Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 21)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

பக்தியோகம் என்பது ஸ்வரூபத்திற்கு முரணானது என்னும் வாதத்திற்கான மறுப்பு

மூலம்– ஆனாலும், சேஷபூதனாகையாலே தன்னைத்தானே ரக்ஷித்துக் கொள்ளப் ப்ராப்தனுமன்றிக்கே அத்யந்தபரதந்த்ரனாகையாலே தன்னைத்தான் ரக்ஷித்துக் கொள்ளச் சக்தனுமன்றிக்கே இருக்கிற இவனுக்கு ஸ்வரக்ஷணார்த்தமாகக் கர்த்தவ்யமென்று ஓருபாயத்தை விதிக்கையும், அது இவனுக்கு ஸாத்யமாய் ஸாத்யோபாயமென்று பேர் பெறுகிறதென்று சொல்லுகையும் உபபந்நமோ? ஆனபின்பு பக்தியோகாதிகள் சேஷத்வாநுரூபங்களல்லாமையாலே ஸ்வரூபத்துக்கு அநிஷ்டாவஹங்கள் என்றும் அத்யந்த பாரதந்த்ர்ய விருத்தங்களாகையாலே அஸம்பாவிதங்கள் என்றும் சொல்லவொண்ணாதோவென்னில், இது ஸர்வமோக்ஷ ப்ரஸங்காதிகளாலே முன்பே பரிஹ்ருதம். இவன் செய்ததொரு வ்யாஜங்கொள்ளாதே முக்தனாக்கில் அநாதியாக முக்தனாகப் ப்ரஸங்கிக்கும். ஈச்வரன் கேவல ஸ்வாதந்த்ர்யத்தாலே நினைத்தபோது முக்தனாக்கில் வைஷம்ய நைர்குண்யாதி தோஷங்களும் வரும். மோக்ஷோபாய விதாயங்களான சாஸ்த்ரங்களுமெல்லாம் நிரர்த்தங்களுமாம். ஆகையால் இச்சேஷத்வத்தால் வகுத்த விஷயத்தைப் பற்றுகையில் ஔசித்யமும், உடையவன் உடைமையை ரக்ஷிக்கையில் ஔசித்யமுமுண்டாம். அத்யந்த பாரதந்த்ர்யத்தால் அவன் கொடுத்த ஸ்வாதந்த்ர்யத்தைச் சுமந்து அவனுக்கு அபிமதங்களான உபாயங்களை அநுஷ்டிக்கையும் பலம் பெறுகைக்கு அவன் கைபார்த்திருக்க வேண்டுகையும் ஸித்திக்கும். இச்சேஷத்வபாரதந்த்யங்களிரண்டும் பலதசையில் அவனுகந்த கைங்கர்யத்தை அவனிட்ட வழக்காக நடத்துகைக்கும் உறுப்பாம். இவையடியாக ஸ்வரக்ஷணார்த்த ஸ்வவ்யாபாரமாகாதென்பார்க்குத் தாங்கள் யதாசாஸ்த்ரம் பகவத் ப்ரீத்யாதிபலத்தைக் கோலி அநுஷ்டிக்கிற கைங்கர்யத்திலும், ஸாத்யமாக விதிக்கப்படுகிற ப்ரபத்தி தன்னிலும் ஸ்வரூபவிரோத புத்தியாலே அதிகாரமில்லையாம். வாக்யஜந்யமான ஸம்பந்த ஜ்ஞானாதிமாத்ரத்திற்காட்டில் அதிரிக்தமாக “சரணம் வ்ரஜ” என்று விதேயமாகையாலே ஸாத்யமாயிருக்கும் ப்ரபத்தி ஸ்வரூபமென்னுமிடம் முன்பே சொன்னோம். ஆகையால் சேஷபூதனுமாய்ப் பரதந்த்ரனுமான இவனுக்கு யதாதிகாரம் ஸ்வரக்ஷணார்த்த வ்யாபாரம் பண்ணக் குறையில்லை.

