Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 22)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

பக்தியோகம் என்பது ஸ்வரூபத்திற்கு முரணானது என்னும் வாதத்திற்கான மறுப்பு

மூலம்– ஆனாலும், அநந்யார்ஹ சேஷபூதனாகத் தன்னைத் தெளிந்து பரமை காந்தியாயிருக்கிற இவனுக்கு தேவதாந்தர த்வாரங்களான வர்ணாச்ரமதர்மங்களும் அவற்றை இதிகர்த்தவ்யதையாக உடைத்தான பக்தியோகாதிகளும் ஐகாந்த்ய விருத்தங்களன்றோ? சுத்த யாஜிகளுக்கன்றோ பரமைகாந்தித்வம் கூடுவது என்னில் – இது பாஷ்யாதிகளின் நிஷ்கர்ஷம் தெளியாமையடியாக வந்த சோத்யம். எங்ஙனேயென்னில் – ப்ரதர்த்தநாதி வித்யைகளில் பரமாத்மா இந்த்ராதி சரீரகனாக முமுக்ஷுவுக்கு உபாஸ்யன் என்று அறுதியிட்டார். வித்யாங்கமான வர்ணாச்ரம தர்மங்களிலும் அவ்வோ தேவதைகளைச் சரீரமாகக் கொண்டு நிற்கிற பரமாத்மாவே ஆராத்யனென்று நிஷ்கர்ஷித்தார். ஆகையால் ஸ்வதந்த்ரமாகச் சில தேவதைகளைப் பற்றினாலும் பலாந்தர காமனையாலே தன்னுடைய நித்யநைமித்திகங்களுக்குப் புறம்பான தேவதாந்தராந்வயம் வரிலும் பரமைகாந்தித்வத்துக்கு விருத்தமாம். பலாந்தர ஸங்கமுமின்றிக்கே பரமாத்மாவுக்கு விசேஷணங்களாகத் தேவதைகளை வைத்து அக்நயாதி சப்தங்களை விசேஷ்ய பர்யந்தமாக அநுஸந்தித்தும், ஸாக்ஷாதப்யவிரோதம் ஜைமிநி: என்கிற ந்யாயத்தாலே அக்நீந்த்ராதி சப்தங்களை ஸாக்ஷாத் பகவத் வாசகங்களாக அநுஸந்தித்தும் ஸ்வதர்மாநுஷ்டாநம் பண்ணுமிடத்தில் விதிபலத்தாலே பரமைகாந்தித்வ விரோதம் இல்லை.

– ஆனால் மற்ற யாருக்கும் வசப்படுவதோ அல்லது கைங்கர்யம் செய்வதோ அல்லாமல், ஸர்வேச்வரனுக்கு மட்டுமே தான் அடிமை என்று தன்னை உணர்ந்து பரமைகாந்தியாக ஒருவன் இருக்கக்கூடும். அப்படிப்பட்ட ஒருவனுக்கு தன்னுடைய வர்ணாச்ரம தர்மங்களைச் செய்யும்போது மற்ற தேவதைகளின் தொடர்பு கொண்ட செயல்களைச் செய்வதும் (அக்னி, சூரியன் போன்ற தேவதைகள்), அவற்றை பக்தியோகத்தின் அங்கமாகக் கொள்ளுதலும் அவனுடைய தன்மைக்கு பொருத்தம் அற்றவையாக உள்ளன அல்லவோ? ஸர்வேச்வரனைத் தவிர மற்ற எந்த தேவதையின் தொடர்பும் கொள்ளாதவர்களுக்கு அல்லவோ பரமைகாந்தி என்னும் நிலை உண்டாகும்? என்று கேட்கலாம். இத்தகைய சந்தேகம் என்பது ஸ்ரீபாஷ்யம் போன்ற க்ரந்தங்களைப் பற்றிய தெளிவு பிறக்காத காரணத்தால் உண்டாகின்றன. எப்படி என்றால் – ஸ்ரீபாஷ்யத்தில் ப்ரதர்த்தந மது வித்யைகளைக் குறித்துக் கூறும் பகுதிகளில் முமுக்ஷு ஒருவன், இந்த்ரன் உள்ளிட்ட தேவர்களின் அந்தர்யாமியாகவே ஸர்வேச்வரன் உள்ளான் என்றும், ஸர்வேச்வரனின் சரீரமாகவே அந்தத் தேவதைகள் உள்ளன என்றும், இப்படியாக உள்ள ஸர்வேச்வரனை உபாஸிக்கவேண்டும் என்றும் தெளிவாக உரைத்தார். வித்யைகளின் அங்கமாக உள்ள வர்ணாச்ரம தர்மங்களை இயற்றும்போது அந்தந்த தேவதைகளைச் சரீரமாகக் கொண்டுள்ள பரமாத்மாவே ஆராதிக்கப்படுகிறான் என்றும் ஸ்ரீபாஷ்யத்தில் அருளிச்செய்தார். ஆனால் சுதந்திரமாக மற்ற தேவதைகளை அண்டினாலும், மற்ற பலன்களின் ஆசை கொண்டு தன்னுடைய நித்யநைமித்திக கர்மங்களைத் தவிர மற்ற கர்மங்களை இயற்றும்போது மற்ற தேவதைகளின் தொடர்பு உண்டானாலும் பரமைகாந்தி என்னும் தன்மைக்கு பாதகமே உண்டாகிறது. ஆனால் மற்ற பலன்களின் எந்தவிதமான ஆசையும் கொள்ளாமலும், மற்ற தேவதைகள் அனைத்தும் பரமாத்மாவுக்கு சரீரங்களாகவே உள்ளன என்ற எண்ணத்துடனும், அக்னி போன்ற பதங்கள் அவர்களைத் தனது சரீரமாகவே கொண்ட பரமாத்மாவையே குறிக்கின்றன என்ற எண்ணத்துடனும் தன்னுடைய நித்யநைமித்திக கர்மங்களை இயற்றுவதில் எந்தவிதமான தோஷமும் இல்லை. ப்ரஹ்மஸூத்ரம் (1-2-29) - ஸாக்ஷாதப்யவிரோதம் ஜைமிநி: - அக்னி என்னும் பதம் பரமாத்மா என்னும் சப்தத்தை உணர்த்துவதாகக் கொள்வதில் விரோதம் இல்லை என்று ஜைமிநி கருதுகிறார் – என்றபடி அக்னி, இந்த்ரன் போன்ற பதங்கள் எம்பெருமானையே குறிப்பதாக எண்ணியபடியும், இவ்விதமாகவே தன்னுடைய கர்மங்களை இயற்றுவதாலும் பரமைகாந்திக்கு எந்தவிதமான தோஷமும் உண்டாவதில்லை.