Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 27)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

பக்தியைக் காட்டிலும் ப்ரபத்திக்கு உள்ள மேன்மை

மூலம்– அவற்றுக்கு ஸாமர்த்யமில்லாமையாதலால் விளம்பக்ஷமனல்லாமையாதலால் இப் ப்ரபத்தியை ஸ்வதந்த்ரோபாயமாகப் பற்றினவனை “செய்த வேள்வியர்” என்றும், க்ருதக்ருத்யனென்றும், அநுஷ்டித க்ரதுசதன் என்றும், இவனுக்கு மரணாந்தமாக நடக்கிற வ்யாபாரங்களை அவப்ருத பர்யந்த கர்த்தவ்ய கலாபங்களாக ஸ்துதித்தும், க்ரத்வந்தராநுஷ்டாநம் பண்ணினவனுக்கு மேலுள்ள நித்ய நைமித்திகங்கள் போலே இவனுக்கு ஸ்வதந்த்ரவிதியாலே வர்ணாச்ரமாதிதர்மங்கள் நடவா நிற்கச் செய்தேயும் அநுஷ்டிதாத்மயாக பலத்தைப் பற்றக் கர்த்தவ்யாந்தர நிரபேக்ஷனாகவும் ஆழ்வார்களும் மஹர்ஷிகளும் பகவச்சாஸ்த்ரங்களும் வேதங்களும் கோஷியா நின்றன. ஆகையால் தபஸ்விப்யோ அதிகோ யோகீ ஜ்ஞாநிப்யோ அபி மதோ அதிக: கர்மிப்யச்சாதிகோ யோகீ தஸ்மாத்யோகீ பவார்ஜுந இத்யாதிகளாலே ப்ரவ்ருத்தி தர்மங்களிற்காட்டில் நிவ்ருத்தி தர்மங்கள் ச்ரேஷ்டங்களானாற் போலவும், அவை தம்மில் ஆத்மவிஷயமான யோகம் ச்ரேஷ்டமானாற் போலவும், ஆத்மவிஷய யோகங்களிற்காட்டில் யோகிநாமபி ஸர்வேஷாம் என்கிறபடியே வஸுதேவநந்தன விஷயமான யோகம் ச்ரேஷ்டமானாற் போலவும், பரமாத்ம விஷய வித்யாவிசேஷங்களெல்லாவற்றிலும் ந்யாஸநிக்ஷேபாதி சப்தங்களாலே சொல்லப்பட்ட வித்யாவிசேஷமே ஸுகரத்வ ஸக்ருத்கர்த்தவ்யத்வ சீக்ர பலப்ரதத்வாதிகளாலே ச்ரேஷ்டதமம். ந்யாஸவித்யையிலே கண்டோக்தமான இவ்வர்த்தத்தை தேஷாம் து தபஸாம் ந்யாஸமதிரிக்தம் தப: ச்ருதம் ஸத்கர்மநிரதா: சுத்தா: ஸாங்க்யயோகவிதஸ்ததா நார்ஹந்தி சரணஸ்தஸ்ய கலாம் கோடிதமீமபி என்று பகவச்சாஸ்த்ரம் உபப்ரும்ஹித்தது. அவகாஹநாதிகளில் ஸமர்த்தனல்லாதவனுக்கு மாநஸம் விஷ்ணுசிந்தநம் என்று பகவத்சிந்தநத்தை ஸ்நாநமாக விதித்தால் அது ஸ்நாநாந்தரங்கள் பண்ணுகிற சுத்தியையும் பண்ணி, பாபாந்தரங்களையும் சமிப்பித்து அப்போதே பகவதநுபவ ரஸத்தையுமுண்டாக்குமாப்போலே உபாஸநாதிகளில் ஸமர்த்தனல்லாதவனுக்கு ப்ரபத்தியை விதித்தாலும் இப் ப்ரபத்திதானே அவை கொடுக்கும் பலத்தையும் அவை தம்மையும் கொடுக்கவற்றாய் அகிஞ்சநனுக்கு உத்தாரகமாய் அவன் அபேக்ஷித்த காலத்திலே பலாவிநாபாவத்தையும் உடைத்தாயிருக்கையாலே அதிகப்ரபாவமாயிருக்கும்.

