Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 30)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

மஹாவிச்வாஸம் ப்ரபத்திக்கு அங்கமாகவேண்டுமா என்னும் சந்தேகம் நீக்குதல்

மூலம்– இவ் அவகாசத்திலே வேறே சிலர் ஆஸ்திகனுக்கு சாஸ்த்ரார்த்த விச்வாஸம் பிறக்குமதுக்கு மேற்பட மஹாவிச்வாஸமென்று ஒன்று உண்டோ? ஆகையால் இதுவும் ஸர்வசாஸ்த்ரார்த்த ஸாதாரணமாமத்தனை போக்கி ப்ரபத்திக்கு விசேஷித்து அங்கமாகவற்றோ? என்று நினைப்பார்கள். அதுவும் ந விச்வஸேதவிச்வஸ்தே விச்வஸ்தே நாதிவிச்வஸேத் இத்யாதிகளிலே விச்வாஸ தாரதம்யம் ப்ரஸித்தமாகையாலும், இவ்விடத்தில் அதிசயித விச்வாஸம் அங்கமென்கிற வசநத்தாலும் பரிஹ்ருதம். இப்படி புருஷவிசேஷங்களிலே விச்வாஸ தாரத்ம்யமுண்டென்னும் இடத்தை ஸ்ரீமதஷ்டாக்ஷர ப்ரஹ்மவித்யையிலே யஸ்ய யாவாம்ச்ச விச்வாஸ: தஸ்ய ஸித்திச்ச தாவதீ ஏதாவாநிதி நைதஸ்ய ப்ரபாவ: பரிமீயதே என்று ஸ்ரீநாரதபகவான் அருளிச்செய்தான். மந்தவிச்வாஸரான ப்ரபந்நாபாஸரையும் முடிவிலே ஸர்வேச்வரன் ரக்ஷிக்கும்; எங்ஙனேயென்னில், ஸக்ருதுச்சரிதம் யேந ஹரிரித்யக்ஷரத்வயம் பத்த: பரிகரஸ்தேந மோக்ஷாய கமநம் ப்ரதி இத்யாதிகளிலும் இவற்றையடியொற்றின த்வத் அங்க்ரிமுத்திச்ய, உதீர்ணஸம்ஸார என்கிற ச்லோகங்களிலும், “மொய்த்த வல்வினையுள் நின்று” இத்யாதிகளிலும் அபிப்ரேதமானபடியே இவன் பலஸித்திக்குக் கோலின காலத்துக்குள்ளே உபாய பூர்த்தியை உண்டாக்கி ரக்ஷிக்குமென்னுமிடத்தை நினைத்து, வ்ருதைவ பவதோ யாதா பூயஸீ ஜந்ம ஸந்ததி: தஸ்யாமந்யதமம் ஜந்ம ஸஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ என்று தேவலனைக் குறித்து ஸ்ரீசாண்டில்ய பகவான் அருளிச்செய்தானிறே. சரண்யம் சரணம் ச த்வமாஹுர்திவ்யா மஹர்ஷய: என்றதுவும் மஹர்ஷிகளுக்கே விச்வாஸம் கூடுவது; இவர்கள் வாக்யத்தையிட்டு மந்த விச்வாஸரைத் தெளிவிக்க வேணும் என்றபடி. இப்படி விச்வாஸ தாரதம்யமுண்டாகையால் யதாசாஸ்த்ரம் மஹாவிச்வாஸம் ப்ரபத்த்யங்கமாகக் குறையில்லை.

