Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 29)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
ப்ரபத்திக்கு அங்கங்கள் அவசியமில்லை என்னும் கருத்துக்கு மறுப்பு
மூலம்– இவ்வுபாயத்துக்கு ஆநுகூல்ய ஸங்கல்பாதிகள் வேணுமோ? ஆர்த்தோ வா யதி வா த்ருப்த: என்றும், மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந தோஷோ யத்யாபி ஸ்யாத் ஸதாமேததகர்ஹிதம் என்றும், யதி வா வாரண: ஸ்வயம் என்றும் சொல்லுகிற ரிபூணாமபி வத்ஸலனான சரண்யன் சரண்யகதனுடைய தோஷங்களைப் பார்க்குமோ? அநாலோசிதவிசேஷ அசேஷலோக சரண்யன் என்றன்றோ பூர்வர்கள் பாசுரம். ஆகையால் இவை ஸம்பாவித ஸ்வபாவங்களாமித்தனையன்றோவென்று சிலர் சொல்லுவார்கள். இதுக்கு ப்ரபத்த்யுத்தர காலத்தில் ஆநுகூல்யாதிகள் அநுவர்த்தியாதொழியிலும் ப்ரதிஸமாதாநம் சிறந்து ப்ரபத்தி பலமும் குறைவற்றிருக்குமென்கையிலே தாத்பர்யம் கொள்ளலாம். இங்ஙனல்லாதபோது ஷட்விதா சரணாகதி: என்றும், ந்யாஸ: பஞ்சாங்க ஸம்யுத: என்றும், ஸ்வாங்கை: பஞ்சபிராவ்ருதாம் என்றும் அங்காங்கிகளை விபஜித்துச் சொல்லுகிற பல ப்ரமாணங்களுக்கும் விருத்தம். லோகத்தில் ரக்ஷ்யத்ரவ்ய ஸமர்ப்பண மர்யாதைக்கும் பொருந்தாதென்றும் இவ்வங்கங்களுடைய ஸக்ருத்கரணாதி ப்ரகாரங்களுக்கும் முன்பே சொன்னோம். ப்ரஹ்மாஸ்த்ரமும் ஸ்வாங்க ஸாபேக்ஷமாயிறே இருப்பது. ஆகையால் ப்ரபத்தே: க்வசிதப்யேவம் பராபேக்ஷா ந வித்யதே ஸா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வகாமபலப்ரதா என்றதுவும் தர்மாந்தர நைரபேக்ஷ்யம் சொன்னபடி. இப்படியல்லாதபோது இவர்கள் இசைந்த மஹாவிச்வாஸத்தையும் இக்கட்டளையிலே ஸம்பாவித ஸ்வபாவமாக்கலாம்.
– ப்ரபத்தி உபாயத்துக்கு ”எதனைச் செய்யவேண்டுமோ அதனை மட்டுமே செய்தல்” போன்றதான உறுதிகள் அவசியமாக இருத்தல் வேண்டுமா? கீழே உள்ள வரிகள் காண்க: இராமாயணம் யுத்தகாண்டம் (18-28) - ஆர்த்தோ வா யதி வா த்ருப்த: - ஒருவன் உடனே பலன் வேண்டுகிற ஆர்த்தனாகவோ, சற்று தாமதித்துப் பலன் கிடைத்தாலும் பரவாயில்லை என்று உள்ள த்ருப்தனாகவோ இருந்தாலும். இராமாயணம் யுத்தகாண்டம் (18-3) - மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சநதோஷோ யத்யாபி ஸ்யாத் ஸதாமேததகர்ஹிதம் – என்னிடம் தோழன் போன்று வந்தவனை நான் எப்போதும் விடமாட்டேன். அவனிடம் எந்தக் குறை இருந்தாலும் நான் ஏற்பேன். இதனை உயர்ந்தவர்கள் கொண்டாடுவார்கள். இராமாயணம் யுத்தகாண்டம் (18-35) - யதி வா வாரண: ஸ்வயம் – சுக்ரீவனே! அவன் இராவணனாக