Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 18)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

பக்தியோகம் என்பது ஸ்வரூபத்திற்கு முரணானது என்னும் வாதத்திற்கான மறுப்பு

மூலம்– மோக்ஷப்ரதிகூலங்களான ராகாத்யுபாதிகளாலே வந்த காம்யநிஷித்தங்கள் போலே பந்தகங்களல்லாமையாலும் மோக்ஷார்த்தி தனக்கே விதிக்கையாலும் உபாஸநாதிகளுக்குச் சாஸ்த்ர முகத்தாலே அநர்த்தாவஹத்வரூபமான ஸ்வரூப விரோதம் சொல்லவொண்ணாது. ஆகையால் ஆத்மஸ்வரூபத்தைப் பற்ற உபாஸநாதிகளுக்கு நாசகத்வ அஸம்பாவிதத்வ அநர்த்தாவஹத்வங்களில்லாமையாலே ஒருபடியாலும் ஸ்வரூபவிரோதம் ப்ரஸங்கிக்கவில்லை.

– மோக்ஷத்தைத் தடுக்கவல்லதும், ஆசை உள்ளிட்ட பலவற்றின் அடிப்படையில் அமைந்ததாகவும் உள்ளதாகிய பலனை விரும்பிச் செய்கின்ற காம்ய கர்மங்கள் போன்றோ, வேதங்களால் தடுக்கப்பட்ட கர்மங்கள் போன்றோ பக்தியோகம் என்பது கிடையாது; அவற்றைப் போன்று பக்தியோகமானது ஸம்ஸாரபந்தத்தை அளிப்பதில்லை. இத்தகைய உபாஸனம் என்பது மோக்ஷத்தை விரும்பும் ஒருவனுக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. ஆக, எந்த வழியிலும் பக்தியோகம் என்னும் உபாஸனம் ஆத்மஸ்வரூபத்திற்கு விரோதம் என்று கூற இயலாது. ஆகவே உபாஸனம் என்பது எவ்விதத்திலும் ஆத்மஸ்வரூபத்திற்கு நாசம் விளைவிப்பதாகவோ, செய்வதற்கு அரிதாகவோ, தகாத பலன்களை அளிப்பதாகவோ இல்லை. எனவே உபாஸனை மூலம் எப்போதும் ஆத்மஸ்வரூபத்திற்கு நாசம் உண்டாவதில்லை.