– ஒரு சிலர், “ஆஸ்திகன் ஒருவனுக்கு சாஸ்த்ரங்களில் கூறப்பட்டவை குறித்து திடமான நம்பிக்கை ஏற்பட்ட பின்னர், மஹாவிச்வாஸம் என்பதும் வேண்டுமோ? ஆகவே இத்தகைய நம்பிக்கை என்பது சாஸ்த்ரங்களில் கூறியபடி பொதுவானதாகவே இருக்கும் அல்லாமல், ப்ரபத்திக்கு மட்டும் தனியாகக் கூடுமோ?”, என்று கேட்கலாம். இதனை மறுப்போம். மஹாபாரதம் உத்யோகபர்வம் (37-9) - ந விச்வஸேதவிச்வஸ்தே விச்வஸ்தே நாதிவிச்வஸேத் – தன்னிடம் ஒருவனுக்கு நம்பிக்கை இல்லை என்றால், அவனை நம்பக்கூடாது; நம்பிய ஒருவனிடம் கூட மிக அதிகமான நம்பிக்கை வைத்தல் கூடாது – போன்ற வரிகளில் நம்பிக்கை வைக்கும் அளவுகளில் வேறுபாடுகள் உண்டு என்பதை அறியலாம். மேலும் மஹாவிச்வாஸம் என்பது ப்ரபத்தியின் அங்கம் என்று கூறுகின்ற வரிகளாலும் இந்த வாதம் தள்ளப்படவேண்டியதே ஆகும். ஸ்ரீமதஷ்டாக்ஷர ப்ரஹ்மவித்யையில், பல்வேறு அளவிலான நம்பிக்கையுடன் பல்வேறு மனிதர்கள் உள்ளனர் என்பதை நாரதமஹரிஷி, நாரதீய கல்பத்தில் (1-14) - யஸ்ய யாவாம்ச்ச விச்வாஸ: தஸ்ய ஸித்திச்ச தாவதீ ஏதாவாநிதி நைதஸ்ய ப்ரபாவ: பரிமீயதே – யார் ஒருவனுக்கு மூலமந்த்ரத்தில் எந்த அளவு நம்பிக்கை உள்ளதோ, அந்த அளவே அவனுக்குப் பலன் கிடைக்கும்; மூலமந்த்ரத்தின் மேன்மை இவ்வளவே என்று அளவிட்டு உரைக்க இயலாது – என்றது காண்க. ஒருவன் ப்ரபந்நனாக இருந்தபோதிலும், ப்ரபத்திக்கு உரிய அங்கங்கள் முழுமையாக இன்றி உள்ளபோதிலும் அவனை ஸர்வேச்வரன் கண்டிப்பாகக் காப்பாற்றுகிறான். இதற்கான ப்ரமாணம் ஸ்ரீவிஷ்ணுதர்மம் (70-84) - ஸக்ருதுச்சரிதம் யேந ஹரிரித்யக்ஷரத்வயம் பத்த: பரிகரஸ்தேந மோக்ஷாய கமநம் ப்ரதி – ஹரி: என்னும் இரண்டு எழுத்து கொண்ட மந்த்ரம் யாரால் உச்சரிக்கப்பட்டதோ, அவனால் மோக்ஷத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகிறது – என்பதாகும். இந்தக் கருத்தைப் பின்பற்றியே கீழே உள்ள வரிகள் உள்ளதைக் காண்க: ஸ்தோத்ரரத்னம் (28) - த்வத் அங்க்ரிமுத்திச்ய – உனது திருவடிகளைக் குறித்து எப்போதாவது, யாராலாவது, எப்படியாவது அஞ்சலி செய்யப்பட்டால் போதுமானது; அது அனைத்து பாவங்களையும் நீக்குகிறது. ஸ்தோத்ரரத்னம் (29) - உதீர்ணஸம்ஸார – உனது திருவடிகளின் மீது உள்ள பக்தி என்னும் அமிர்தமான கடலின் ஒரு திவலை போதுமானது; அதுவே மிகப்பெரிதாக எரிகின்ற ஸம்ஸாரம் என்னும் காட்டுத்தீயை அணைக்கவல்லது. திருமாலை (4) - மொய்த்த வல்வினையுள் நின்று – நெய்க்குடத்தை மொய்க்கும் எறும்புகள் போன்று தன்னைச் சூழ்ந்த கொடிய வினைகள் அனைத்தையும் “கோவிந்த” என்னும் திருநாமத்தால் க்ஷத்ரபந்து போக்கிக் கொண்டான். இந்த வரிகளில் கூறப்பட்டது போன்று ப்ரபந்நனின் பலனுக்கு ஏற்றதான உபாயத்தை ஸர்வேச்வரன் தானாகவே சீர்செய்து, தக்க சமயத்தில் காப்பாற்றுகிறான். இந்தக் கருத்தை மனதில் கொண்டுதான் தேவலர் என்னும் முனிவரிடம் ஸ்ரீசாண்டில்ய மஹரிஷி, சாண்டில்ய ஸம்ஹிதையில் - வ்ருதைவ பவதோ யாதா பூயஸீ ஜந்ம ஸந்ததி: தஸ்யாமந்யதமம் ஜந்ம ஸஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ – (உமக்குச் சரணாகதி என்னும் உபாயத்தில் நம்பிக்கை உள்ளது; ஆனால் மஹாவிச்வாஸம் இல்லை) ஆகவேதான் பல பிறவிகள் உமக்கு வீணாகக் கழிந்தன; இந்தப் பிறவியும் அவற்றில் ஒன்று என்று எண்ணி விடாதபடி, ப்ரபத்தியைச் செய்வீராக – என்றார். இராமாயணம் யுத்தகாண்டம் (120-18) - சரண்யம் சரணம் ச த்வமாஹுர்திவ்யா மஹர்ஷய: - மஹரிஷிகள் உன்னையே சரணம் அடையத்தக்கவன் என்றும், சரணம் அடைந்தவர்களைக் காப்பவன் என்றும் கூறுகிறார்கள் – என்பதற்கு ஏற்ப, மஹாவிச்வாஸம் என்பது மஹரிஷிகளுக்கே எளிதாக ஏற்படுகிறது அல்லவோ? ஆனால் இப்படியாக உள்ள இவர்களின் வாக்கியங்கள் மூலமாக குறைவான மஹாவிச்வாஸம் கொண்டவர்களைத் திருத்தவேண்டும். ஆகவே நம்பிக்கை என்பதில் இவ்விதமாக ஏற்றத்தாழ்வுகள் உள்ளதால், சாஸ்த்ரங்களில் கூறப்பட்டதான மஹாவிச்வாஸம் என்பது ப்ரபத்திக்கு அங்கம் என்னும் கருத்தில் எந்தக் குறையும் இல்லை என்றாகிறது.