Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 31)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
பக்தி, ப்ரபத்திகளில் விச்வாஸம் தளர்வது குறித்த சந்தேகங்களும் சமாதானமும்
மூலம்– சிலர்க்கு இவற்றில் விச்வாஸம் குலையும்படியும் அதுக்குப் பரிஹாரமும் சொல்லுகிறோம்: பக்தி ப்ரபத்திகள் புத்திபேதத்தாலே ஐச்வர்ய மோக்ஷங்களாகிற விருத்த பலங்களைக் கொடுக்கக்கூடுமோ? விதைக்கிறவனுடைய அபிஸந்திபேதத்தாலே ஒரு விதை வேறொரு பலத்தைக் கொடுக்கக் கண்டோமோ? என்று சிலர் பார்ப்பார்கள். இதுக்குப் பரிஹாரம் – ந்யாயங்களாலே பாதிக்கவொண்ணாதபடி ப்ரத்யக்ஷாதிகளைப் போலே ஸ்வவிஷயத்தில் ப்ரமாணமான சாஸ்த்ரம் காட்டுகையால் இப்படிக்கூடும். லோகத்திலும் தர்மசீலனாய் உதாரனான ராஜாவுக்கு விலையாக ஏதேனும் ஒன்றைக் கொடுத்தால் பெறும் (பெரும்) விலை கிடைக்கவும் அது தன்னையே உபஹாரபுத்தியாலே கொடுத்தால் வேண்டுவதெல்லாம் கிடைக்கவும் காணாநின்றோம். இப்பக்தி ப்ரபத்திகள் ப்ரயோஜநாந்தரபரனுக்கும் ப்ரவ்ருத்தி தர்மகோடியிலே நிற்கும். பகவச் சரணார்த்திகளுக்கு நிவ்ருத்தி தர்மங்களாம். இவ்வர்த்தம் நித்ய நைமித்திகளாதிகளிலும் ஒக்கும்.
– ஒரு சிலர் பக்தி மற்றும் ப்ரபத்தி ஆகியவற்றில் உள்ள விச்வாஸம் குறைதல் என்பது பற்றிய சந்தேகங்களை எழுப்புகின்றனர். இதற்கான சமாதானத்தைக் கூறுவோம். பக்தி மற்றும் ப்ரபத்தி போன்றவைகள் அவற்றைப் பின்பற்றுபவரின் விருப்பத்திற்கு (அல்லது மனோபாவத்திற்கு எனலாம்) ஏற்றபடி இந்தப் பூமியில் கிட்டக்கூடிய செல்வம் போன்றவற்றையோ அல்லது மோக்ஷம் முதலானவற்றையோ அளிக்கக்கூடும்? இவை இரண்டும் முரண்பட்ட பலன்கள் ஆகும். ஒரு விதையானது விதைப்பவனின் மனதிற்கு ஏற்ப வேறு ஒரு செடியை அளிக்கக்கூடுமோ (அதாவது – “எனக்கு நெல் வேண்டும்” என்று எண்ணியபடி கோதுமையைத் தூவினால், நெல் விளையுமோ)? இப்படியாகச் சிலர் கேட்டக்கூடும். இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில், வெறும் ந்யாய வாதங்களால் மட்டும் அல்லாமல், நேரில் காண்பது போன்று தெளிவாகவே சாஸ்த்ரங்கள் விளக்குகின்றன; ஆகவே இவற்றை மறுக்க இயலாது. இந்த உலகில் தர்மவழியில் நிற்கின்ற ஓர் அரசன் உள்ளான் என்று வைத்துக் கொள்வோம். அவனிடம் ஒரு பொருளை, அதன் சரியான விலைக்கு விற்றால், அந்தப் பொருளின் விலை உள்ளது உள்ளபடி நமக்குக் கிட்டிவிடும்; ஆனால், அந்தப் பொருளையே அரசனுக்குக் காணிக்கையாகக் கொடுத்தால், அந்தப் பொருளின் விலையைக் காட்டிலும் பன்மடங்கு விலையாக உள்ள பலன்கள் நமக்கு வருவதைக் காணலாம் அல்லவா? இப்படியாகவே பக்தி மற்றும் ப்ரபத்தி போன்றவை, மற்ற பயனை எண்ணிக் கைக்கொள்பவனுக்கு, இந்த உலகில் கிட்டக்கூடிய பலன்களுக்காகச் செய்யப்படும் தர்மங்களைப் போன்றே ஆகிவிடும். ஆனால், ஸர்வேச்வரனின் திருவடிகளையே சரணம் என்று எண்ணி, அவற்றைக் கைக்கொள்பவனுக்கு, மறுமைப் பயனுக்காகச் செய்யப்படும் தர்மங்களாக ஆகின்றன. இந்தச் சிந்தனை என்பது நித்ய நைமித்திக கர்மங்களுக்கும் பொருந்தும்.