– அதனைச் செய்யத் தகுதி இல்லாத காரணத்தாலோ, அல்லது தகுதி இருந்தாலும் மோக்ஷம் பெறுவதில் உள்ள காலதாமதத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாததாலோ ஒருவன் ப்ரபத்தியை உபாயமாகக் கைக்கொள்ளக்கூடும். யார் ஒருவன் ப்ரபத்தியை ஸ்வதந்த்ரமான உபாயமாகக் கொண்டானோ அவனைக் கீழே உள்ள வரிகளில் காணப்பட்டபடி ஆழ்வார்களும், மஹரிஷிகளும், பகவத் சாஸ்த்ரங்களும், வேதங்களும் புகழ்கின்றன: திருவாய்மொழி (5-7-5) – செய்த வேள்வியர் – யாகமாகிய ப்ரபத்தியைச் செய்தவர்கள் ஸாத்வத தந்த்ரம் – க்ருதக்ருத்யன் – செய்யவேண்டியதைச் செய்தவன் அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37-49) - அநுஷ்டித க்ரதுசதன் – நூறு யாகங்களைச் செய்தவன் மேலும் இந்தச் சாஸ்த்ரங்கள் அவனது மரண காலம்வரை அவன் செய்துவரும் ஒவ்வொரு செயல்களையும் பாராட்டுகின்றன; அந்தச் செயல்கள் யஜ்ஞங்கள் இயற்றுவதாகவும், முடிவில் செய்யப்படும் நீராடுதல் போன்றும் கொள்ளப்படுகின்றன. இந்தச் சாஸ்த்ரங்கள் மேலும் உரைப்பது என்னவென்றால் – யஜ்ஞங்களை இயற்றிய ஒருவன், அதன் பின்னர் எவ்விதம் தன்னுடைய நித்ய நைமித்திக கர்மங்களை இயற்றியபடி உள்ளானோ அது போன்று, ப்ரபத்தி செய்தவன் தனக்கு விதிக்கப்பட்டதான வர்ணாச்ரம தர்மங்களைச் சரிவர இயற்றியபடி இருத்தல்வேண்டும். ஆனால் யார் ஒருவன் ஆத்மயஜ்ஞம் செய்தானோ அவன் தன்னுடைய பலன்களைப் பெறும் பொருட்டு எந்தவிதமான கர்மங்களையும் செய்தல் வேண்டாம். கீதையில் (6-10) - தபஸ்விப்யோ அதிகோ யோகீ ஜ்ஞாநிப்யோ அபி மதோ அதிக: கர்மிப்யச்சாதிகோ யோகீ தஸ்மாத்யோகீ பவார்ஜுந – அர்ஜுனா! ஆத்ம ஸ்வரூபத்தை த்யானம் செய்யும் யோ ஒருவன், தவம் செய்பவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன்; ஆத்ம ஞானியைத் தவிர மற்ற ஞானிகளைக் காடிலும் உயர்ந்தவன்; அச்வமேதம் உள்ளிட்ட கர்மங்களைச் செய்பவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன்; ஆகவே நீயும் ஆத்ம ஸ்வரூபத்தை த்யானம் செய்பவனாக ஆவாயாக – என்றது காண்க; ஆகவே இந்தப் பிறவியில் உண்டாகின்ற பலனுக்காகச் செய்யப்படும் செயல்களைக் காட்டிலும், மறுமையில் விளைய உள்ள பலனுக்காகச் செய்யப்படும் கர்மங்களே சிறந்தவை; அவற்றைக் காட்டிலும் ஆத்மாவைக் குறித்த யோகங்கள் மேலும் சிறந்தவை; ஆத்மாவைக் குறித்த யோகங்களில், கீதை (6-47) - யோகிநாமபி ஸர்வேஷாம் – என்னைக் குறித்தே த்யானிப்பவன் மிகவும் உயர்ந்த யோகி – என்று கூறுவதற்கு ஏற்ப, வஸுதேவரின் புத்ரனாகிய க்ருஷ்ணனைக் குறித்த யோகம் என்பது மிகவும் சிறந்தது ஆகும்.இது போன்றே பரமாத்மாவைக் குறித்துப் பல வித்யைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் விட ந்யாஸம், நிக்ஷேபம் என்று கூறப்படும் ப்ரபத்தியானது – செய்வதற்கு எளியது, ஒருமுறை செய்தாலே போதுமானது, விரைவாகப் பலன் அளிப்பது – போன்ற குறிப்பட்ட சில காரணங்களால் மிகவும் ஏற்றமுடையதாகிறது. இப்படிப்பட்ட ந்யாஸ வித்யையின் பெருமை குறித்து பாஞ்சராத்ரம் பின்வருமாறு உரைக்கிறது: அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37-36) - தேஷாம் து தபஸாம் ந்யாஸமதிரிக்தம் தப: ச்ருதம் – மோக்ஷம் குறித்து உபதேசிக்கப்பட்ட தவங்கள் அனைத்திலும் ப்ரபத்தியானது மிகவும் உயர்ந்த தவமாகிறது. லக்ஷ்மீ தந்த்ரம் (17-62) - ஸத்கர்மநிரதா: சுத்தா: ஸாங்க்யயோகவிதஸ்ததா நார்ஹந்தி சரணஸ்தஸ்ய கலாம் கோடிதமீமபி – கர்மயோகத்தைக் கைக்கொண்டு, ஞானயோக பக்தி யோகங்களைச் செய்பவர்கள் ப்ரபத்தி செய்தவனுடைய கோடியில் ஒரு பாகத்தைக் கூடப் பெறத் தகுதியானவர்கள் அல்லர். உடல்நிலை சரியில்லாதவை போன்ற காரணங்களால் மூழ்கி நீராட இயலாத ஒருவனுக்கு கார்க்ய ஸ்ம்ருதி - மாநஸம் விஷ்ணுசிந்தநம் – விஷ்ணுவைக் குறித்த த்யானம் – என்று கூறுவதற்கு ஏற்ப ஸர்வேச்வனை த்யானம் செய்வதையே ஒருவகையான நீராடுதல் என்று சாஸ்த்ரங்கள் உரைக்கின்றன. இது மாநஸ ஸ்நாநம் எனப்படும். இது நீரில் மூழ்கி நீராடுதல் போன்றவை அளிக்கின்ற தூய்மையை அளிப்பதுடன் அல்லாமல், பாவங்களையும் உடனே போக்கிவிடும். இதனால் பகவத் அநுபவம் என்னும் இனிமையையும் அப்போதே உண்டாக்கிவிடும். இது போன்றே பக்தியோகம் போன்றவற்றில் ஈடுபடும் சக்தியற்ற ஒருவனுக்கு ப்ரபத்தியை விதிக்கலாம். இதனால் அந்த ப்ரபத்தி என்பது பக்தியோகம் அளிக்கவல்ல பலனை அளிக்கிறது; பக்தியோகத்தையும் அளிக்கிறது; மற்ற உபாயங்களைக் கைக்கொள்ள இயலாதவனைக் கரையேற்றுகிறது; அவன் விரும்பும் காலத்தில் தக்க பலனையும் அளிக்கிறது; இதனால் ப்ரபத்தியானது மிகவும் மேன்மை கொண்டதாக உள்ளது.