காரணம் என்ன? ப்ரபத்தி செய்யும்போது கைக்கொள்ளும் ஸங்கல்பத்தினால் உண்டாகும் வேறுபாடே இதற்குக் காரணம் ஆகும் (அதாவது ஆழ்வார்கள் தங்களுக்கு பகவத் ஸாத்காரம் வேண்டும் என்று ஸங்கல்பம் செய்திருக்கலாம் என்று கருத்து). மற்றவர்களுக்கு ஏன் அவ்விதம் ஸங்கல்பம் செய்யவேண்டும் என்று தோன்றுவதில்லை என்றால் – ஆழ்வார்களுக்கு அந்த நேரத்தில் பலன் அளிக்கத் தொடங்கிவிட்ட பூர்வ புண்யகர்மங்கள் காரணமாக இருக்கலாம். முன்னர் ஒருமுறை செய்த ப்ரபத்தியின் காரணமாக உண்டாகும் பலன் உறுதியே ஆகும்; ஆனால், அந்தப் ப்ரபத்தியின்போது கேட்காத ஒரு விஷயத்தைக் குறித்து, பின்னர் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது என்றால், அந்தப் பலனுக்காக மீண்டும் ஒருமுறை ப்ரபத்தி செய்யலாம் (அதாவது முதலில் ப்ரபத்தி செய்தபோது வேண்டிய பலனை எண்ணி, மீண்டும் ப்ரபத்தி செய்து கேட்கக்கூடாது; ஆனால் வேறு பலன் கேட்டு மீண்டும் ப்ரபத்தி செய்யலாம் என்று கருத்து).