Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 33)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

பக்தி, ப்ரபத்திகளில் விச்வாஸம் தளர்வது குறித்த சந்தேகங்களும் சமாதானமும்

மூலம்– 3. முமுக்ஷுக்களாய் ஸ்வதந்த்ர ப்ரபத்தி பண்ணினவர்களுக்கு உபாயமும் மோக்ஷமும் ஏகரூபமாயிருக்கச் செய்தேயும், ஸம்ஸாரத்தில் அடிச்சூட்டால் வரும் த்வரையின் தாரதம்யத்துக்கீடாகத் தத்தம் இச்சையாலே காலம் குறிக்கிறதில் ஏற்றச் சுருக்கத்தாலே பலத்தில் விளம்பாவிளம்பங்கள் கூடும்.

– முமுக்ஷுக்களில் இருவகை உண்டு. இவர்கள் - இந்தச் சரீரம் கழியும்வரை பொறுக்க இயலாமல், சட்டென்று மோக்ஷம் விரும்பும் ஆர்த்தர்கள், இந்தச் சரீரம் கழிந்த பின்னர் மோக்ஷம் கிட்டினால் போதும் என்றுள்ள த்ருப்தர்கள் – என்பவர் ஆவர். இவர்களுக்கு மோக்ஷ உபாயமான ப்ரபத்தியும், மோக்ஷமும் ஒரே வடிவாக உள்ளன. இப்படி உள்ளபோது, ஆர்த்தனுக்கு சட்டென்ற மோக்ஷமும், த்ருப்தனுக்கு தாமதித்த மோக்ஷமும் எவ்விதம் கூடும் என்று கேட்கலாம். ஆர்த்தன் என்பவன் ஸம்ஸாரத்தில் உள்ள துன்பங்களால் தவித்து, அதனைப் பொறுக்க இயலாமல் மோக்ஷம் பெற ப்ரபத்தி செய்கிறான். ஸம்ஸாரத்தில் உள்ள துயரங்களைப் பொறுத்துக் கொள்ளும் த்ருப்தன், சரீரம் கழிந்த பின்னர் மோக்ஷம் பெறும்வகையில் ப்ரபத்தி செய்கிறான். ஆக இவர்களுடைய மோக்ஷம் பெறுவதில் உள்ள வேகம் என்பது ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக உள்ளது. இதற்கு ஈடாக, அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப, பலனை அடைவதிலும் விரைவு மற்றும் காலதாமதம் ஏற்படும்.