–இங்கு ஓர் ஆக்ஷேபம் எழலாம். ஜீவன் ஸர்வேச்வரனுக்காக மட்டுமே உள்ளவன் (சேஷபூதன்) என்பதால், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள எந்தவிதமான கடமையும் அவனுக்கு இல்லை; அவன் ஸர்வேச்வரனை மட்டுமே முற்றிலுமாக சார்ந்துள்ளவன் என்பதால் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள எந்தவிதமான சக்தியும் கொண்டவன் அல்லன். இப்படி உள்ளபோது இவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள ஓர் உபாயத்தை சாஸ்த்ரங்கள் விதிப்பதும், அத்தகைய உபாயம் இவனால் கைக்கொள்ளப்படுவதால் ஸாத்யோபாயம் எனப்படுவதும் எவ்விதம் பொருந்தும்? ஆகவே பக்தியோகங்கள் சேஷத்வமான ஸ்வரூபத்திற்கு ஏற்றது அல்ல என்பதால் அவை தீமை பயப்பவை என்றும், அவை ஸர்வேச்வரனுக்கு மட்டுமே வசப்பட்டு இருத்தல் என்னும் தன்மைக்கு விரோதமாக உள்ளதால் சேதனனுக்கு உண்டாகத் தகுதி அற்றவை என்றும் கூறலாம் அல்லவோ? இதற்கான சமாதானம் உரைக்கிறார். இதற்கான பதிலை நாம் ”அனைவருக்கும் மோக்ஷம்” என்னும் ப்ரகரணத்தில் உரைத்தோம். அதாவது, எந்தவிதமான உபாயமும் இல்லாமல் மோக்ஷம் அளித்தல் என்றால், அனைவருக்குமே மோக்ஷம் அளிப்பது என்றாகிவிடும். மேலும் எந்தவொரு உபாயமும் இல்லாமல் மோக்ஷம் அளித்தல் என்றால், “அவனுக்கு அநாதியாகவே மோக்ஷம் அளித்திருக்கலாம்” என்று சிலர் கூறக்கூடும். ஸர்வேச்வரன் எல்லையற்ற சுதந்திரம் கொண்டவன் என்பதால், அவன் எண்ணியபோது, தான் யாரை நினைக்கிறானோ அவனுக்கு மோக்ஷம் அளித்தல் என்றால், ஸர்வேச்வரன் பாரபக்ஷம் பார்ப்பவன் என்றும், கருணை இல்லாதவன் என்றும் கூறக்கூடும். மேலும், மோக்ஷத்திற்கான உபாயத்தை விதிக்கின்ற சாஸ்த்ரங்கள் அனைத்தும் பயனற்றுப் போய்விடும். இது தவிர ஜீவனுடைய சேஷத்வம் என்பது அவனுடைய எஜமானனாகிய ஸர்வேச்வரனைப் பற்றுவதற்கும், எஜமானனாக உள்ள ஸர்வேச்வரன் ஜீவனைத் தனது உடைமையாகக் கொண்டு ரக்ஷிப்பதற்கும் ஓர் உபாயத்தைக் கைக்கொள்ளுதல் என்பது பொருத்தமாகவே உள்ளது. மேலும் ஓர் உபாயம் என்பது – இப்படியாக ஸர்வேச்வரனுக்கு வசப்பட்டு இருத்தலும், ஸர்வேச்வரன் தனக்கு அளித்த ஓரளவு சுதந்திரத்தைக் கொண்டு அவனுக்கு மகிழ்வை அளிப்பதான உபாயத்தைக் கைக்கொள்ளவும், அதன் பலனாக ஏதேனும் அடைவதற்கு ஸர்வேச்வரனின் திருவுள்ளத்தை எதிர்பார்த்தபடி இருப்பதற்கும் – ஏற்றதாகவே உள்ளது. இப்படியாக உள்ள அடிமைத்தனத்துடன் இருத்தல், அவனுக்கு மட்டுமே வசப்பட்டு இருத்தல் என்னும் நிலைகள், முக்தி அடையும்போது அவனுக்கு மகிழ்வை அளிக்கும் விதமாக இருக்கின்ற கைங்கர்யங்களை, அவன் நியமிக்கின்றதாகவே கொண்டு செய்வதற்குக் காரணமாகின்றன. இத்தகைய சேஷத்வம் மற்றும் பாரதந்த்ர்யம் ஆகியவற்றைக் காரணம் காண்பித்து, சேதநனுக்குத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் செயல்கள் ஏதும் இருத்தல் கூடாது என்று சிலர் கூறலாம்; இப்படிப்பட்டவர்களும் ஸர்வேச்வரனின் உகப்புக்காகச் செய்கின்ற சாஸ்த்ரங்களுக்கு உட்பட்ட கைங்கர்யங்கள் மற்றும் ப்ரபத்தி ஆகியவை ஆத்மாவிச்ன் ஸ்வரூபத்திற்கு விரோதம் என்பதால் கைவிடும்படியே ஆகிவிடுகிறது. சேதநனின் முயற்சியாக உள்ள ப்ரபத்தி என்பது சாஸ்த்ரங்களால் உண்டாகும் ஈச்வரன்-ஜீவனுக்குள்ள ஸம்பந்தம் என்னும் ஞானத்தின் தொடர்பு காரணமாக எழுவதைக் காட்டிலும், “சரணம் வ்ரஜ – சரணம் அடைவாய்” என்னும் வாக்கியத்தில் விதிக்கப்படுவதால் கைக்கொள்வதற்கு ஏற்றது என்று முன்பே கூறினோம். ஆகவே ஸர்வேச்வரனுக்கு அனைத்துவிதமான அடிமைத்தனத்தைச் செய்தபடியும், அவனுக்கு மட்டுமே வசப்பட்டு நின்றபடியும் உள்ள சேதநனுக்கு தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளுவதற்கான பக்தியோகம் போன்றவை அவனுடைய ஆத்மஸ்வரூபத்திற்கு விரோதம் இல்லை என்பதால் அவற்றைக் கைக்கொள்வதில் தடையில்லை.