இருந்தாலும் விபீஷணனாக இருந்தாலும் அழைத்து வா மேலே கூறப்பட்டபடி தன்னுடைய விரோதியாக உள்ளவர்களுக்கும் வாத்ஸல்யம் காண்பிக்கும் ஸர்வேச்வரன், தன்னிடம் சரணம் என்று புக வருபவர்களின் தோஷங்களை ஆராய்வானோ? சரணாகதி கத்யத்தில் (சூர்ணை 5) - அநாலோசிதவிசேஷ அசேஷலோக சரண்யன் – தன்னை சரணம் என்று அடைந்தவர்களின் விசேஷங்களை ஆராயாமல், அனைத்து லோகங்களுக்கும் சரணம் புக ஏற்றவன் – என்று அல்லவோ எம்பெருமானார் அருளிச்செய்தார்? ஆகையால் இது போன்ற அங்கங்கள் ப்ரபத்தி செய்தவர்களுக்கு அதன் பின்னர் உண்டாகக்கூடிய ஸ்வபாவங்களே அல்லாமல், முதலிலேயேஇருக்கவேண்டிய அவசியம் இல்லை – என்று சிலர் உரைக்கலாம். இவர்கள் இப்படியாக ஏண் கூறுகின்றனர் என்றால் – ப்ரபத்தியின்போது ஆநுகூல்ய ஸங்கல்பம் போன்றவை இருந்து, ப்ரபத்தி கைகூடுகிறது; அதன் பின்னர் அவை இல்லாமல் போகிறது; ஆகவே சிறிதுகாலம் அவன் செய்யக்கூடாதவற்றைச் செய்கின்ற ப்ரதிகூலனாக இருந்தாலும், தகுந்த பிராயச்சித்தம் மூலம் அத்தகைய தோஷங்கள் கழிந்துவிடும் – என்பதால் இருக்கலாம். இப்படிக் கொள்ளாமல், ஆநுகூல்ய ஸங்கல்பம் உள்ளிட்டவற்றை ப்ரபத்தியின் அங்கமாகக் கொள்ளவில்லை என்றால், ப்ரபத்திக்கான அங்கங்களை விரிவாகப் பிரித்து உரைக்கின்ற கீழே உள்ள பல ப்ரமாணங்களுக்கு முரண்பாடு உண்டாகிறது: அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37-28-29) - ஷட்விதா சரணாகதி: - சரணாகதி ஆறு வகைப்படும் லக்ஷ்மீதந்த்ரம் (17-74) - ந்யாஸ: பஞ்சாங்க ஸம்யுத: - ஐந்து அங்கங்களுடன் கூடியது பரந்யாஸம் லக்ஷ்மீதந்த்ரம் (28-11) - ஸ்வாங்கை: பஞ்சபிராவ்ருதாம் – ஐந்து அங்கங்களுடன் கூடிய பரந்யாஸத்தைச் செய்வானாக இந்த உலகில் சரணம் புகுகின்ற வஸ்துக்களுக்கு இந்த அங்கங்கள் ஒருமுறையேனும் அவசியம் என்பதை நாம் முன்னரே உரைத்தோம். ப்ரஹ்மாஸ்திரம் கூட ஒரு சில அங்கங்களை எதிர்பார்க்கிறது அல்லவோ? எனவே ஸநத்குமார ஸம்ஹிதை - ப்ரபத்தே: க்வசிதப்யேவம் பராபேக்ஷா ந வித்யதேஸா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வகாமபலப்ரதா – பக்தியோகம் போன்று ப்ரபத்திக்கு வேறு எந்த எதிர்பார்ப்பும், எந்தக் காலத்திலும் இல்லை; அது எப்போதும், எல்லார்க்கும் பலன் அளிக்கும் – போன்ற வரிகள் மற்ற தர்மங்கள் எதனையும் எதிர்பார்ப்பதில்லை என்ற பொருளிலேயே உரைக்கப்பட்டது. இப்படிக் கொள்ளவில்லை என்றால், மஹாவிச்வாஸம் என்பதையும் இவர்கள் இந்தப் பட்டியலில் சேர்த்து, அதுவும் அவசியமற்ற அங்கம் எனலாமே!