Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 26)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

பக்தி ஸ்வரூபத்திற்கு விரோதமானது என்பதன் உட்கருத்து

மூலம்– ஆனபின்பு உபாஸநாதிகளுக்கு வேறொரு விரோதமில்லாமையாலே யதாசாஸ்த்ரம் ஆதுராதிகளுக்கு அவகாஹநாதிகள் போலே இவை அகிஞ்சந: அநந்யகதி: என்றிருக்கும் அதிகாரிக்கு ஸ்வாதிகார விருத்தங்கள் என்ன ப்ராப்தம். இவ்வதிகார விரோதமறியாதே உபாஸநாதிகளிலே ப்ரவர்த்திக்குமவனைப் பற்ற நரஸ்ய புத்தி தௌர்பல்யாத் உபாயாந்தரமித்யதே என்றது. ஆகையால் இவ்வுபாஸநாதிகளும் அதிகார்யந்தரத்துக்கு யதாதிகாரம் அநுகுணங்கள்.

– மேலே கூறப்பட்ட பல கருத்துக்கள் மூலம், பக்திக்கு ஸ்வரூப விரோதம் இல்லை என்றே ஆகிறது. ஆனால், “நோய்வாய்ப்பட்டவன் குளிர்ந்த நீரில் நீராட சக்தி அற்றவன்” என்பது போன்று, ப்ரபத்தியைத் தவிர மற்ற உபாயங்களைக் கைக்கொள்ளச் சக்தியில்லாத அதிகாரிக்குப் பக்தியானது தனது தகுதிக்கு ஏற்புடையது அல்ல என்று கொள்வது சரியே ஆகும். இது ஸ்தோத்ரரத்னம் (22) - அகிஞ்சந: அநந்யகதி: - என்னைக் காப்பாற்றிக் கொள்ள வேறு கதியற்றவன் – என்றுள்ள அதிகாரிக்குப் பொருத்தமே ஆகும். மேலும் தாங்கள் பக்தி அல்லது உபாஸனையைக் கைக்கொள்ளும் தகுதி அற்றவர்கள் என்று தெரியாமல், அதனை உபாயமாகக் கொள்பவர்கள் குறித்தே லக்ஷ்மீ தந்த்ரத்தில் (28-17) - நரஸ்ய புத்தி தௌர்பல்யாத் உபாயாந்தரமித்யதே – தன்னுடைய அறியாமை என்னும் புத்தி தடுமாற்றத்தால் பக்தி என்னும் உபாயத்தைக் கைக்கொள்கிறான் – என்று கூறப்பட்டது. ஆகவே இது போன்ற உபாஸனங்கள் கூட, மற்ற அதிகாரிகளுக்கு, அவர்களின் தகுதிக்கு ஏற்பவே பொருந்தும்.