Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 23)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

பக்தியோகம் என்பது ஸ்வரூபத்திற்கு முரணானது என்னும் வாதத்திற்கான மறுப்பு

மூலம் – ஆனாலும், அபிசாராதிகளை விதித்த கட்டளையிலே சாஸ்த்ரப்ரரோசநாதிகளில் அபிஸந்தியாலே அதிகாரி விசேஷத்திலே உபாஸநாதிகளை விதித்ததத்தனையன்றோ? முமுக்ஷுவுக்கு ப்ராப்யப்ராபகங்கள் ஏகமாகையாலே ப்ராப்யாநுரூபமான உபாயம் ஸர்வேச்வரன் ஒருவனுமே. ஆகையாலன்றோ அத பாதக பீதஸ்த்வம் ஸர்வபாவேந பாரத விமுக்தாந்ய ஸமாரம்போ நாராயணபரோ பவ என்று தர்மதேவதை தன் புத்திரனுக்கு உபாஸநாதிகளை ப்ராப்யவிரோதிகளென்று நினைத்து நிந்தித்ததென்னில், அதுவும் அத்யந்த அநுபபந்நம். எங்ஙனேயென்னில் – அபிசாராதிகள் பல விசேஷமடியாகவிறே அநர்த்தஹேதுக்களாயின. இங்கு பலம் மோக்ஷமானபடியாலே அம்முகத்தால் அநர்த்தப்ரஸங்கமில்லை. ஏகாதிகாரி விஷயத்திலே ஏகபலத்துக்கு குருவாயிருப்பதொன்றை உபாயமாகக் காட்டி லகுவாயிருப்பதொன்றிலே ருசியைப் பிறப்பிக்கிறது என்கை விவக்ஷித விபரீதம். அங்கத்திலே அங்கிபல நிர்தேசமாய் ஸ்துதிமாத்ரமாயிறே அப்போது பலிப்பது. ப்ராப்யத்துக்கு இன்னது அநுரூபமென்னுமிடம் சாஸ்த்ரவேத்யமாகையாலே யுக்திமாத்ரத்தாலே ப்ராப்யவிரோதம் சொல்லவொண்ணாது. ஆகமஸித்தங்களில் ஒன்றை விருத்த தர்க்கங்களாலே பாதிக்கில், துல்ய ந்யாயத்தாலே ஸர்வ சாஸ்த்ரங்களும் ப்ரபத்தி சாஸ்த்ரம்தானும் ப்ரமாணமன்றிக்கேயொழியும். அத பாதக பீதஸ்த்வம் என்கிறவிடத்திலும் பாதக சப்தத்தாலே உபாஸநாதிகளை நிந்திக்கிறதென்கைக்கும் ப்ரமாணமில்லை. ஆகையால் முமுக்ஷுவுக்கு விஹிதங்களாகையாலே பக்தி ப்ரபத்திகள் இரண்டும் யதாதிகார பரிக்ராஹ்யங்கள்.

