Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 17)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
பக்தியோகம் என்பது ஸ்வரூபத்திற்கு முரணானது என்னும் வாதத்திற்கான மறுப்பு
மூலம்–இப்படி யதாவிகாரம் சாஸ்த்ரம் விதித்தவற்றிலும் உபாஸநாதிகள் ஸ்வரூப விருத்தங்களென்று சிலர் சொல்லுவார்கள். இதுவும் ப்ரபத்தியை ஸ்துதிக்கைக்காக அதிவாதம் பண்ணினார்களாமித்தனை. எங்ஙனேயென்னில் – (1) நித்யமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு இவை நாசகங்களாய்க் கொண்டு ஸ்வரூப விருத்தங்கள் என்னவொண்ணாது. (2) ப்ரபத்த்யநுஷ்டாநத்திலும் கைங்கர்யத்திலும் போலே பக்த்யாதிகளிலும் – கர்த்தா சாஸ்த்ரார்த்தவத்த்வாத், பராத்து தச்ச்ருதே: - என்கிறபடியே பகவததீந கர்த்ருத்வம் உண்டாகையாலும், ஆத்ம ஸ்வரூபம் ஆத்யந்த நிர்வ்யாபாரமென்னும்போது ஸத்த்வ லக்ஷணமான அர்த்தக்ரியாகாரித்வம் இல்லாமையாலே துச்சத்வம் ப்ரஸங்கிக்கையாலும், ஜ்ஞாந சிகீர்ஷணா ப்ரயத்ந ஆச்ரயத்வரூபமான கர்த்ருத்வமில்லையாக்கி ஆத்மாவுக்கு ஸந்நிதிமாத்ரமே வ்யாபாரமென்னில் போக்த்ருத்வாதிகளுமின்றிக்கே இவனுக்கு ஸம்ஸாரமும் மித்யாவாய் மோக்ஷோபாய நைரபேக்ஷ்யாதி ப்ரஸங்கம் வருகையாலும், ஸாங்க்யாதிகள் சொல்லுமாப்போலே ஸ்வரூபத்தில் கர்த்ருத்வமில்லாமையாலே உபாஸநாதிகள் ஸ்வரூப விருத்தங்கள் என்று சொல்லவுமொண்ணாது. அசேஷ்டமாநமாஸீநம் ஸ்ரீ: கஞ்சிதுபாதிஷ்டதி கர்மீ கர்மாநுஸ்ருத்யாந்யோ ந ப்ராச்யமதிகச்சதி என்றதுவும் சாஸ்த்ரசோதிதோபாயங்களினுடைய நைரர்த்தக்யம் சொன்னபடியன்று. பூர்வாநுஷ்டித கர்மவிசேஷங்களுடைய பலவிசேஷம் சொன்னபடியத்தனை.
– சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட உபாயங்களில், உபாஸனைகள் என்பதும் ஜீவனுடைய ஸ்வரூபத்திற்கு முரணானதே என்று சிலர் கூறுவார்கள். இது போன்று உரைத்தல் என்பது ப்ரபத்தியைப் புகழ்வதற்காக என்றே கொள்ளப்படவேண்டும். எப்படி? (1) இது போன்ற உபாஸனங்கள் ஆத்மஸ்வரூபத்தை அழித்துவிடும் என்று கூற இயலாது, ஏன் என்றால் ஆத்மா என்பது நித்யமானது ஆகும். (2) ஸாங்க்யர்கள் கூறுவது போன்று ஆத்மாவிற்கு இயல்பாகவே செயலாற்றும் தன்மை கிடையாது என்பதால் உபாஸனங்கள் போன்றவற்றைச் செய்ய இயலாது என்று கூறுவது சரியல்ல. ஏன்? ப்ரபத்தியைக் கைக்கொள்வது, ஸர்வேச்வரனுக்கான கைங்கர்யத்தில் ஈடுபடுவது முதலான செயல்கள் போன்று, ஸர்வேச்வரனின் கட்டளைக்கு ஏற்ப செயலாற்றும் திறன் ஆத்மாவுக்கு உண்டு (சுதந்திரமாகச் செயலாற்றும் தன்மை மட்டுமே கிடையாது என்று கொள்க). இதனை ப்ரஹ்மஸூத்ரம் (2-3-33) - கர்த்தா சாஸ்த்ரார்த்தவத்த்வாத்– ஜீவன் செயல்களுடன் கூடியவன், சாஸ்த்ரங்கள் “இதனைச் செய், செய்யாதே” என்று கூறுவதால் என்றும், ப்ரஹ்மஸூத்ரம் (2-3-40) - பராத்து தச்ச்ருதே: - ஜீவனின் செயல் புரிதல் என்பது ஸர்வேச்வரனுக்கு அடங்கியே ஆகும் – என்றும் கூறியது காண்க. ஆத்மா எப்போதுமே செயலாற்ற இயலாது என்று கூறினால் – குறிப்பிட்ட செயல்களைச் செய்வதால் மட்டுமே ஒரு வஸ்துவானது நிலைத்து இருக்கமுடியும் என்னும் கருத்தின் அடிப்படையில், ஆத்மாவானது இல்லாத ஒரு வஸ்து என்றே ஆகிவிடும். ஆத்மா என்பது எவ்வித ஞானமும் இல்லாமல், செயல் புரியும் ஆசையும் இல்லாமல், செயல் புரிவதற்கான எந்தவிதமான முயற்சியும் எடுக்கவேண்டிய அவசியமும் இல்லாமல், வெறுமனே உள்ளது என்று கூறினால் – அத்தகைய ஆத்மா எவ்வித இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவிக்கத் தகுதி அற்றது என்றாகிவிடும்; இவ்விதம் கொண்டால், ஸம்ஸாரத்தில் ஜீவன் சிக்குவது என்பது பொய் என்றும், ஸம்ஸாரமே மாயை என்றும், மோக்ஷம் அளிக்கக்கூடிய உபாயங்கள் ஏதும் அவசியம் இல்லை என்றும் ஆகிறது. மேலும், மஹாபாரதம் சாந்திபர்வம் (339-15) - அசேஷ்டமாநமாஸீநம் ஸ்ரீ: கஞ்சிதுபாதிஷ்டதி கர்மீ கர்மாநுஸ்ருத்யாந்யோ ந ப்ராச்யமதிகச்சதி – ஏதும் செய்யாமல் வெறுமனே அமர்ந்திருக்கும் ஒருவனிடம் மஹாலக்ஷ்மி தானாகவே வருகிறாள். தன்னுடைய உடலைக் காப்பாற்றும் பொருட்டு செயல்களைச் செய்து கொண்டிருப்பவன், தனது பூர்வ கர்மவினை காரணமாக உணவைக் கூட அடைவதில்லை – என்றது காண்க; இந்த ச்லோகத்தினைக் கருத்தில் கொண்டு சாஸ்த்ரங்களில் கூறப்படும் உபாயங்கள் பயன் அற்றவை என்று கொள்ளக்கூடாது; இந்த ச்லோகமானது முற்பிறவியில் செய்த ஒரு சில கர்மங்கள் இப்போது நல்ல பலனை அளிக்கின்றன என்பதையே கூறுகிறது.