Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 19)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
பக்தியோகம் என்பது ஸ்வரூபத்திற்கு முரணானது என்னும் வாதத்திற்கான மறுப்பு
மூலம்– ஆனாலும், ஆத்மா தேஹாதிவிலக்ஷணனாகையாலே ஸ்வரூபத்தில் வர்ணாச்ரமாதிகளில்லையென்று தெளிந்தவனுக்கு ”ப்ராஹ்மணோஹம்”, “க்ஷத்ரியோஹம்” என்றாற்போலே வரும் அபிமாநங்களடியாகக் கர்த்தவ்யங்களான வர்ணாச்ரமாதி தர்மங்களும், அவற்றோடே துவக்குண்டான உபாயாந்தரங்களும் அநுஷ்டேயங்களல்லாமையாலே இவ்வர்ணாச்ரமாதி நிபந்தங்களான தர்மங்கள், ஸ்வரூப விருத்தங்களென்னக் குறையென் என்னில், இதுவும் அநுபபந்நம். எங்ஙனேயென்னில் – ஸ்வரூபத்தில் கர்மவிசேஷங்களடியாக ப்ராஹ்மணத்வாதிகளில்லையென்று தெளிந்தானே ஆகிலும் கர்மவிசேஷங்களடியாக ப்ராஹ்மணத்வாதி விசிஷ்ட சரீரத்தோடே ஸம்பத்தனாயிருக்கையாலே அச்சரீர ஸம்பந்தமே அடியாக வருகிற க்ஷுத்பிபாஸாதிகளுக்குப் பரிஹாரம் பண்ணுகிற கணக்கிலே அச்சரீரம் விடுமளவும் அவ்வோ வர்ணாச்ரமாதிகளுக்கும் தன் சக்திக்கும் அநுரூபமாக அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்டப்ராப்திகளைப் பற்றச் சாஸ்த்ரங்கள் விதித்த தர்மங்களை விடவொண்ணாது. ஆகையால் இத்தர்மங்களை தேஹாத்மவிவேகமடியாக ஸ்வரூப விருத்தங்களாக்கி இவற்றுக்குத் த்யாஜ்யதை சொல்லவொண்ணாது. தேஹாத்ம விவேகமுடையவனுக்கே பாரலௌகிக போகஸாதநமான தர்மத்தில் அதிகாரமாகையால் இத்தர்மங்களுடைய அநுஷ்டானத்துக்கு ஸ்வரூபத்தில் ப்ராஹ்மண்யாதி ப்ரமம் அதிகாரமன்று; ப்ராஹ்மண்யாதி விசிஷ்ட சரீரஸம்பந்தமே அதிகாரம். ஆகையால் ஸர்வ தர்மாநுஷ்டாநத்துக்கும் உபயுக்தமான ப்ரக்ருத்யாத்மவிவேகமடியாக உபாஸநாதிகளுக்கு விரோதம் கண்டிலோம். உபாஸநாதிகள் அஹங்காராதிகர்ப்பங்கள் என்னுமிடம் சாஸ்த்ரமிசையாதிருக்கச் செய்தே ஆரோபித்தார்களத்தனை.
– சரீரத்தைத் காட்டிலும் ஆத்மா வேறுபட்டது என்பதால், ஆத்ம ஸ்வரூபத்தைப் பொறுத்தவரையில் வர்ணாச்ரம பேதங்கள் இல்லையென்று சிலர் தெளியக்கூடும். இவர்களுக்கு “நான் அந்தணன்”, “நான் க்ஷத்ரியன்” என்ற மயக்கம் காரணமாக ஏற்படுகின்ற, அந்தந்த வர்ணங்களுக்கு உரிய தர்மங்களும், அவற்றுடன் கூடியதான மற்ற உபாயங்களும் கைக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. இத்தகைய வர்ணாச்ரமங்களின் காரணமாக உண்டான தர்மங்கள் அனைத்தும் ஆத்ம ஸ்வரூபத்திற்கு விரோதமானவை – இப்படியாக ஒரு சிலர் வாதாடலாம். இது ஏற்க இயலாத வாதமாகும். ஏன்? ஆத்ம ஸ்வரூபத்தைப் பொறுத்தவரையில் ப்ராஹ்மணத்தன்மை போன்றவை கிடையாது என்றபோதிலும், ஒருவன் தன்னுடைய பூர்வ கர்மங்களின் காரணமாக உண்டான ப்ராஹ்மணத்தன்மையுடன் கூடிய சரீரத்தின் தொடர்பை இப்போது அடைந்துள்ளான்; அந்தச் சரீரத்துடன் தொடர்பு கொண்டுள்ளதால் ஏற்படுகின்ற பசி, தாகம் போன்றவற்றை அவன் போக்கிக் கொள்ள முயல்கிறான் அல்லவோ? அதே போன்று அந்தச் சரீரத்தை விடுகின்ற காலம்வரையில் அவன் வர்ணாச்ரம தர்மங்களுக்கு ஏற்றபடி சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டவற்றைச் செய்தபடி இருத்தல்வேண்டும். தனது விருப்பங்கள் நிறைவேறவும் விருப்பம், அற்றவை நடைபெறாமல் இருப்பதற்கும், தன்னுடைய சக்திக்கு ஏற்றபடியாக, இவற்றைச் செய்யவேண்டும். இவைகளை விடுதல் கூடாது. ஆகவே சரீரத்திற்கும் ஆத்மாவிற்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்தவன் என்று கொண்டு, அந்த விவேகத்தின் அடிப்படையில், வர்ணாச்ரம தர்மங்கள் ஆத்மஸ்வரூபத்திற்கு விரோதமானவை என்று அவற்றைக் கைவிடலாகாது. இப்படிப்பட்ட சரீரம் மற்றும் ஆத்மா ஆகியவற்றின் விவேகம் கொண்ட ஒருவனுக்கு மட்டுமே இது போன்ற தர்மங்களில் அதிகாரம் உண்டு; ஆகவே இது போன்ற வர்ணாச்ரம தர்மங்களைக் கைக்கொள்ளுதல் என்பது ஆத்மஸ்வரூபத்தில் ப்ராஹ்மணத்தன்மை போன்றவை உள்ளது என்ற மயக்கத்தின் அடிப்படையில் வருவதால் அல்ல, ப்ராஹ்மணன் உள்ளிட்ட சரீரத்தின் தொடர்பு காரணமாக உண்டான அதிகாரத்தாலேயே ஆகும்.ஆகவே அவரவர்களின் வர்ணாச்ரம தர்மங்களைச் செய்தல் என்பதற்கும், சரீரம் மற்றும் ஆத்மா ஆகியவற்றின் விவேகம் என்பதற்கும் எந்தவிதமான விரோதமும் காண இயலவில்லை. உபாஸநங்களில் அஹங்காரம் கூடியே உள்ளது என்பதை சாஸ்த்ரங்கள் ஒப்புக்கொள்ளாதபோதிலும், சிலர் இதனை இவ்விதம் உள்ளதாகவே கூறுகின்றனர்.