Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 25)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
பக்தியோகம் என்பது ஸ்வரூபத்திற்கு முரணானது என்னும் வாதத்திற்கான மறுப்பு
மூலம் – இப்படி யுகாந்தரங்களில் இவை தர்மங்களானாலும் கலியுகத்தில் யதோக்தமான பரமாத்மோபாஸநாதிகளுக்கு அதிகாரிகள் துர்லபராகையாலே இவை இக்காலத்துக்குப் பொருந்துபவையல்ல. ஆகையாலன்றோ கலௌ ஸங்கீர்த்ய கேசவம் என்றும், கலேர்தோஷநிதே ராஜந்நாஸ்தி ஹ்யோகோ மஹாந் குண: கீர்த்தநாதேந க்ருஷ்ணஸ்ய முக்தபந்த: பரம் வ்ரஜேத் என்றும் சொல்லுகிறது – என்னவுமொண்ணாது, கலௌ க்ருதயுகம் தஸ்ய கலிஸ்தஸ்ய க்ருதே யுகே யஸ்ய சேதஸி கோவிந்தோ ஹ்ருதயே தஸ்ய நாச்யுத: என்கிறபடியே இக்காலத்திலும் உபாஸநாதிகளுக்கு அதிகாரிகள் ஸ்வயம்ப்ரயோஜந யோக நிஷ்டரான பூர்வாசார்யர்கள் போலே ஸம்பாவிதரிறே. இங்ஙனல்லாதபோது ஸங்கீர்த்தந வ்யதிரிக்தையான ப்ரபத்திக்கும், கிம் நு தஸ்ய ச மந்த்ரஸ்ய கர்மண: கமலாஸந ந கப்யதே அதிகாரீ வா ச்ரோதுகாமோ அபி வா நர: இத்யாதிகளிற்படியே மஹாவிச்வாஸாதியுக்தரான அதிகாரிகள் தேட்டமாகையாலே அவ்விடத்திலும் இப் ப்ரஸங்கம் வரும்.
– இவ்விதம் பல யுகங்களில் பக்தியோகம் என்பது தர்மமாக இருந்தபோதிலும், இந்தக் கலியுகத்தில் சாஸ்த்ரங்களில் கூறப்பட்ட விதிகளின்படி பரமாத்மாவைக் குறித்து த்யானிக்கவல்ல அதிகாரிகளோ அல்லது உபாஸனங்களில் இழியக் கூடிய அதிகாரிகளோ கிட்டுவது கடினம் என்பதால், இந்தக் காலத்திற்குப் பக்தியோகம் பொருந்தாது. இதனால் அல்லவோ கீழே உள்ள வரிகள் கூறப்பட்டன: ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-2-17) - கலௌ ஸங்கீர்த்ய கேசவம் – க்ருத யுகத்தில் த்யானம் மூலமும், த்ரேதா யுகத்தில் யாகம் மூலமும், த்வாபர யுகத்தில் அர்ச்சனை மூலமும் கிட்டும் பலன்கள், கலி யுகத்தில் நாமஸங்கீர்த்தனம் மூலமே கிட்டிவிடும். மஹாபாரதம் (12-3-51) - கலேர்தோஷநிதே ராஜந்நாஸ்தி ஹ்யோகோ மஹாந் குண: கீர்த்தநாதேந க்ருஷ்ணஸ்ய முக்தபந்த: பரம் வ்ரஜேத் – அரசனே! தோஷங்கள் அனைத்திற்கும் இருப்பிடமாக உள்ள கலியுகத்திற்கு ஒரு உயர்ந்த குணமும் உள்ளது. கலியுகத்தில் க்ருஷ்ணனின் திருநாமத்தைக் கூறுவதால் கர்மபந்தங்களிலிருந்து விடுபட்டு அவனையே அடைகிறான். இது போன்ற வாதங்களை ஏற்க இயலாது. இந்தக் கலிகாலத்திலும் ஸ்வயம் ப்ரயோஜனமாகப் பக்தியோகத்தை இயற்றும் பூர்வாசார்யர்கள் போன்று பக்தியோகத்தைக் கைக்கொள்ளவல்ல சில அதிகாரிகள் தோன்றக்கூடும். இதனை விஷ்ணுதர்மம் (109-57) - கலௌ க்ருதயுகம் தஸ்ய கலிஸ்தஸ்ய க்ருதே யுகே யஸ்ய சேதஸி கோவிந்தோ ஹ்ருதயே தஸ்ய நாச்யுத: - யாருடைய மனதில் கோவிந்தன் உள்ளானோ, அவனுக்குக் கலியுகம் என்பது க்ருதயுகமாகவே ஆகிறது; யாருடைய மனதில் அச்சுதன் இல்லையோ அவனுக்குக் க்ருதயுகமும் கலியுகமாகிறது – என்றது காண்க. இவ்விதம் கொள்ளவில்லையென்றால் நாம ஸங்கீர்த்தனைக் காட்டிலும் வேறுபட்டதான ப்ரபத்திக்கு, பௌஷ்கர ஸம்ஹிதை - கிம் நு தஸ்ய ச மந்த்ரஸ்ய கர்மண: கமலாஸந ந கப்யதே அதிகாரீ வா ச்ரோதுகாமோ அபி வா நர: - நான்முகனே! இந்த மந்த்ரத்துக்கும், இதனை உரைத்தபடியே செய்யப்படும் ப்ரபத்திக்கும் அதிகாரியும் கிட்டமாட்டான், மந்த்ரத்தைக் கேட்கும் மனிதனும் கிட்டமாட்டான் – என்று கூறுவதற்கு ஏற்ப மஹாவிச்வாஸத்துடன் கூடிய அதிகாரிகள் கிட்டமாட்டனர் என்பதால், ப்ரபத்தியும் கலிகாலத்தில் பொருந்தாத ஒன்றாகிவிடும்.