Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 24)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
பக்தியோகம் என்பது ஸ்வரூபத்திற்கு முரணானது என்னும் வாதத்திற்கான மறுப்பு
மூலம்– விஹிதங்களேயாகிலும் ஆசார்யருசி பரிக்ருஹீதங்களல்லாதபடியாலே அதிதி ஸத்காராதிகளிலேவிஹிதங்களான கவாலம்பாதிகள் போலே உபாஸநாதிகள் சிஷ்ட பரிக்ரஹ விருத்தங்களாகையாலே அநாதரணீயங்களல்லவோவென்கையும் நிரூபக வாக்யமன்று. ஸதாசார்ய பரிக்ரஹமில்லாதபோதன்றோ அஸ்வர்க்யம் லோக வித்விஷ்டம் தர்ம்யமப்யாசரேந்ந து என்று கழிக்கலாவது. இங்கு தஸ்மை நமோ முநிவராய பராசராய என்னும்படி ச்லாக்யமான பராசராதி பூர்வாசார்யர்கள் அநுஷ்டிக்கையாலே ஸர்வசிஷ்ட பஹிஷ்காரம் சொல்லவொண்ணாது.
– பக்தி மற்றும் ப்ரபத்தி போன்றவை சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்டபோதிலும், அவற்றை பூர்வாசார்யர்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் அவற்றைக் கைவிடவேண்டும்; விருந்தாளிகளை மகிழ்விப்பதற்காக எருதுகளைக் கொல்வது விதிக்கப்பட்டது போன்றே இதுவும் ஆகிறது; ஆகவே இவற்றை சிஷ்யர்கள் ஏற்கத்தக்கது அல்ல என்று கைவிடவேண்டும் எனச் சிலர் உரைக்கலாம். இத்தகைய வாக்யங்கள் ஆராய்ந்து உரைக்கப்பட்டவை அல்ல என்றே கூறவேண்டும். அனைத்து ஆசார்யர்களும் இதனை கைவிட்டால் அல்லவோ, யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி (1-156) - அஸ்வர்க்யம் லோக வித்விஷ்டம் தர்ம்யமப்யாசரேந்ந து – சாஸ்த்ரங்களில் ஒரு குறிப்பிட்ட பலனுக்காக ஓர் உபாயம் கூறப்பட்டிருந்தாலும், அந்த உபாயம் ஸ்வர்க்கம் பெறுவதற்குத் தடையாகவோ அல்லது உலகத்தாரால் பழிக்கப்படும்படி இருந்தாலோ அதனைக் கைக்கொள்ளக்கூடாது – என்ற வாக்கியத்தின்படி கைவிடவேண்டும்? ஆனால் இங்கு ஸ்தோத்ரரத்னம் (4) - தஸ்மை நமோ முநிவராய பராசராய – ரிஷியான பராசரருக்கு எனது நமஸ்காரங்கள் – என்று கொண்டாடப்படுகின்ற பராசரர் உள்ளிட்ட பல பூர்வாசார்யர்கள் பக்தியோகத்தை கைகொண்டார்கள் என்பதால், அனைவரும் அதனை ஒதுக்கினர் என்று கூற இயலாது.