– ஆனால் ஒரு சில சாஸ்த்ரங்கள் அபிசாரங்களை (பில்லி, ஏவல் போன்றவை) விதித்துள்ளன. இது போன்றே ப்ரபத்தி போன்றவைகளில் நம்பிக்கை உண்டாக்குவதற்காக சாஸ்த்ரம் பக்தி என்பதை உபாயமாக விதித்தது. ஆக இவற்றை இயற்றவேண்டும் என்னும் கட்டாயம் விதிக்கப்படவில்லை. மோக்ஷத்தை விரும்பும் ஒருவனுக்கு உபாயமும் பலனும் ஒருவனே ஆவான். ஆகவே பலனாக உள்ள எம்பெருமானை அடையத்தக்க உபாயமும் எம்பெருமானாகவே உள்ளதால், பக்தியோகம் உபாயம் அல்ல என்றே தேறுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே தர்மதேவதை தன்னுடைய புத்ரனாகிய தர்மனுக்கு விஷ்ணுதர்மத்தில் (66-72) - அத பாதக பீதஸ்த்வம் ஸர்வபாவேந பாரத விமுக்தாந்ய ஸமாரம்போ நாராயணபரோ பவ – தர்மனே! நீ பாவங்களுக்குப் பயந்தாய் என்றால் மற்ற செயல்களைச் செய்யாமல் எப்போதும் நாராயணனையே அடையவேண்டியவனாக எண்ணியபடி இருப்பாயாக – என்றாள். ஆக தர்மதேவதையும் உபாஸனை போன்றவைகளை அடையப்படும் இலக்கிற்குத் தடையாகவே எண்ணியதைக் காணலாம். இவ்விதம் சிலர் உரைப்பதும் பொருந்தாத வாதங்களே ஆகும். எப்படி? அபிசார கர்மங்கள் அனைத்துமே தீயபலனைக் கருத்தில் கொண்டு இயற்றப்படுவதால், அவை தீயதே ஆகும். ஆனால் பக்தியோகமானது மோக்ஷம் என்னும் உயர்ந்த பலனை அளிப்பதால் இவ்விதம் தவறான பலனை அளிப்பதாகாது. உலகில் எளிதான ஒன்றை உதாரணமாகக் காண்பித்து, கடினமான மற்றொரு செயலில் ஒருவனை ஈடுபடுத்த முயல்வதையே காணலாம் அல்லாமல், கடினமான ஒன்றை உதாரணமாகக் காண்பித்து எளிய செயலைச் செய்விப்பது வழக்கம் அல்ல. இங்கு அதே போன்று கடினமான பக்தியோகம் என்பதைக் காண்பித்து எளியதாக உள்ள ப்ரபத்தி மீது ருசியை உண்டாக்கிவதாகக் கூறுவது பொருந்தாத வாதமாகும். மேலும் இவர்களது வாதத்தின்படி- அங்கியாகிய ப்ரபத்தியின் பலனாக மோக்ஷம் உள்ளது; ஆனால் ப்ரபத்தியின் அங்கமான பக்தி என்பதற்கும் மோக்ஷம் பலனாகக் கூறப்படுவது வெறும் அர்த்தவாதமே (பக்தியைப் புகழ்வதற்காகவே) – என்றாகிறது. ஆகவே இவர்களைப் பொறுத்தவரையில் பக்தி என்பது மோக்ஷத்தை அளிக்காது என்பதாகிறது. இவ்விதம் கொண்டால் பக்தி என்பதை ப்ரபத்தியின் அங்கமாக இவர்களே கொண்டதாகிறது; ஆனால் இந்தக் கருத்து இவர்கள் உண்மையில் ஏற்காத ஒன்றாவதால், முரண்பாடு உண்டாகிறது. ஆக இவர்களின் வாதம் தள்ளப்படுகிறது. அடையப்படும் இலக்காக உள்ள ஸர்வேச்வரனை, அவனாலேயே ஏற்கப்படுவதான அவனை அடைவிக்கக்கூடிய உபாயம் என்பது சாஸ்த்ரங்கள் மூலமாக மட்டுமே அறியக்கூடியது. ஆகவே வெறும் யுக்தியை மட்டுமே கருத்தில் கொண்டு “பக்தியோகம் பலனுக்கு ஏற்ற உபாயம் அல்ல” என்று தள்ளுதல் சரியான செயல் அல்ல. ஸ்ருதிகளால் கூறப்பட்ட ஏதேனும் ஒன்றை, த்தாழ்வான வாதங்கள் மூலமாக மறுப்பது என்றால், அதே காரணம் மூலமாக ப்ரபத்தி உட்பட அனைத்துவிதமான சாஸ்த்ரங்களும் ப்ரமாணங்கள் அல்ல என்று தள்ளிவிடலாம் அல்லவோ? இவர்கள் மேலே கூறிய - அத பாதக பீதஸ்த்வம் – என்னும் விஷ்ணுதர்ம வாக்கியத்தில் பாதகம் என்னும் பதம் மூலம் உபாஸனை போன்றவைகள் தள்ளப்படுகின்றன என்று கூறுவதற்கு எந்த ப்ரமாணமும் இல்லை. ஆகவே பதி மற்றும் ப்ரபத்தி ஆகிய இரண்டுமே மோக்ஷம் அடைய விரும்பும் ஒருவனுக்கு விதிக்கப்பட்டதால், அவரவர்களின் அதிகாரத்திற்கு ஏற்ப இவற்றில் ஒன்று உபாயமாகிறது.